TNPSC Thervupettagam

பொருளாதார நிபுணர்களும் உண்மை போன்ற தகவல்களும்

March 1 , 2024 144 days 249 0
  • கடந்த சில ஆண்டுகளாக, வட இந்தியாவின் ஹரியாணா, பஞ்சாப், மேற்கு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருக்கும் உழவர்கள், ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். 2020ஆம் ஆண்டில் நடந்த போராட்டம், ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகள் நடந்த அந்த நீண்ட போராட்டத்தின் இறுதியில் மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன.
  • இந்தியாவில் 90% அதிகமான உழவர்கள் சிறு, குறு உழவர்கள்தான். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பெரும் உழவர்கள் இருந்தாலும், அங்குமே பெரும்பான்மை சிறு, குறு உழவர்கள்தான். அந்த மாநிலங்களின் பொருளாதாரம் ஒன்றிய அரசின் கொள்முதலைப் பெரிதும் நம்பியுள்ளதால், அதைக் குலைக்கும் எந்த நடவடிக்கைக்கும் அங்கிருந்து எதிர்ப்புக் கிளம்புவது இயல்பு.
  • டிராக்டர்கள், பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் சாதாரணம். அவர்களுக்கு டெல்லி மிக அருகில் என்பதால், அவர்களால் சில மணி நேரப் பயணத்தில் டெல்லியை அடைந்துவிட முடிகிறது. நீண்ட போராட்டத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை, மற்ற தேவைகளை எடுத்துக்கொண்டுவந்து நீண்ட போராட்டத்தை அவர்களால் நடத்த முடிகிறது.

மீண்டும் போராட்டம்

  • சமீபத்தில் அதே உழவர்கள், 23 வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்சக் கொள்முதல் விலையில், சட்டபூர்வமான கொள்முதல் வேண்டும் எனப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள்.
  • இந்த இரண்டு போராட்டங்களின்போதும், அகில இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்ப அரசின் தரப்பை முன்வைத்தன. போராடும் உழவர்கள் வெறும் இடைத்தரகர்கள், அவர்கள் பெரும் விவசாயிகள், பணக்காரர்கள், குறைந்தபட்சக் கொள்முதல் வெறும் 6% உழவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது என்றெல்லாம் சொல்லாடல்கள் முன்வைக்கப்பட்டன.
  • இப்படிப்பட்ட சொல்லாடல்களுக்குப் பின்னால், சில பொருளாதார அறிஞர்களின் கட்டுரைகள், நேர்காணல்கள் உள்ளன என்பது பொதுவெளியில் அதிகம் பேசப்படாத ஒன்று. குறைந்தபட்சக் கொள்முதல் விலையைச் சட்டபூர்வமாக்கும் கோரிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும், கட்டுரைகளை எழுதும் அஷோக் குலாட்டி அவர்களுள் ஒருவர்.
  • குறைந்தபட்சக் கொள்முதல் விலை 6% உழவர்களுக்கு மட்டுமே பலனளிக்கிறது. அது பெரும் உழவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது, இந்தக் கொள்முதல் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது என்னும் கருத்துக்கள், அவர் போன்ற சில பொருளாதார அறிஞர்கள் எழுதும் கட்டுரைகள், நேர்காணல்கள் வழியே உருவானவை.
  • இந்த முனைப்புகளுக்கு எதிராக, ரீத்திகா கேரா, ப்ரங்கூர் குப்தா மற்றும் சுதா நாராயணன் இணைந்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்கள்.

என்ன சொல்கிறது இந்தக் கட்டுரை?

  • இந்தக் கட்டுரை, உண்மை போன்ற தகவல் (factoid) என்னும் ஒரு புதிய கருதுகோளை அறிமுகம் செய்கிறது. உண்மை போன்ற தகவல் (factoid) என்பதன் வரையறை என்னவென்றால், நம்ப முடியாத ஒரு தகவலை (unreliable information) முன்வைத்து, அதைத் திரும்பத் திரும்பச் சொல்வதனால், அது உண்மையாகிப்போகும் (fact) ஒன்று என்பதே.
  • முதல் புள்ளியான 6% உழவர்களுக்கு மட்டுமே அரசுக் கொள்முதல் பயனளிக்கிறது என்னும் ‘உண்மை போன்ற தகவல்’ – இந்தத் தகவல் 2012-13 ஆண்டுக்கான தேசிய சாம்பிள் சர்வே (National Sample Survey) என்னும் அறிக்கையில் இருந்தது எடுக்கப்பட்டது. இது 11 ஆண்டுகளுக்கு முன்பான தகவல். அதற்குப் பின்னர் இந்த சர்வே எடுக்கப்படவே இல்லை.
  • அந்த சர்வே அறிக்கையிலும் 6% உழவர்களிடம் இருந்தது கொள்முதல் எனச் சொல்லப்படவில்லை. அரிசி 14% உழவர்களிடம் இருந்தும், கோதுமை 16% உழவர்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது என்பதே அது சொல்லும் உண்மை என்பதைக் கட்டுரையாளர்கள் முதலில் சுட்டுகிறார்கள்
  • இதில் 1997ஆம் ஆண்டு முதல், இந்திய உணவுக் கழகம் தனது கொள்முதலை பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களைத் தாண்டி மற்ற மாநிலங்களிலும் தொடங்கியது. 2021ஆம் ஆண்டு வாக்கில் இந்தக் கொள்முதல் திட்டம் பெருமளவு பஞ்சாபைத் தாண்டிப்போய்விட்டது என்பதை உணவுக் கழகத்தின் தரவுகளை முன்வைத்து கட்டுரை மேலும் விளக்குகிறது. 2021ஆம் ஆண்டில், மத்திய பிரதேச மாநிலத்தில், பஞ்சாபை விட அதிகமாக கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேசத்தில் 33% உழவர்களும், பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் முறையே 22% மற்றும் 18% உழவர்களும் உணவுக் கொள்முதலில் பங்கெடுத்திருக்கிறார்கள். எனவே, உணவுக் கொள்முதல் பஞ்சாப் - ஹரியானா மாநில உழவர்களுக்கு மட்டுமே பயன் தருகிறது என்பது உண்மையைப் போலத் தொனிக்கும் தகவல் என்பதைக் கட்டுரை சந்தேகமின்றி நிறுவுகிறது.
  • நெல் கொள்முதல் மூலம் பயனடைந்தவர்களில், பெரும் உழவர்கள் 1% பேர் (> 10 ஹெக்டேர் நிலம்), சிறு - குறு உழவர்கள் 70% பேர் (< 2 ஹெக்டேர்), மீதியுள்ள 29% பேர், 2 - 5 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் உழவர்கள். அதேபோல, கோதுமையில் பெரும் உழவர்கள் 3%, சிறு - குறு உழவர்கள் 56% பேர். மீதியுள்ள 42% நெல் 2 - 5 ஹெக்டேர் வைத்திருக்கும் உழவர்கள்.
  • சராசரி நில அலகு அதிகமுள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில்கூட, முறையே 38% மற்றும் 58% சிறு - குறு உழவர்கள் அரசுக் கொள்முதலின் காரணமாகப் பயனடைந்து இருக்கிறார்கள் என அரசின் தரவுகள் வழியே கட்டுரை எடுத்துவைக்கிறது.

உண்மை போன்ற தகவல்கள்

  • மூன்றாவது உண்மை போன்ற தரவு என்பது, இந்தக் குறைந்தபட்சக் கொள்முதல் இருப்பதால், உழவர்கள் வெறும் கோதுமையையும், நெல்லையும் மட்டுமே பயிர் செய்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர் வளம் சூறையாடப்படுகிறது என்பது.
  • பஞ்சாப் மாநிலத்தில் 21 - 37% உழவர்கள், நெல்லையும், கோதுமையையும் பயிரிடவில்லை. அகில இந்திய அளவில் 58% பேர் நெல்லைப் பயிரிடவில்லை, 48% பேர் கோதுமை பயிரிடவில்லை என்னும் தரவையும் கட்டுரை முன்வைத்து, குறைந்தபட்சக் கொள்முதல் விலை கொடுப்பதால், உழவர்கள் நெல்லையும், கோதுமையையும் மட்டுமே பயிரிடுகிறார்கள் என்னும் ‘உண்மை’ போன்ற தகவலை உடைக்கிறது.
  • பசுமைப் புரட்சியின் ஒரு பகுதியாக கோதுமைக்கும் நெல்லுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது உண்மை. இன்று மற்ற தானியங்களும் பயிர் செய்யப்பட வேண்டும் என்பதும் சரியான வாதமே. அப்படி மற்ற பயிர்களையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றால், அவைகளுக்கும் குறைந்தபட்சக் கொள்முதல் இயக்கப்பட வேண்டுமே தவிர, இப்போது கொள்முதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதாக அரசின் அணுகுமுறை இருக்கக் கூடாது.
  • போராடும் உழவர்களின் உண்மையான பிரச்சினைகளும் பொது நலக் கொள்கைகளும் (Public Policy), உண்மையான தரவுகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, உண்மைபோலத் தோன்றும் தகவல்களின் (factoids) அடிப்படையில் விவாதிக்கப்படக் கூடாது என்பதை ரீத்திகா கேரா, ப்ரங்கூர் குப்தா மற்றும் சுதா நாராயணன் எழுதிய கட்டுரை மிகவும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

 பொருளாதார நிபுணர்கள் பேசப்படுவது ஏன்?

  • பொருளாதார நிபுணர்கள் ஏன் உண்மை போன்ற தகவல்களை உருவாக்குவதன் பின்ணணியில் இருக்கிறார்கள்?
  • பாஜக அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்கள், வேளாண் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டன. ஆனால், அதைச் செய்ய வேண்டுமானால், ஏற்கெனவே உழவர்களுக்கு ஓரளவு சாதகமாக இருக்கும் அமைப்புகளை உடைக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் என்பது அவற்றுள் மிக முக்கியமானது.
  • குறைந்தபட்ச விலையில் கொள்முதல் திட்டத்தை உடைத்துவிட்டால், வெளிச் சந்தையில் பெரும் விலை வீழ்ச்சி ஏற்படும் என உழவர்கள் பயப்படுகிறார்கள். அதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையில் பஞ்சாப் மாநிலத்தில் அரசு நெல்லை 21 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யும்போது, அந்தக் கொள்முதல் இல்லாத பிஹார் மாநிலத்தில் நெல் 10 - 12 ரூபாய்க்கு வெளிச் சந்தையில் விற்கிறது. எனவேதான், 60 ஆண்டுகளாக இந்த அரசுக் கொள்முதலால் பயன்பெற்றுவரும் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தர பிரதேச விவசாயிகள் 1.5 ஆண்டுகாலம் போராடினார்கள்.
  • இந்தப் போராட்டத்தின் அடிப்படைக் காரணம் உழவர் நலனுக்கும், தனியார் முதலீட்டுத் திட்டத்துக்கும் உள்ள முரண்கள்தான். உழவர் நலனை ஒடுக்காமல், தனியார் லாபம் பார்க்க முடியாது.
  • எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலையில் நடக்கும் கொள்முதலில் உள்ள போதாமைகளை பூதாகாரமாக்கி, உழவர்களைப் பணக்காரர்கள், காலிஸ்தானிகள், இடைத்தரகர்கள் என வில்லன்களைப் போலச் சித்தரித்து அரசு நடத்திவரும் கொள்முதல் திட்டத்தை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்திவிட்டால், தனியார்மயமாக்கும் திட்டம் எளிதாக நிறைவேறிவிடும்.
  • கொள்முதலைத் தனியார்மயமாக்கும் சட்டங்களைக் கொண்டுவரும் செயல்திட்டத்துக்கு ஒரு அறிவுசார் அடிப்படையைக் கொடுக்க சந்தைப் பொருளாதார ஆதரவு என்னும் பெயரில் அறிஞர்கள் எழுதும் கட்டுரைகள், நேர்காணல்கள் உதவுகின்றன.
  • இன்று உழவர் போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துவருகின்றன. ஐரோப்பிய நாடுகள் தங்கள் உழவர்களுக்குப் பெரும் அளவில் மானியங்கள் கொடுத்தும், ஐரோப்பிய நாடுகளில் ஏன் உழவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை அறிந்தால், வேளாண்மையின் லாபமின்மையை நாம் உணர முடியும். இந்தியாவின் 80% உழவர்கள் நஷ்டத்திலும், கடன்பட்டும் இருக்கிறார்கள் என்பது பல ஆய்வறிக்கைகள் சொல்லும் தகவல்.
  • மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, உழவர்கள் நலனுக்கு எதிராக, தனியார்மயத்துக்கு அடியாள் வேலை பார்க்கும் பொருளாதார அறிஞர்கள் நம் சமூகத்தின் சாபக்கேடு.

தமிழ்நாடு விதிவிலக்கு

  • வேளாண்மையின் இந்தப் பிரச்சினை ஏன் தமிழ்நாட்டில் பிரதிபலிக்கவில்லை எனக் கேட்கலாம். தமிழ்நாடு தொழில்மயமாகிவிட்ட மாநிலம். இங்கே வேளாண்மையை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள் 5%க்கும் குறைவு.
  • மேலும் இங்கு தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகம் நெல் கொள்முதலைச் செய்கிறது. அது இல்லாத இடங்களில், பொதுச் சந்தையில் நெல் விலை குறைந்தபட்சக் கொள்முதல் விலையைவிடக் குறைவாகத்தான் விற்கிறது. (இந்த ஆண்டு, நீர்ப் பற்றாக்குறையின் விளைவாக நெல் விளைச்சல் குறைவு. எனவே, பொதுச் சந்தையில் விலை அதிகமாக இருக்கிறது. எல்லா ஆண்டுகளிலும் இந்த நிலை இருப்பதில்லை).
  • ஆனால், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள், வேளாண்மையைப் பெரிதும் நம்பியுள்ள மாநிலங்கள். அங்கே இந்தக் குறைந்தபட்ச விலைக் கொள்முதல், உழவர்களின் உயிர்நாடி.
  • உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் சத்துணவுத் திட்டத்தை நிறுத்தினால் என்ன எழுச்சி ஏற்படுமோ, அதுதான் ஹரியாணா - பஞ்சாப் மாநிலங்களில் கொள்முதலுக்கு ஆபத்துவரும் சட்டங்களைக் கொண்டுவரும்போது ஏற்படுகிறது.

நன்றி: அருஞ்சொல் (01 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories