TNPSC Thervupettagam

போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது

April 26 , 2023 626 days 373 0
  • போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாகச் செயல்பட்டுவரும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்களை நியமனம் செய்வதற்கான பணிகளில் இறங்கியிருப்பது, அரசுப் போக்குவரத்துத் துறை சிறிது சிறிதாகத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தை எழுப்பியிருக்கிறது.
  • மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியுடனும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் போக்குவரத்துக் கழகங்களுக்கு நேரடித் தொடர்பு உள்ளது. ‘சாலைகள் இருக்கும்வரை பேருந்துகள் இயக்கம்’ என்கிற உலகளாவிய இலக்கைத் தமிழகப் போக்குவரத்துக் கழகங்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
  • இது போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். தவிர இது, ‘ஒப்பந்த முறை ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்ட’த்துக்கு எதிரானதும்கூட.
  • அதேபோல் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க ஆலோசனை வழங்குவதற்கான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
  • இதற்கு சி.ஐ.டி.யு., தொ.மு.ச., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, ‘போக்குவரத்துக் கழகத்தைத் தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகளைத் தனியார்மயமாக்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை எனத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் உறுதியளித்தார். ஆனால், நிதர்சனம் வேறாக இருக்கிறது.
  • ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமிக்கும் புதிய திட்டம், ‘அரசுப் போக்குவரத்துக் கழகமும் தனியாரும் இணைந்து செயலாற்றும் சேவைத் திட்டம்’ என்கிறது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை. அதாவது, ‘பேருந்தும் அதன் ஓட்டுநரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். பேருந்து இயக்கப்படும் வழித்தடமும் அதன் நடத்துநர்களும் வசூலாகும் கட்டணமும் அரசுடையது’ என்பதுதான் அதிகாரிகளின் விளக்கம்.
  • மாணவர்கள், பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினரின் கட்டணமில்லாப் பயணத் திட்டம் இந்தத் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் அத்தனை சாத்தியங்களும் இந்தத் திட்டத்தில் உண்டு என்பதுபோலச் சொல்லப்பட்டாலும் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நுழைவு என்பது வரவேற்கத்தகுந்தது அல்ல.
  • தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளையால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்துதான் ‘சாலைப் போக்குவரத்துச் சட்டம்’ உருவாக்கப்பட்டது. 1967இல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தபோதுதான் மாநில அரசுப் பேருந்து அரசுடைமைக் கொள்கை உருவாக்கப்பட்டது. பின்னர், 1972இல் கருணாநிதி தலைமையிலான ஆட்சியின்போது அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.
  • கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறையில் தனியார் நுழைவை எதிர்த்துக் களமாடிய திமுக, தற்போது அதே திட்டத்தை அறிமுகப்படுத்துவது மிகப் பெரிய முரண். அரசுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு இது நல்லதல்ல. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகப் பயன்பெறும் போக்குவரத்துத் துறையில் படிப்படியாகத் தனியாரைப் புகுத்துவது, ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது போன்றவற்றை அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும்!

நன்றி: தி இந்து (26 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories