- போக்குவரத்து விதிகளை மீறுவதன் இறுதி விளைவு விபத்துதான். சாலைகளில் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களால் அவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் உயிராபத்து ஏற்படுகிறது. இவற்றைப் பற்றித் தெரிந்திருந்தாலும் விதிமீறல்கள் தங்கள் உரிமை என்று நினைப்பவர்களே இங்கு அதிகம். இதில் எல்லாத் தரப்பினரும் அடக்கம். சிவப்பு விளக்கின்போது முன்னால் வாகனங்கள் இருந்தால் மட்டுமே அரசுப் பேருந்து ஒட்டுநர்கள் பலர் சிக்னலில் நிற்கிறார்கள். போக்குவரத்துக் காவலர் இருந்தால் மட்டுமே சிக்னலில் நிற்க வேண்டும் என்பது பிற வாகனஓட்டிகளின் மனநிலையாக இருக்கிறது.
அதிகரிக்கும் ஆபத்துகள்:
- பிற வாகனங்களை இடப்புறத்திலிருந்து முந்திச் செல்வது, ‘ஒன் வே’, ‘நோ என்ட்ரி’ விதிகளை மீறுவது, அனுமதிக்கப்படாத திசையிலிருந்து வாகனத்தை வேகமாக ஓட்டிவருவது, அனுமதிக்கப் படாத இடங்களில் ‘யூ டர்ன்’ எடுப்பது, மீடியன்களில் இருக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளில் புகுந்து சாலையின் எதிர்ப்புறத்துக்குச் செல்வது எனப் பிற விதிமீறல்களும் தினமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக கடைகள் நிறைந்த உள்புறச் சாலைகளில் தவறான திசையிலிருந்து வாகனங்களை வேகமாக ஓட்டிவருவதும், ‘இண்டிகேட்டர்’ போடாமல், கை சைகை காட்டாமல் திடீரெனத் திருப்புவதும், வாகனங்களுக்கிடையே புகுந்துவருவதும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது. இதனால் நேராக வரும் வாகனஓட்டிகள் எந்தத் தவறும் செய்யாமலே விபத்துக்குள்ளாகி கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். நவீன வசதிகளும் தொழில்நுட்பமும் அதிகரிப்பதால் சாலைகளின் பயன்பாடும் பாதுகாப்பும் அதிகரிப்பதற்கு மாறாக, விதிமீறல்களின் வகைமைகளும் ஆபத்துகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
- ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவோருக்கும் இத்தகைய விதிமீறல்களைச் செய்வதில் எவ்விதக் கூச்சமும் இருப்பதில்லை. ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், தாம் ஒப்பீட்டளவில் புதிதாகத் தொடங்கப்பட்ட வாகன சேவைப் பிரிவினர் என்பதாலோ என்னவோ விதிகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று உறுதியாக நம்புகிறார்கள். பொதுவாகவே, இவை எல்லாமே தேவையற்ற விதிமுறைகள் என்று கருதும் மனநிலை தீவிரமடைந்துவருகிறது. விதிகளைச் சரியாகப் பின்பற்றுபவர்கள் வசைகளுக்கும் கைகலப்புக்கும் ஆளாக நேர்கிறது. ஏனென்றால், விதிகளைப் பின்பற்றும் சிறுபான்மையினரால் தமக்குத் தாமதம் நேர்வதாக விதிமீறுவோர் அறச்சீற்றம் (!) கொள்கிறார்கள். கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதில் பாலினம், பொருளாதாரநிலை ஆகியவற்றைக் கடந்த ‘சமத்துவம்’ நிலவுகிறது.
- வளர்ப்பு நாயை வாகனத்தின் முன்புறத்தில் வைத்துக்கொண்டு அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிறை ஒரு கையில் பிடித்தவாறே இருசக்கர வாகனம் ஓட்டுவது அண்மையில் புதிதாகச் சேர்ந்துள்ள விதிமீறல் வடிவம்.
அபராதம் மட்டும் போதுமா?
- இத்தகைய விதிமீறல்களைத் தடுப்பதற்குக் காவல் துறையும் அரசும் அபராதங்களை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கின்றன. கடந்த ஆண்டு அபராதங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டது பயனளித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அபராதம் மட்டும்தான் தண்டனை என்றால், அபராதத் தொகையைச் செலுத்துவதற்கான வசதி படைத்தோர் விதிகளை மதிக்க வேண்டியதில்லை என்றாகிவிடுகிறது. குடித்துவிட்டுக் கார் ஓட்டுவது குற்றம் என்று தெரிந்தும், ரூ.10,000 அபராதம் என்பது அதைச் செய்யும் கோடீஸ்வர வீட்டு வாரிசுகளை எந்த வகையில் கட்டுப்படுத்தும்? விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டால் மட்டுமே அபராதத்தைத் தாண்டிய தண்டனைக்கான ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன.
- இதற்கு மாறாகச் சில கடுமையான விதிமீறல்களுக்கு, நிகழ்விடத்திலேயே தண்டனைகள் தேவை. உதாரணமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் அடுத்த ஆறு மாதங்களுக்கேனும் வாகனம் ஓட்டுவதைத் தடைசெய்வதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளைப் பரிசீலிக்க வேண்டும்.
தொழில்நுட்பங்களும் தாமதமும்:
- அனைத்துச்சாலைகளிலும் எல்லா நேரமும் காவலர்களை இருக்கச் செய்வது நடைமுறைச் சாத்தியமற்றதுதான். அதற்கான மாற்றாகச் சில தொழில்நுட்ப வசதிகள் வந்துள்ளன. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் தொடக்க நிலையிலேயே இருக்கின்றன. விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்ணைப் புகைப்படம் எடுத்து காவல் துறையினர் பார்வைக்கு அனுப்பும் தானியங்கிக் கருவிகள் சென்னையில் 30 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 200 இடங்களில் பொருத்தப்பட இருக்கின்றன. சென்னை போன்ற ஒரு பெருநகரத்துக்கு இந்த எண்ணிக்கை மிகக் குறைவே. அதோடு, மாநிலத்தின் பிற பகுதிகளில் இதுபோன்ற வசதிகள் சென்றடைய எவ்வளவு காலம் ஆகும் என்ற கேள்வியும் இருக்கிறது.
மாற்றம் யார் கையில்?
- சாலை விதிகள் குறித்த பொதுமக்கள் மனநிலை மாற வேண்டும் என்பது நியாயம்தான். சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு, பிரச்சார நிகழ்ச்சிகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. இது தொடர வேண்டும். ஆனால், சமூகத்தின் மனநிலை மாற்றத்துக்குக் காத்துக்கொண்டிருந்தால் எந்தக் குற்றத்தையும் தடுக்க முடியாது. அரசு, சாலை வசதிகளைத் திட்டமிடுவோர், போக்குவரத்துக் காவல் துறையினர் அனைவரும் தம்மிடம் உள்ள போதாமைகளைச் சரிசெய்துகொள்ள வேண்டும். சாலை விபத்துகளை முற்றிலும் தடுப்பதற்கான சட்டங்களையும் திட்டங்களையும் வகுப்பதோடு அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
நன்றி: தி இந்து (13 – 06 – 2023)