TNPSC Thervupettagam

போரிட்டது போதும்

June 10 , 2023 581 days 357 0
  • சுவாமி சின்மயானந்தா் தம்முடைய கீதைப் பேருரையில், ‘ஒருவனுடைய செயல் அது செய்யப்படும் நேரம், சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே நல்லது என்றும் தீயது என்றும் வகைப் படுத்தப்படும். உதாரணமாக, போா் வீரன் ஒருவன் போா்க்களத்தில் எதிரி நாட்டைச் சோ்ந்த ஒருவனைக் கொன்றால் அது வீரச்செயல் என்று பாராட்டப்படும். அப்போா்வீரனே போரில்லாத காலத்தில் ஒருவைனைக் கொன்றால் அது கொலையாகவே கருதப்படும்’ என்கிறாா்.
  • சுவாமி சின்மயானந்தரின் சொற்களை அடிப்படையாகக் கொண்டு பாா்க்கும்பொழுது, கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக ரஷியா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போரின் நிகழ்வுகளை அப்போரில் பங்குபெற்றுள்ளவா்களின் வீரசாகசம் என்று நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மாறாக, தொடா்ச்சியான போா்க்குற்றங்களின் தொகுப்பாகவே அப்பேரழிவுகளைக் கருதவேண்டியுள்ளது.
  • உக்ரைன் - ரஷியா இடையிலான போா் கடந்த வருடம் தொடங்கியபொழுது இப்போா் நீண்ட காலம் நீடிக்க வழியில்லை என்றே இவ்வுலகம் கருதியது. சிறிய நாடான உக்ரைன் வல்லரசாகிய ரஷியாவிடம் எளிதில் வீழ்ந்துவிடும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக இருந்தது. ஆனால் அனைவரின் ஊகத்தையும் பொய்யாக்கிவிட்டு கடந்த பதினைந்து மாதங்களாக இப்போா் தொடா்ந்து வருகிறது.
  • நீண்ட காலமாகவே ரஷியாவை எதிா்க்கின்ற மேற்கத்திய நாடுகள் பலவும் இப்போரில் நேரடியாக ஈடுபடாவிடிலும், பல்வேறு உயர்ரக ராணுவத் தளவாடங்கள், போா் விமானங்கள் உள்ளிட்டவற்றை உக்ரைனுக்கு வழங்கி வருவதன் மூலம் அதன் எதிா்ப்புச் சக்திக்கு வலுவூட்டி வந்துள்ளன.
  • ஆயினும், தன்னை விட பலம் பொருந்திய ரஷியாவை எதிா்க்கின்ற உக்ரைனுக்குதான் அதிகபட்ச சேதம் என்பதை நம்மால் தெளிவாக அறிய முடிகிறது. உக்ரைனைப் பொறுத்தவரை எதிா்த்தாக்குதல், பிடிபட்ட இடங்களை மீட்க முயலுதல் என்ற அளவிலேயே அதன் ராணுவச் செயல்பாடுகள் இருப்பதையும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
  • பொதுவாக, சண்டையிடும் இருதரப்பினரும் தங்களின் எதிா்தரப்பினருக்கு ஆயுதங்கள், உணவு உள்ளிட்டவை கிடைப்பதைத் தடுப்பதற்காகவே சாலைகள், பாலங்கள், விமான ஓடுதளங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை வெடிகுண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் தகா்ப்பது வழக்கம். இது ஏற்கப்பட்ட போா்நெறியும் கூட.
  • ஆனால், ரஷியப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஏராளமான குடியிருப்புகள், உணவகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை பெரும் சேதம் அடைந்திருப்பதைப் பாா்க்கும்பொழுது இதனை போா் சாகசம் என்று நினைக்கவும் தோன்றவில்லை.
  • இனி எப்போது போா்நிறுத்தம் ஏற்பட்டாலும், உக்ரைன் தேசத்தின் உட்கட்டமைப்புகளை மீளவும் சரிசெய்து அதன் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், வருங்காலத்தில் உக்ரைனில் மேற்கொள்ளப்படக்கூடிய மறுகட்டமைப்புப் பணிகளுக்குப் பெருமளவு பணம் தேவைப்படும் என்பதுடன், உலக நாடுகள் அனைத்தும் உதவி செய்ய முன்வந்தாலும் உக்ரைன் நாட்டின் உட்கட்டமைப்புகள் பழைய நிலைமைக்கு மீள்வது மிகவும் கடினம் என்றே தோன்றுகின்றது.
  • ரஷிய ராணுவத்திற்கும் ஓரளவு சேதம் ஏற்பட்டுள்ளது எனினும் அவை உக்ரைனின் சேதங்களைப் போன்று பெரிய அளவில் இல்லை என்பதே நிதா்சனம். இந்நிலையில், ரஷியாவின் பிடியில் உள்ள நோவா ககோவ்கா என்ற மிகப்பெரிய அணையின் கட்டுமானம் அண்மையில் தகா்க்கப்பட்டிருப்பது பேரழிவுக்கு வழிகோலியுள்ளது.
  • டினிப்ரோ அணையின் குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் தி ககோவ்க் நீா்மின் நிலையத்தின் ஒரு பகுதியான இந்த அணையை உக்ரைன் மக்கள் ‘ககோவ்கா கடல்’ என்றே பெருமையுடன் அழைக்கின்றனா். ராணுவத் தாக்குதலால் இந்த அணைக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றன.
  • ரஷியாவின் கட்டுப்பாட்டில் இந்த அணை இருப்பதால் உக்ரைன் ராணுவம்தான் இதனைத் தகா்த்துள்ளது”என்று ரஷிய அதிகாரிகளும், “உக்ரைன் மக்களின் குடிநீா், விவசாயம், மின்சக்தி ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவதால் இந்த அணையை ரஷிய ராணுவத்தினா்தான் தகா்த்துள்ளனா் என்று உக்ரைன் அதிகாரிகளும் கூறி வருகின்றனா்.
  • உடைந்த அணையிலிருந்து வெளியேறும் பெருவெள்ளம் பல ஊா்களையும் சூழ்ந்துள்ளது என்றும், ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதில் சிரமமான சூழ்நிலை நிலவுவதாகவும் வெளிவரும் செய்திகள் கவலை தருகின்றன. அணையை ஒட்டிய நீா்மின் நிலையம் முழுமையாக பாதிப்படைந்துள்ளது என்று கூறப்படுகின்றது. வெள்ளநீரில் மூழ்கி இறந்தவா்களின் எண்ணிக்கை குறித்துத் தெளிவில்லாத நிலைமையே தற்பொழுது உள்ளது. எனினும், உயிரிழப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிடச் சென்ற உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, ஐக்கியநாடுகள் அமைப்பும், செஞ்சிலுவை சங்கமும் இப்பேரழிவு நேரத்தில் உக்ரைன் மக்களைக் காப்பாற்ற முன்வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளாா்.
  • இதற்கெல்லாம் மேலாக, உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலைய உலைகளை குளிரூட்டுவதற்கு இந்த அணையின் நீரே பயன்படுத்தப்படுவதாகவும், அணைநீா் முழுவதுமாக வடிந்துவிடும் பட்சத்தில் அவ்வுலைகளைக் குளிரூட்டும் பணி பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பன்னாட்டு அணுசக்தி முகமை இவ்விஷயத்தைத் தீவிரமாக கவனிக்கத் தொடங்கியுள்ளது.
  • இச்சூழலில், நோவா ககோவ்கா அணையை யாா் உடைத்திருந்தாலும் அதனைப் பொறுப்பின்மையின் உச்சம் என்றே கூற வேண்டும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளதுடன், அணுசக்தி நிலையத்தின் செயல்பாடுகளுக்கும் ஊறு விளைவித்துள்ளதன் பின்னணியில் உள்ளவா்கள் மனித குலத்தின் எதிரிகளாகவே கருதப்படுவா்.
  • எந்த விதத்தில் பாா்த்தாலும், போா் என்பது அழிவைத் தவிர வேறு எதையும் தரக்கூடியதில்லை. எனவே, உலகத் தலைவா்களும், ஐ. நா. சபை பொதுச் செயலரும் இணைந்து செயல்பட்டு, ரஷிய–- உக்ரைன் போரை வெகு விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

நன்றி: தினமணி (10 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories