- உக்ரைனில், குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட இடங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிகழ்வு, உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியோர், நோயாளிகள் ஆகியோர் போரில் தாக்கப்படக் கூடாது என்கிற அடிப்படை மனிதநேய நெறியை ரஷ்யா மீறியிருப்பதாகக் கண்டனக் குரல்கள் ஒலித்துவருகின்றன.
- சர்வதேசச் சமூகம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தினாலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்கிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் உள்ள ஓக்மாடிட் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்டவை மீது ஜூலை 5 அன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல் வழக்கமான நடவடிக்கை அல்ல என்று கருதப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு உக்ரைனை நிலைகுலைய வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ரஷ்யா இத்தாக்குதலைத் திட்டமிட்டிருப்பதாகப் பன்னாட்டு உறவுத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- ஐரோப்பிய நாடுகளுக்கான கூட்டமைப்பான ‘நேட்டோ’ தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு உச்சி மாநாடு, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் தொடங்க இருந்தது. அதில் உக்ரைனுக்கு ஆண்டுக்கு நான்கு கோடி யூரோ ராணுவ நிதியுதவியாக வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்தன.
- ‘இத்தகைய உக்ரைன் ஆதரவு நடவடிக்கைகளை நாங்கள் விரும்பவில்லை’ என நேட்டோ உறுப்பினர் நாடுகளுக்கு ரஷ்யா விடுக்கும் செய்தியே, குழந்தைகள் மருத்துவமனை மீதான இத்தாக்குதல் எனப் பேசப்படுகிறது.
- பலிஸ்டிக் ஏவுகணை, ஈரான் நாட்டின் தயாரிப்பான ஷாகித்-136 ஏவுகணை உள்பட 5 ஏவுகணைகள் கீவ் நகரத்தின் மீது ஏவப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது. இவை மிகுந்த தொலைவிலிருந்தும் மிகத் துல்லியமாகவும் பரந்த அளவிலும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் ஓர் ஏவுகணை தாக்கியதில் ஓக்மாடிட் மருத்துவமனையின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
- இது உக்ரைனின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையாகும். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலர், இம்மருத்துவமனையைச் சார்ந்துள்ளனர். குறிப்பாக, புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்ட சிறாரும் இளையோருமாக 627 பேர் இங்கு சேர்க்கப்பட்டிருந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களில் இரண்டு பேர் இத்தாக்குதலால் இறந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- போரில் ஈடுபடும் நாடுகள், எதிரி நாட்டின் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றைத் தாக்கக் கூடாது என்று ஐ.நா. விதிமுறைகள் அறிவுறுத்துகின்றன. இந்நிலையில், குழந்தைகள் மருத்துவமனை மீதான தாக்குதல் மூலம் ரஷ்யா போர் விதிமுறைகளை மீறியுள்ளதாக உக்ரைன் கூறுகிறது.
- இக்குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தாலும், மார்ச் 2022இல் மரியுபோல் என்னும் இடத்தில் உள்ள மருத்துவமனையிலும் செப்டம்பர் 2023இல் நீப்ரோ என்னுமிடத்தில் உள்ள மருத்துவ மையத்தையும் ரஷ்யா இதே முறையில் தாக்கியதை உக்ரைன் நினைவூட்டுகிறது. நடந்து முடிந்த நேட்டோ உச்சி மாநாட்டின் தீர்மானங்கள், உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தமாகத் தொடர உள்ளதைக் காட்டுகின்றன.
- போரில் குழந்தைகள் தாக்கப்படும் அவலம், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலிலும் நிகழ்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் உலகம் முழுதும் நடந்த ஆயுத மோதல்களில் இறந்த குழந்தைகளைவிட, அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் காஸாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. அண்மையில் தெரிவித்தது. குழந்தைகளைத் தாக்கும் நாடுகள் சர்வதேசச் சமூகத்துக்குப் பதில் கூறுவதோடு, தங்கள் குற்றத்துக்கான விளைவுகளைத் தவிர்க்கவே முடியாத வகையில் சட்டங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 07 – 2024)