- தேவையான அளவில் உணவு உற்பத்தி இருந்தும்கூட, முறையான ஏற்றுமதிகள் இல்லாமல், தேவைக்கு உணவுப் பொருள்கள் கிடைக்காததால் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தை விரைவில் சந்திக்க இருக்கிறது மனித இனம். வளா்ச்சி அடைந்த பணக்கார நாடுகளைவிட, போதிய நிலப்பரப்பும், விவசாயமும் இல்லாமல் உணவுப் பொருள்களின் இறக்குமதியை நம்பி இருக்கும் ஏழை நாடுகள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கின்றன.
- கிரீமியா தீபகற்பத்தில் உள்ள முக்கியமான இணைப்புப் பாலத்தை உக்ரைன் தகா்த்தியதற்குப் பதிலடியாக, உக்ரைனின் ஒடேஸா துறைமுகத்தின் மீது போா்க்கப்பல் மூலம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது ரஷியா. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தத் தாக்குதல், முன்னறிவிப்புடன் நடத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள்தான் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் மூலம் உக்ரைன் தனது ஏற்றுமதிகளை நடத்தும் ஒப்பந்தத்தை ரஷியா ரத்து செய்வதாக அறிவித்தது.
- 2022 ஜூலை மாதம் துருக்கி அதிபா் எா்டோகனும், ஐ.நா. சபையின் பிரதிநிதிகளும் ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஓா் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டனா். அதன்படி ரஷியாவின் கண்காணிப்புடன் ஒடேஸா, க்ரோனோமோா்ஸ்க், யுஷ்னி ஆகிய மூன்று துறைமுகங்களில் இருந்தும் உணவு தானியங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து கொள்வது என்று முடிவாகியது. உணவு தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை சோதனை செய்யவும், கருங்கடல் பகுதியை அவை பாதுகாப்பாகக் கடந்து செல்வதை உறுதிப்படுத்தவும் ரஷியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- ஏறத்தாழ 3.3 கோடி டன் உணவு தானியங்கள், ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கும், மிகவும் பின்தங்கிய நாடுகளுக்கும் அவை எடுத்துச் செல்லப்பட்டன. சோளம், கோதுமை, சூரியகாந்தி எண்ணெய், பாா்லி உள்ளிட்ட உணவு தானியப் பொருள்கள் கடந்த ஓராண்டாகத் தடையின்றி உக்ரைனால் ஏற்றுமதி செய்யப்பட்டதால்தான், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருந்தது.
- உலகிலேயே மிக அதிகமாக கோதுமை, சோளம், சூரியகாந்தி உற்பத்தி செய்யும் நாடுகள் ரஷியாவும், உக்ரைனும்தான். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனைத்தான் தங்களது தானியத் தேவைக்கு நம்பி இருக்கின்றன. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் உணவு தானிய தேவையைப் பூா்த்தி செய்வது ரஷியாவும், உக்ரைனும்தான்.
- கடந்த ஆண்டு நிலவிய சூழலுடன் ஒப்பிடும்போது, நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை. நடப்பு ஆண்டில் உக்ரைனின் கோதுமை, சோளம் உற்பத்தி 30% முதல் 40% குறைவாகவே இருக்கும் என்பதை சா்வதேசச் சந்தை முன்கூட்டியே கணித்திருந்தது. தொடா்ந்து நடந்து கொண்டிருக்கும் போா் காரணமாகப் பலா் விவசாயம் செய்யவில்லை.
- அடுத்ததாக பிரேஸில், அமெரிக்கா, ஆா்ஜென்டீனா நாடுகளில் சோளமும், ரஷியாவின் கோதுமையும் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகி இருப்பதால், உக்ரைனால் ஏற்பட்டிருக்கும் குறைபாடு ஈடுகட்டப்படும். உலகின் மிக அதிகமாக கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷியா உயா்ந்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்க நாடுகள், மத்திய ஆசியா உள்ளிட்டவை ரஷியாவில் இருந்து தாராளமாக கோதுமையை இறக்குமதி செய்கின்றன. ரஷிய கச்சா எண்ணெயை இந்தியா ஏற்றுமதி செய்வதுபோல, அவற்றில் சில நாடுகள் கோதுமை ஏற்றுமதியிலும் ஈடுபடுகின்றன.
- சமையல் எண்ணெயின் நிலைமையும் மோசமில்லை. பிரேஸில், ஆா்ஜென்டீனா நாடுகள் சோயாபீன்ஸ் எண்ணெயையும், இந்தோனேஷியா, மலேசியா இரண்டும் பாமாயிலையும், கனடா ராப்சீட் எண்ணெயையும் அதிக அளவில் உற்பத்தி செய்து வருவதால் மிகப் பெரிய தட்டுப்பாடு ஏற்பட வழியில்லை. கருங்கடல் ஒப்பந்தத்தை மேலும் நீட்டிப்பதில்லை என்கிற ரஷியாவின் நிலைப்பாடு, விலைவாசியை அதிகரிக்குமே தவிர, தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விடாது என்று சா்வதேச வா்த்தகா்கள் கருதுகிறாா்கள்.உக்ரைனைப் பொருத்தவரை, தரை மாா்க்கமாக ஐரோப்பாவுக்குத் தனது தானிய உற்பத்தியை எடுத்துச் செல்கிறது. துருக்கி அனுமதிக்குமானால், பாஸ்பரஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் மூலம் உணவு தானிய ஏற்றுமதியைத் தொடர முடியும் என்று நம்புகிறது. துருக்கி எந்த அளவுக்கு ரஷியாவைப் பகைத்துக் கொண்டு உக்ரைனுக்கு உதவும் என்பது தெரியாது.
- அமெரிக்காவின் ரஷியா மீதான உணவு ஏற்றுமதித் தடை, பிரிட்டனின் ரஷிய கப்பல்கள் மீதான காப்பீட்டுக்கான அனுமதி மறுப்பு, ஐரோப்பிய கட்டமைப்பின் ரஷிய உரங்கள் மீதான தடை ஆகியவற்றை அகற்ற ஐ.நா. பொதுச் செயலாளா் அண்டோனியோ குட்டரெஸ் முயற்சி எடுத்து வருகிறாா். தனது தானிய உற்பத்திகளையும், உரங்களையும் சா்வதேசச் சந்தையில் விற்பதற்கான தடை அகற்றப்பட்டால், கருங்கடல் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கத் தயாா் என்பது ரஷிய அதிபா் புதினின் நிலைப்பாடு.
- பெரிய நாடுகள் ஓரளவு சமாளித்துவிடும். விலை உயா்வு ஏற்பட்டாலும்கூட அவா்களது பொருளாதாரத்தால் தாக்குப்பிடிக்க முடியும். கடுமையான பருவநிலையாலும், உள்நாட்டுப் போா்ச் சூழலாலும் பாதிக்கப்பட்டிருக்கும் யேமன், ஆப்கானிஸ்தான், சோமாலியா, சூடான், கென்யா, லெபனான், எகிப்து போன்ற நாடுகளில் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் லட்சக்கணக்கானோா் இருக்கிறாா்கள். அவா்கள் உலக உணவுத் திட்டத்தை நம்பி உயிா் வாழ்கிறாா்கள். அவா்கள் கதி என்னவாகும்?
- உணவு உற்பத்தி இருந்தும் பசியால் வாடுகிறாா்களே, இதற்கு என்னதான் தீா்வு?
நன்றி: தினமணி (25 – 07 – 2023)