TNPSC Thervupettagam

போர்க் குற்றம்

October 18 , 2023 450 days 357 0
  • அக்டோபர் 7 ஆம் தேதியிலிருந்து இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடக்கும் போரில் பாலஸ்தீனர்கள் 2,800க்கு மேற்பட்டோரும், இஸ்ரேலியர்கள் 1,400க்கு மேற்பட்டோரும் கொல்லப் பட்டிருக்கிறார்கள். காசாவில் மட்டும் 60,000க்கும் அதிகமான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. தண்ணீர், உணவு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடரும் பகை

  • ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல் தற்போது வெடித்தது அல்ல. பல ஆண்டுகளாகத் தொடரும் பகை அது. இம்முறை ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. அதற்கான இருமடங்கு பதிலடியை இஸ்ரேல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, காசாவின் வடக்குப் பகுதி இஸ்ரேலின் ஆயுதங்களால் பிளக்கப்பட்டிருக்கிறது.
  • போரின் உச்சகட்டமாக, ஹமாஸ் அமைப்பு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருப்பதால் கடும் கோபம் கொண்ட இஸ்ரேல், தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை ஹமாஸ் மீதும் காசா மக்கள் மீதும் பயன்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் இந்தச் செயலைப் போர்க் குற்றம் என சர்வதே மனித உரிமை அமைப்புகள் விமர்சித்திருக்கின்றன.

வேறுபாடு

  • முதலில் போருக்கும் - போர்க் குற்றத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது அவசியமாகிறது. போர் என்பது அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எனினும் எதிரி நாடுகள் தாக்கும்போது தற்காப்புக்காகப் போர் புரிய அனைத்து நாடுகளுக்கும் உரிமை உள்ளது என்றே சர்வதேசச் சட்டம் கூறுகின்றது. இதில் தாக்குதல் தொடுப்பதற்கு எனச் சில வரையறைகள் உள்ளன. அவை மீறப்படும்போது போர்க் குற்றம் நிகழ்கிறது.
  • ஹமாஸ் - இஸ்ரேல் போரில், இஸ்ரேல் மீது மட்டும் போர்க் குற்றம் சுமத்தப்படுவதற்குக் காரணம் உள்ளது. ஹமாஸ் பாலஸ்தீனத்தின் விடுதலை அமைப்பாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் பயங்கரவாதத்துடன் ஒத்துப்போகக் கூடியது என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஜனநாயக நாடாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இஸ்ரேல், ஹமாஸின் இடத்தில் இல்லை. அவ்வாறான நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்தும் வரம்பு மீறிய தாக்குதல் போர்க் குற்றமாகவே கருதப்படும்.
  • முதலாம் உலகப் போருக்குப் பின்னரே போர்க் குற்றம் என்ற சொல் பரவலாக வழக்கத்துக்கு வந்தது. 1949இல் ஜெனிவா உடன்படிக்கையின்படி, போரின்போது போருக்கான விதிமுறைகளை மீறுவதும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதும், போர்க் குற்றம் என்று வரையறுக்கப்படுகிறது.

எவையெல்லாம் போர்க் குற்றம்

  • # போரின்போது வேண்டுமென்றே ஒரு மனிதரைக் கொல்வது, பாலியல் வன்கொடுமை புரிவது.
  • # ரசாயன, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல், இன அழிப்பில் ஈடுபடுவது.
  • # போரில் பிடிபட்டவர்கள் மீது மனிதத்தன்மை இல்லாமல் நடந்துகொள்வது. உதாரணத்துக்கு நிர்வாணப்படுத்துதல், உயிரி பரிசோதனைகள் நடத்துவது, உடலில் காயங்களை ஏற்படுத்தித் துன்புறுத்துவது.
  • # பிணைக் கைதிகளைப் பிடித்தல், பிடிக்கப்பட்ட கைதிகளுக்கு உணவு, இருப்பிடம், உடை ஆகியவற்றை உறுதிசெய்யாமல் இருப்பது.
  • # பிடிக்கப்பட்ட பிணைக் கைதியைத் தங்கள் படைகளில் பணியாற்றக் கட்டாயப்படுத்துவது.
  • # மனித உரிமைகளை மீறும் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல், நிலங்களை அபகரித்தல்.
  • # மக்கள் இருப்பிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்களைத் தாக்குதல்.
  • இவை எல்லாம் போர்க் குற்றம் என ஐ.நா-வால் குறிப்பிடப்படுகிறது. மேற்கூறிய வரையறையின்படி கடந்த காலத்தில் போர்க் குற்றத்தை நிகழ்த்திய நாடுகள் ஏராளம்.

எந்தெந்த நாடுகள் 

  • இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது. மனிதகுல வரலாற்றில் பதிவான மோசமான போர்க் குற்றமாக இன்றளவும் கருதப்படுகிறது. ஜப்பான் - சீனா, வியட்நாம் - அமெரிக்கா, வட கொரியா - தென்கொரியா, ஆப்ரிக்கக் கண்டத்தில் தொடரும் உள்நாட்டுப் போர்கள் என அனைத்திலும் மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாகச் சான்றுகள் கூறுகின்றன.
  • 21 ஆம் நூற்றாண்டை எடுத்துக்கொண்டால், 2003இல் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன எனக் கூறி, இராக் மீது படையெடுத்த அமெரிக்க ராணுவம் செய்த அட்டூழியங்கள் ஏராளம். இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டப்பட்டது. சிரியா உள்நாட்டுப் போரில் வல்லரசுகளின் தலையீட்டினால் அப்பாவி மக்கள் மீது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டன.
  • 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின்போது கெர்ஸான், கார்கிவ் நகரங்களில் ரஷ்ய ராணுவம் எண்ணிலடங்காப் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறு போர்க் குற்றத்தில் ஈடுபடும் நாடுகளுக்குக் கடிவாளம் போடும் அமைப்பாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது.

சர்வதேச நீதிமன்றம்

  • சர்வதேச விதிகள், ஜெனிவா உடன்படிக் கையில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள், இனப் படுகொலை நிகழ்த்திய நாட்டின் மீது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தரப்பில் விசாரணைக் குழுஒன்று அமைக்கப்படும்.அக்குழு மேற்கொள்ளும் விசாரணை யின் முடிவில் போர்க் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட நாடு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதன் மீது விசாரணை தொடங்கும்.
  • நெதர்லாந்தில் தி ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதுவரை 45 நபர்கள் போர்க் குற்றவாளிகள் என சர்வதேச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். சமீபத்தில்கூட உக்ரைனில் நடந்த போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபரைக் கைதுசெய்ய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. போர்க் காலங்களில் ஆதரவற்று நிற்கும் மக்களுக்கு நம்பிக்கைக் குரலாக சர்வதேச நீதிமன்றம் ஒலித்தாலும், வல்லரசுகளின் கைப்பாவையாகச் சில நேரம் செயல்படுகிறது என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories