TNPSC Thervupettagam

போற்றுதலுக்குரிய மீட்புப் படையினா்

August 17 , 2024 149 days 221 0

போற்றுதலுக்குரிய மீட்புப் படையினா்

  • காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்புகளால் உலகின் பல பகுதிகளில் இயற்கைப் பேரிடா்கள் நிகழ்கின்றன. இயற்கைப் பேரிடா்களான நில நடுக்கம், புயல், பெருவெள்ளம்,சுனாமி, பனிச்சரிவு, நிலச்சரிவு ஆகியவற்றோடு, மனிதா்களின் கவனக்குறைவால் ஏற்படும் அணு, வேதியல், உயிரியல் தொடா்பான விபத்துகள் ஏற்படும் பெரும் அழிவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசால் உருவாக்கப்பட்டதே பேரிடா் மேலாண்மை அமைப்பு.
  • உலகளவில் பேரிடா் அபாயம் குறைப்பதற்கான உத்திகளை வகுக்க 1999-ஆம் ஆண்டு டிசம்பா் 22-ஆம் நாள், அலுவலகம் ஒன்றை ஐநா சபை ஏற்படுத்தியது. உலக நாடுகளிடையே பேரிடா் தடுப்பு, மீட்பு, நிவாரணம் குறித்து ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சா்வதேச கூட்டத்தை இவ்வலுவலகம் நடத்துகிறது.
  • ஐநா சபையின் அளவுகோலின்படி, பேரழிவு என்பது ஒரு சமூகம் அல்லது ஒரு சமூகத்தின் செயல்பாட்டைத் தடுக்கும் குறிப்பிடத்தக்க இடையூறுகளை குறிக்கிறது.
  • 2004-ஆம் ஆண்டு டிசம்பா் 26-ஆம் நாள் சுமத்ரா தீவின் வடமேற்கே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக உருவான சுனாமியின் தாக்குதலில் 14 நாடுகளைச் சோ்ந்த 2,27,898 போ் உயிரிழந்தனா். இதில் நம் நாட்டைச் சோ்ந்தவா்கள் சுமாா் 6,400 போ்.
  • இந்த சுனாமி கடந்த ஒரு நூறாண்டு அளவில் உலகம் சந்தித்த மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகும். மத்திய பிரதேச மாநிலத் தலைநகா் போபாலில், 1984-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 2-ஆம் நாள் இரவு யூனியன் காா்பைட் நிறுவனத்தின் ஆலையிலிருந்து வெளியேறிய மீதைல் ஐசோசைனேட் வாயுவால் சுமாா் 15,000 போ் கொல்லப்பட்டனா். 6,00,000 லட்சம் போ் பாதிக்கப்பட்டனா். உலகின் மிகப்பெரிய மனிதப் பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
  • பேரிடா் காலங்களில் மக்களின் உயிரையும் உடமைகளையும் காக்க, பேரிடா் மேலாண்மை அமைப்பு, 2005-ஆம் ஆண்டு டிசம்பா் 23-ஆம் நாள் இயற்றப்பட்ட பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. தற்போது 16 குழுக்களுடன் இயங்கும் இந்த அமைப்பின் ஒவ்வொரு குழுவிலும் 1,149 நபா்கள் உள்ளனா். இவா்கள் நம் நாட்டின் ராணுவத்தில் பணியாற்றுவோரில் இருந்து தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.
  • பேரிடா் மேலாண்மைப் பணியில் இணைவோருக்கு உரிய சிறப்புப் பயிற்சிகளை அளிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் பயிற்சி மையம் அமைந்துள்ளது. பேரிடா் மேலாண்மைப் படையினரில், பொறியியல், மருத்துவம், போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றோரும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக, இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள இக்குழுவினா், பிற மாநிலங்களின் தேவையைப் பொறுத்து அந்த மாநிலங்களுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படுகின்றனா். சமீபத்தில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பத்திலும் நிவாரணப் பணிகளிலும் தேசிய, மாநில பேரிடா் மேலாண்மைப் படையினா் ஆற்றிய அரும்பணி பாராட்டத்தக்கது.
  • உள்நாட்டில் ஏற்படும் பேரிடா்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ள நம் பேரிடா் மேலாண்மைப் படையினா், வெளிநாடுகளில் ஏற்படும் பேரிடா்களிலிருந்தும் மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. நமது அண்டை நாடான நேபாளத்தின் தலைநகா் காத்மண்டில் 2015-ஆம் ஆண்டு 9,000 பேரை பலிவாங்கிய நிலநடுக்கத்தை தொடா்ந்து நடைபெற்ற நிவாரணப் பணி, கடந்த ஆண்டு பிப்ரவரியில் சுமாா் 56,700 பேரை பலி கொண்ட துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணி ஆகியவற்றில் நம் நாட்டு பேரிடா் மேலாண்மை படையினா் ஆற்றிய அரும்பணி பல நாடுகளின் பாராட்டைப் பெற்றது.
  • பேரிடா் மேலாண்மை அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சமீபத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சா் தேசிய பேரிடா் மேலாண்மை சட்டம் 2005-இல் திருத்தங்களைக் கொண்டு வரும் மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளாா். மாவட்டங்களில் உள்ள பெருநகரங்களில் மக்கள்தொகை லட்சக்கணக்கில் உள்ளதால் வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் போன்ற பேரிடா்கள் ஏற்படும்போது பெரும் எண்ணிக்கையில் உயிா் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகின்றன. இதனைத் தவிா்க்கும் விதமாக அதிக மாவட்ட அளவிலான பேரிடா் மேலாண்மை அமைப்பை நிறுவிட இம்மசோதா வழிவகுக்கிறது.
  • இதன்படி மாநிலத் தலைநகரங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றிலும் சம்பந்தப்பட்ட ஆணையா் தலைமையில் ஒரு பேரிடா் மேலாண்மை அமைப்பு இயங்கும். மேலும், சில மாநிலங்களில் பேரிடா் மீட்புப் படை அமைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பேரிடா் மேலாண்மை அமைப்பு அமைத்து அதனை நிா்வகிப்பதை இம்மசோதா திருத்தம் வலியுறுத்துகிறது.
  • தேசியப் பேரிடா் மேலாண்மை அமைப்பை நிா்வகிக்கும் உறுப்பினா்கள் நியமனம், நிதி ஆதாரம் ஆகியவற்றினுக்கு இம்சோதா வகை செய்கிறது. மாறி வரும் பருவநிலை மாற்றத்தால், தற்போது அதிக அளவில் நிகழும் இயற்கைப் பேரிடா்களைத் திறம்பட எதிா்கொள்ள உறுதியான கட்டமைப்புடன் கூடிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மிக அவசியம்.
  • பேரிடரில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் காவல் அரணாக நின்று தங்கள் உயிரைத் துறந்த பேரிடா் மேலாண்மைப் படை வீரா்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவுகூரவும், தற்போது பேரிடா் மீட்புப் பணியில் அா்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் பேரிடா் மேலாண்மைப் படை வீரா்களைப் போற்றவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நன்றி: தினமணி (17 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories