TNPSC Thervupettagam

மகப்பேறு மருத்துவர்களின் வருத்தம் நீங்குமா

October 31 , 2023 262 days 264 0
  • சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதற்கான முக்கியக் காரணிகளில் மகப்பேறுத் துறையும் ஒன்று. தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான 2030 க்கான இலக்கை முன்னதாகவே அடைந்து, தமிழ்நாடு சாதனை புரிந்ததில் பெரும் பங்கு மகப்பேறு மருத்துவர்களுக்கு உள்ளது. பிரசவத்தின்போது இரண்டு உயிர்களைக் காப்பாற்றப் போராடு பவர்கள் அவர்கள். எனினும், உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதுடன், நியாயமற்ற விமர்சனங்களையும் தண்டனைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதுதான் வேதனை.

நிதர்சனமும் விமர்சனமும்

  • தமிழகம் முழுவதும்அரசு மருத்துவமனைகளில் ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 4.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 50% அறுவைசிகிச்சைகள் மூலம் நடக்கின்றன. இதைத் தவிர, புற நோயாளிகள், உள் நோயாளிகள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, பெண்களுக்கான மற்ற அறுவை சிகிச்சைகள் (Gynecology Surgery) என ஏராளமான பணிகள் மகப்பேறு மருத்துவத் துறையினருக்கு உள்ளன. இதற்கு 2,000க்கும் மேல் மகப்பேறு நிபுணர்கள் தேவை. ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - அரசு மருத்துவமனைகளில் 700 மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.
  • வேலைப் பளு அதிகமாக இருப்பதால் மகப்பேறு மருத்துவர்கள் தொடர்ச்சியாக அரசுப் பணியில் நீடிக்க விரும்புவதில்லை. மகப்பேறு துறையைத் தேர்ந்தெடுக்கப் பலரும் முன்வருவதும் இல்லை. இதன் காரணமாக, இந்தத் துறையில் காலியிடங்கள் அதிகம். விளைவாகப் பணிச் சுமை கூடுதலாகவே இருக்கிறது. அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் நிலையில், அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
  • இப்படியான சூழலில், மாவட்ட ஆட்சியர் நடத்தும் ஆய்வு என்பது, துறைச் செயல்பாடுகளில் மருத்துவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால், அது பல வேளைகளில் மருத்துவர்களைப் பழிவாங்கும் வகையில் உள்ளது என்பதுதான் நிதர்சனம். பேறுகால மரணம் நடக்கக் கூடாது என்ற முனைப்போடுதான் ஒவ்வொரு மருத்துவருமே பணியாற்றி வருகிறார். அதேநேரத்தில் தவிர்க்க முடியாத, சிக்கலான (High risk) கர்ப்பிணிகளுக்கு உலகின் எந்தப் பகுதியில் வைத்துப் பிரசவம் பார்த்தாலும் உயிரிழக்கவும் வாய்ப்பு உண்டு என்ற துரதிர்ஷ்டவசமான உண்மையைப் பலரும் புரிந்துகொள்வதில்லை.

மாற்றம் தேவை

  • பல வேளைகளில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து கர்ப்பிணிகள், உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசுமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர். அவர்களை எப்படியாவது காப்பாற்றியே தீருவோம் என்ற முனைப்போடுதான் மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஏற்படும்போது, அதாவது அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழந்தாலே, மருத்துவர்கள் மீதுதான் தவறு என்கிற கோணத்தில் உயர் அதிகாரிகள் அணுகுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
  • பொதுவாக, கர்ப்பிணி உயிரிழக்கும்போது - உதாரணமாக ராயபுரத்தில் அமைந்துள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால் அந்த மருத்துவமனையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அளவில், சென்னை மாநகராட்சிஅளவில், தேசிய மருத்துவக் குழும (NHM)மட்டத்தில் என ஐந்து மட்டங்களில் ஆய்வுசெய்யப் படுகிறது.
  • ஆட்சியர் நடத்தும் ஆய்வுகளின்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவர்கள் - சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில், மரணம் அடைந்த பெண்ணின் கணவர் அல்லது நெருங்கிய உறவினர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவரைக் குற்றவாளியைப் போல் கேள்வி கேட்பதும் விமர்சிப்பதும் நடக்கிறது. இவற்றைத் தவிர்த்து ஒற்றை ஆய்வு (Single Audit) என்ற வகையில் தேசிய மருத்துவக் குழும மட்டத்தில் மட்டும் ஆய்வுசெய்வதே நியாயமாக இருக்கும்.
  • தவிர, மகப்பேறு துறையினருக்குத் தகுதிக்கேற்ற ஊதியமும் தரப்படுவதில்லை. மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் குறைவாகவே தமிழ்நாட்டின் எம்பிபிஎஸ், சிறப்பு - உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • கரோனா பேரிடரின்போது, பெரும்பாலான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடந்தன. அப்போது தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய மகப்பேறு மருத்துவர்களை அரசு நிர்வாகம் நினைத்துப்பார்க்க வேண்டும். மக்கள் உயிரைக் காப்பாற்றப் போராடும் மருத்துவர்களைத் தங்கள் ஊதியத்துக்காகப் போராட வைக்கும் நிலை இனியும் தொடரக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories