மகாராஷ்டிரமும் ஜார்க்கண்டும்!
- மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைகளுடன் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும், 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தலைப்போலவே ராகுல் காந்தி தலைமையிலான "இண்டி' கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் உள்ள 7 தொகுதிகளுக்கும், ஏனைய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களவைக்கான இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதி தேசிய அளவில் கவனம் பெறுகிறது.
- மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாமல் போனதற்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு முக்கியமான காரணம். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹரியாணாவில் ஆட்சியைக் கைப்பற்றி தனது செல்வாக்கை அங்கே நிலைநாட்டி இருக்கும் பாஜக, இப்போது நடைபெற இருக்கும் தேர்தல்களிலும் அதேபோல தனது செல்வாக்கை மீட்டெடுக்கும் முனைப்பில் களமிறங்கியிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் தனது கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதும், ஜார்க்கண்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதும் மட்டுமல்லாமல், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் இடைத் தேர்தல்களில் கணிசமான வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இருக்கிறது.
- 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து காங்கிரஸ் தன்னுடைய அணுகுமுறையில் மாற்றங்களை மேற்கொண்டது. அதன் விளைவாக மக்களவைத் தேர்தலில் தனது பலத்தை 52-லிருந்து, 99-ஆக அதிகரித்துக்கொள்ள முடிந்தது. இலவச அறிவிப்புகள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு, அதிகரித்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட காங்கிரஸின் அணுகுமுறை ஓரளவுக்கு கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தது என்றாலும் பாஜகவின் வளர்ச்சித் திட்டங்களையும், ஹிந்துத்துவ கோஷத்தையும் எதிர்கொள்ள அது போதுமானதல்ல என்பது காங்கிரஸூக்கு மக்களவைத் தேர்தல் உணர்த்திய பாடம். தேசிய அளவில் பிரதமர் மோடியின் செல்வாக்கால் 36% வாக்கு வங்கியைக் கொண்ட பாஜகவை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது என்பதை ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் உணர்த்தியிருக்கிறது.
- மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மொத்தம் 288 இடங்கள் உள்ளன. 148 இடங்களில் பாஜகவும், 80 இடங்களில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனையும், 53 இடங்களில் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸூம் போட்டியிடுகின்றன. 5 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கும், 2 இடங்கள் முடிவெடுக்கப்படாமலும் இருக்கின்றன. மகா விகாஸ் கூட்டணியில் 103 இடங்களில் காங்கிரஸூம், 89 இடங்களில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனையும், 87 இடங்களில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸூம் போட்டியிடுகின்றன.
- 6 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கும், 3 இடங்கள் முடிவெடுக்கப்படாமலும் இருக்கின்றன.
- நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 7,995 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் போட்டியில் இருந்து விலகுவார்கள் என்பது நவம்பர் 4-ஆம் தேதிதான் தெரியும். இந்த அளவுக்கு வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பது எந்த அளவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது என்பதன் வெளிப்பாடு.
- சிவசேனையும், தேசியவாத காங்கிரஸூம் பிளவுபட்டு இருப்பதும், எல்லா கட்சியிலும் போட்டி வேட்பாளர்கள் உருவாகி இருப்பதும் வெற்றி, தோல்வியைக் கணிக்க முடியாத அளவுக்குத் தேர்தலை மாற்றியிருக்கிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தேர்தல், மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில்லை.
- இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கும் ஜார்க்கண்ட் பாஜகவுக்கும், "இண்டி' கூட்டணிக்கும் மிகப் பெரிய சவால். ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான "இண்டி' கூட்டணி தன்னுடைய மக்கள் நலத் திட்டங்களையும், பழங்குடியினர் ஆதரவையும், அனுதாப வாக்குகளையும் பலமாக நம்புகிறது.
- ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது பழங்குடியினர்மத்தியில் அனுதாபம் ஏற்பட்டிருப்பது மட்டுமல்லாமல் அவரது செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அவரது கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிற பரப்புரை பழங்குடியின மக்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவாக ஒருங்கிணைத்திருக்கிறது. காங்கிரஸூடனான கூட்டணி எந்த அளவுக்கு பழங்குடியினர் அல்லாதவர்களின் வாக்குகளை "இண்டி' கூட்டணிக்கு ஈர்க்கும் என்பதைப் பொருத்துத்தான் வெற்றி வாய்ப்பு அமையும்.
- ஜார்க்கண்ட் மாநில வாக்காளர்கள் பழங்குடியினர், பழங்குடியினர் அல்லாதவர்கள் என்று பிரிந்திருக்கிறார்கள். மக்கள்தொகையில் 26% பழங்குடியினர். பழங்குடியினர் அல்லாதவர் மத்தியில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம். காங்கிரஸ் மூலம் பழங்குடியினர்
- அல்லாத வாக்குகளை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பெற நினைப்பதுபோல, ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடண்ட் யூனியன் (ஏஜெஎஸ்யூ) கட்சியுடனான கூட்டணி மூலம் பழங்குடியினர் வாக்குகளில் பிளவு ஏற்படுத்த பாஜக நினைக்கிறது.
- தேர்தலில் எதிர்பாராத முடிவுகளை வழங்குவதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தனித்துவம். மகாராஷ்டிரமும், ஜார்க்கண்டும் எதிர்பாராத முடிவுகளை வழங்கக் கூடும்.
நன்றி: தினமணி (02 – 11 – 2024)