TNPSC Thervupettagam

மக்களவைத் தலைவர்: தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தேர்தல்

June 28 , 2024 151 days 227 0
  • பதினெட்டாவது மக்களவையின் தலைவர், தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் புதிய மக்களவையானது, ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டுடன் தொடங்கியிருக்கிறது.
  • மக்களவைத் தலைவரைக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடனும் போட்டியின்றியும் தேர்ந்தெடுப்பது ஒரு மரபாகவே பின்பற்றப்பட்டுவருகிறது. மக்களவைத் தலைவர் என்பது அவையை நடத்தும் பதவி மட்டும் அல்ல; அவையின் கண்ணியத்தை நிலைநிறுத்தி, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையே பாலமாகச் செயல்பட வேண்டிய பொறுப்புமிக்க பதவியும்கூட.
  • எனவேதான், இந்தப் பதவிக்குப் போட்டியின்றித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அது அந்தப் பதவிக்குத் தரப்படும் மரியாதை. ஆனால், அரிதாக மக்களவைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட்டதும் உண்டு. முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற 1952, பிறகு 1967, 1976 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தலைவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • 48 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது குரல் வாக்கெடுப்புத் தேர்தல் மூலம் பாஜகவைச் சேர்ந்த ஓம் பிர்லா மக்களவைத் தலைவராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது.
  • இதுவே, தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலை ஏற்படுத்திவிட்டது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதே நேரத்தில், மக்களவையில் குரல் வாக்கெடுப்புக்குப் பதிலாக ஒவ்வோர் உறுப்பினர் வாக்கையும் பதிவுசெய்யக் கோரும் வாக்குப் பதிவை (division of votes) முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தாதது ஆறுதல் அளிக்கிறது.
  • மக்களவையில் துணைத் தலைவர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படுவதும் மரபு சார்ந்த நடைமுறைதான். 2014இல் மோடி அரசு முதல் முறையாகப் பதவியேற்றபோது, ஆளும் கூட்டணியில் இல்லாவிட்டாலும் 37 தொகுதிகளை வென்றிருந்த அதிமுகவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. 2019 தேர்தலுக்குப் பின் அமைந்த 17ஆவது மக்களவையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாகத் துணைத் தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டது சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
  • வாஜ்பாய் காலத்தில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் பதவியேற்றபோது துணைத் தலைவர் பதவி பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2004இல் அகாலி தளத்துக்கும், 2009இல் பாஜகவுக்கும் அந்தப் பதவி வழங்கப்பட்டது.
  • ஆனால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தபோது துணைத் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படவில்லை என்பதை பாஜகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். என்றாலும், பாஜக முன்னோடியான அடல் பிஹாரி வாஜ்பாயை இந்த விஷயத்தில் ஆளும் தரப்பு பின்பற்றியிருக்கலாம்
  • பெரும்பாலும் சட்டமன்றங்களின் துணைத் தலைவர் பதவியை மாநில ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சிக்கு வழங்குவதில்லை. இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இதே நிலைதான். எனில், மக்களவையைப் போல் சட்டமன்றங்களிலும் எதிர்க்கட்சிக்கு உரிய மதிப்பளிக்கும் மரபு பின்பற்றப்பட வேண்டியதில்லையா என்னும் கேள்வி எழுகிறது.
  • மக்களவைத் தலைவருக்குத் தேர்தல் நடைபெற்றுவிட்ட நிலையில், துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்குத் தந்து மரபைக் காப்பாற்ற ஆளுங்கட்சி முன் வர வேண்டும். ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இரண்டு தரப்பும் இணைந்துதான் ஜனநாயகம் என்கிற தேரை இழுத்தாக வேண்டும். ஜனநாயகத்தின் உயரிய இடமான மக்களவையில் அதை வெளிப்படுத்தும் நடைமுறைகள் நிகழ்வதே அதை உறுதிப்படுத்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories