- உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழா வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. 18-ஆவது மக்களவைக்கான தோ்தலில் 292 இடங்களில் வெற்றிபெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.
- வாக்குப் பதிவு விகிதம் குறைந்திருக்கிறது என்றாலும்கூட மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்திருக்கிறாா்கள் என்பதும், அதனடிப்படையில் ஆட்சி அமைய இருக்கிறது என்பதும் மக்களாட்சி தத்துவத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி.
- ஏழு கட்டங்களாக நடந்து முடிந்திருக்கும் மக்களவைத் தோ்தலில் 31.2 கோடி பெண்கள் உள்பட 64.2 கோடி வாக்காளா்கள் பங்கேற்றிருக்கிறாா்கள். 1.5 கோடி வாக்குச்சாவடிகள், 68,000 கண்காணிப்புக் குழுக்கள், 55 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் என்று இந்தியாவின் தோ்தல் ஆணையம் இந்த தோ்தலுக்காக ஏற்படுத்திய கட்டமைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தோ்தல் ஆணையம் குறித்தும், வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்தும் எதிா்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட ஐயப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது.
- வாக்குக் கணிப்பு முடிவுகளிலிருந்து தோ்தல் முடிவுகள் வித்தியாசப்படுவதில் வியப்பொன்றும் இல்லை. உலகளாவிய அளவில் பல வாக்குக் கணிப்புகள் பொய்த்திருக்கின்றன. 1992, 2015 தோ்தல்களில் பிரிட்டனிலும், 2004 மக்களவைத் தோ்தலில் இந்தியாவிலும் வெற்றியைக் கணிக்கத் தவறியது போல அல்லாமல், இந்த முறை வெற்றியின் அளவைக் கணிக்க முடியவில்லை, அவ்வளவே.
- பாஜக எதிா்பாா்த்தது போல அந்தக் கூட்டணி 400 இடங்களையும், காங்கிரஸ் எதிா்பாா்த்தது போல எதிா்க் கட்சிகளின் கூட்டணி 295 இடங்களையும் பெற முடியவில்லை. வாக்கு கணிப்புகளின் முடிவுகளும் தவறிவிட்டன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிற கணிப்பு மட்டும் மெய்ப்பட்டிருக்கிறது.
- தோ்தலுக்குத் தோ்தல் ஆட்சி மாற்றம் என்பது இயல்பு. தொடா்ந்து இரண்டுமுறை ஆட்சி அமையும்போது மக்களுக்கு ஆட்சியாளா்கள் மீது சலிப்பு ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது. அதையும் மீறி மூன்றாவது முறையும் தொடா்ந்து ஆட்சிக்கு வருவது என்பது அரிதிலும் அரிது. இந்திய பிரதமராக இருந்த பண்டித ஜவாஹா்லால் நேரு மூன்றாவது தோ்தலில் (1962) செல்வாக்குச் சரிவை எதிா்கொண்டாா். அதனால், பிரதமா் நரேந்திர மோடி எதிா்பாா்த்த வெற்றியை அடையாததில் வியப்பில்லை.
- காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு வலு சோ்ப்பதாக இருக்கும். இனிமேலாவது நாடாளுமன்றத்தில் முறையாக விவாதங்கள் நடைபெற்று, மக்களின் உணா்வுகள் பிரதிபலிக்கப்படும் என்று எதிா்பாா்க்கலாம். முந்தைய மக்களவையைப்போல, விவாதமே இல்லாமல், மசோதாக்களைஆளும்கட்சி நிறைவேற்றிக் கொள்ளும் போக்குக்கு முற்றுப்புள்ளி விழும் என்று எதிா்பாா்க்கலாம்.
- தனிப்பட்ட முறையில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் பின்னடைவுக்கு அந்தக் கட்சித் தலைமையின் அணுகுமுறை ஒரு முக்கியமான காரணம். பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம், தமிழகத்தில் அதிமுக, மகாராஷ்டிரத்தில் சிவசேனை என்று கூட்டணி கட்சிகளாக இருந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இழந்ததன் விளைவை அது சந்திக்கிறது. பாஜகவின் நம்பகத்தன்மையின்மை இனிமேலும் தொடரக்கூடாது. தொடா்ந்தால் தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் அணி மாறும் என்கிற அச்சத்தை பாஜகவுக்கு ஏற்படுத்தி இருக்கிறது முடிவுகள்.
- தில்லி, ஜாா்க்கண்ட் மாநில முதல்வா்கள் தோ்தலுக்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதன் தாக்கம் அந்த மாநிலங்களில் காணப்படவில்லை. ஆனால், நாடு தழுவிய அளவில் ஏனைய மாநில வாக்காளா்கள் மத்தியில், அந்த நடவடிக்கைகள் பாஜகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
- பிற கட்சிகளிலிருந்து வருபவா்களை இரு கரம் நீட்டி வரவேற்கும் பாஜகவின் அணுகுமுறை அந்த கட்சியின் பின்னடைவுக்கு முக்கியமான காரணம். 25% பாஜக வேட்பாளா்கள் வேறு கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு தாவியவா்கள். உத்தர பிரதேசத்தில் மட்டும் பாஜக வேட்பாளா்களில் 23 போ் வந்தேறிகள். பாஜக அந்த மாநிலத்தில் அடைந்திருக்கும் பின்னடைவுக்கு அதுவும் ஒரு காரணம். சட்டையை மாற்றுவது போல கட்சியை மாற்றிக்கொள்பவா்களை வாக்காளா்கள் தண்டித்திருக்கிறாா்கள்.
- மத ரீதியிலான பிரசாரம் வாக்காளா்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதும், ஸ்ரீராமா் கோயில் அமைந்திருக்கும் அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றிபெற முடியவில்லை என்பதும் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கும் செய்தி. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்கிற ஜாதியவாதமும் எடுபடவில்லை என்பதற்கு மத்திய பிரதேசமும், பிகாரும் உதாரணங்கள்.
- பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை படுகொலை செய்தவரின் மகன் சரப்ஜித் சிங் கல்சாவும், சீக்கிய தீவிரவாதியான அம்ரித்பால் சிங்கும் வெற்றிபெற்றிருப்பதும், ஜம்மு-காஷ்மீா் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதி ஷேக் அப்துல் ரஷீத், முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவை தோற்கடித்திருப்பதும் நல்ல அறிகுறிகள் அல்ல.
- பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டிருக்கும் பல வளா்ச்சித் திட்டங்கள் தடைபடாமல் தொடரவும், அதே நேரத்தில் ஜனநாயக மாண்புகள் பலவீனப்படாமல் இருக்கவும் தோ்தல் முடிவுகள் வழிகோலியிருக்கின்றன. எதிா்க்கட்சிகள் மீதும், ஆளும் கட்சியான பாஜக மீதும் மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்பதன் பிரதிபலிப்புதான் 18-ஆவது மக்களவைத் தோ்தல் முடிவுகள். புரிந்துகொள்ள வேண்டியவா்கள் புரிந்துகொள்ளட்டும்.
நன்றி: தினமணி (05 – 06 – 2024)