TNPSC Thervupettagam

மக்களாட்சி குறித்த கல்வியின் தேவை!

August 2 , 2019 1982 days 1565 0
  • மானுடம் தன்னை ஆள்வதற்காக கண்டுபிடித்த அமைப்புகளுள் தலைசிறந்த அமைப்பாக இன்றுவரை திகழ்வது மக்களாட்சி. இந்த ஆட்சியில் குறைகளில்லாமல் இல்லை. இருந்தும் இதைவிடச் சிறந்த அமைப்பை நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆட்சியிலுள்ள குறைகளுக்கு அமைப்பு காரணமாக இருக்க முடியாது; இந்த அமைப்பை இயக்கும் மனிதர்களின் குறைகள்தான் காரணங்களாக விளங்குகின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது.
  • மக்களாட்சியின் முழு சக்தியையும் பயன்படுத்திக் கொள்கின்ற திறமை மற்றும் ஆற்றல் சமூகத்தில் மிகவும் குறைவு என்பதைத்தான் ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகின்றன. சமூகத்தில் மக்களாட்சி பற்றிய அறிவும், அதனைப் பயன்படுத்தும் ஆற்றலும் அதிகரிக்க அதிகரிக்க மக்களாட்சியால் கிடைக்கும் நன்மைகள் அதிகரிக்கும்.

மானுடம்

  • எனவே, எந்தச் சமூகத்தில் இந்த அறிவையும், ஆற்றலையும் வளர்க்கும் கல்வி மக்களுக்குத் தரப்படுகிறதோ அங்கெல்லாம் மானுடம் மேம்படுவதையும் நல்ல வாழ்க்கைச் சூழல் அமைவதையும் மக்கள் மரியாதையுடைய வாழ்க்கை வாழ்வதையும் பார்த்து வருகிறோம். எங்கு மக்களாட்சி பற்றிய அறிவும் ஆற்றலும் குறைவாக உள்ளதோ அங்கு மக்களாட்சி மாசுபடுவதையும், சிதைவதையும், திரிவதையும் நாம் பார்த்து வருகிறோம். ஒரு சமூகம் மக்களாட்சிக்குள் வந்துவிட்டால் அந்த ஒட்டுமொத்த சமூகமும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.
  • பொதுவாக எந்தச் சமூகம் மக்களாட்சிக்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறதோ, அந்தச் சமூகங்கள் மட்டுமே மக்களாட்சியின் உன்னதங்களைப் பயன்படுத்தி முழுப் பயனையும் அடையும் தகுதியைப் பெறுகின்றன. ஏனென்றால், மக்களாட்சிக்கான போராட்டங்களை நடத்துவதன் மூலம் சமூகம் அதற்கான புரிதலை ஏற்படுத்திக்கொண்டு விடுகிறது. அப்படி போராட்டங்களை சமூகங்கள் நடத்தாமல் சமூகத்திற்கு வழிகாட்டும் தலைவர்களால் மக்களாட்சி கொண்டுவரப்பட்டால், மக்களை விரைவில் ஜனநாயகப்படுத்திவிட வேண்டும்.
  • அப்படிச் செய்யாத நிலையில் சமூகம் இருட்டில் வெளிச்சத்துக்காக மக்கள் ஏங்கி நிற்பதுபோல் தலைமைக்காக ஏங்கி நிற்கும் சூழல் உருவாகிவிடும். இன்று அதைத்தான் நாம் பல நாடுகளில் பார்த்து வருகிறோம். இந்தியாவிலும் இந்தச் சூழலைச் சந்தித்துக் கொண்டுள்ளோம்.
  • இன்று நம் முன் நிற்கும் ஊழல் அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது, நம் முன் நிற்கும் கிரிமினல் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது, நமக்கு ஏன் இந்த இழிநிலை என்று எண்ணத் தோன்றும்.

தலைவர்கள்

  • மகாத்மா காந்தியும், ஜவாஹர்லால் நேருவும், வல்லபபாய் படேலும், சாஸ்திரியும், ராஜேந்திர பிரசாத்தும், காமராஜரும், கக்கனும் படிப்பறிவில்லா மக்கள் அதிகம் வாழ்ந்த நேரத்தில் வழிகாட்டி கட்டமைத்த நாட்டில், இன்று ஏன் இப்படி ஒரு இழிநிலை நம் அரசியலுக்கு என்று நினைக்கிறபோது, நாம் எங்கு தவறினோம் என்று சிந்தித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
  • மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சி. மக்களாட்சியில் அதன் செயல்பாடுகளுக்கு மூலமாக விளங்குவது மக்கள். மக்களாட்சியில் மக்கள் எஜமானர்கள். அவர்கள் பொறுப்புமிக்க குடிமக்கள். அவர்களுக்கென்று கட்டாயக் கடமைகளும், விருப்பக் கடமைகளும் இருக்கின்றன. அந்தக் கட்டாயக் கடமைகளையும் விருப்பக் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கான புரிதல் குடிமக்களுக்கு அரசியல் கல்வி புகட்டுவதன் மூலம்தான் பெற முடியும்.
  • இந்தப் புரிதலை மக்களாட்சியில் மேம்பட்டிருக்கும் நாடுகளில் மக்களாட்சியின் மாண்புக்காக போராட்டங்கள் மூலமாகவும், கல்வியின் மூலமாகவும் ஏற்படுத்தி மக்களை செயல்திறன் மிக்க குடிமக்களாக வாழ வழிவகை செய்துள்ளனர். பெரும்பாலான நாடுகளில் பொதுமக்களை செயல்திறனற்ற வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக வைத்து, தாங்கள் அரசாங்கத்தின் பயனாளிகள், பயன்கள் கிடைக்கவில்லையென்றால் மனுதாரர்கள் என்ற மனோபாவத்தை பொதுமக்களிடம் உருவாக்கி மக்களாட்சியில் தங்களுக்குப் பெரும் பங்கு இருப்பதை மறந்து வாழ அரசியல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவுதான் 80 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தும் மக்களாட்சிக்கான பொதுப் புரிதலும், அறிவும் திறனும் அற்றவர்களாக வாக்காளர்களாக மட்டுமே நினைத்து குறைந்தபட்சக் கடமைகளைக்கூட நிறைவேற்ற இயலாத நிலையில் நம் குடிமக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம்.
  • இப்படி நாம் கூறும்போது எதோ நாம் படிக்காதவர்கள் குறித்துக் கூறுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்றைய சூழலில் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் பெரும்பாலானோர் குறைந்த அளவே அரசியல் அறிவும் ஆற்றலும் பெற்றவர்களாகவே விளங்குகின்றனர்.
  • தன் விளைவுதான், மிகச் சிறந்த ஆற்றல் பெற்ற ஒரு மருத்துவர் எந்தச் சமூகச் சிந்தனையும் அற்றவராகச் செயல்படுவதை நாம் பார்த்து வருகிறோம். மக்களாட்சியில் எவரானாலும் சமூகச் சிந்தனையுடன் சமூக நலனில்தான் தன்னலம் அடங்கியுள்ளது என்ற புரிதலை ஏற்படுத்திக் கொண்டு செயல்படவில்லை என்றால் எந்தச் செல்வந்தரும் மேம்பட்ட வாழ்க்கையை வாழ முடியாது.
  • இந்தப் பொதுநலம் பற்றிய புரிதலைத்தான் அரசியல் கட்சிகள் ஏற்படுத்த வேண்டும். பொது நலம் பற்றிய புரிதல் நம் மக்களுக்கு இல்லாததன் விளைவுதான் இன்று 85 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தும் சுயநலம் மேலோங்கி தன் சுகம், தன் குடும்பம் என்ற அடிப்படையில் பொதுநலச் செயல்பாடுகளை நிராகரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
  • பொதுச் செயல்பாடுகளுக்கு வருவதற்கு கூலி அல்லது சன்மானம் கேட்கும் அளவுக்கு மக்களின் மனநிலையை உருவாக்கிவிட்டது நம் அரசியல் கட்சிகள். இந்த நாட்டில் முந்தைய காலங்களில் எழுத, படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் இருந்தபோதும், வறுமையின் உச்சத்தில் வாழ்ந்தபோதும், நம் மக்கள் பொதுப் பங்களிப்பைச் செய்ய மறுத்ததில்லை. அதற்காக எவரிடமும் சன்மானத்தை எதிர்பார்க்கவில்லை.
  • ஏனென்றால், அப்படிப்பட்ட தலைவர்கள் அவர்களுக்கு வழிகாட்டினார்கள். அந்தத் தலைவர்களின் வாழ்க்கை, அவர்கள் உருவாக்கிய விழுமியங்கள், அவற்றை அவர்கள் பின்பற்றி வாழ்ந்த வாழ்க்கை பொதுமக்களை அவர்களின்பால் ஈர்த்தது; அவர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து அவர்கள் காட்டிய வழியில் நடந்து காட்டியதை நம் சுதந்திரப் போராட்ட காலத்தில் பார்த்துள்ளோம்.
  • ஆனால், இன்று நாமும் நம் சமூகமும், நம் அரசியலும் எங்கே உள்ளது என்று எண்ணும்போது நமக்கு மிஞ்சுவது வேதனைதான்.
  • நம் கட்சிகள் இன்று கம்பெனிகளாக மாறிவருவதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம். கட்சிகளின் தலைவர்கள் கம்பெனிகளின் தலைவர்கள் மற்றும் செயல் இயக்குநர்கள்போல் நடந்துகொள்வதைப் பார்த்து, கட்சிகளுக்குள் வருபவர்களும் எவ்வளவு மூலதனத்துடன் கட்சிக்குள் புகுந்து தேர்தல் மூலமாக அதிகாரத்தைப் பிடித்து எவ்வளவு லாபத்துடன் வெளியில் வருவது என்று சிந்தித்து கட்சிக்காரர்கள் செயல்படுவதைப் பார்த்த பொதுமக்கள், நம் கட்சித் தலைவர்களைப் பணம் காய்க்கும் மரங்களின் சொந்தக்காரர்களாக நினைக்கின்றார்களேயன்றி, தலைவர்களாக நினைக்கவில்லை.
  • அதன் வெளிப்பாடுதான் பொதுக்கூட்டமா எனக்குக் காசு கொடு, கட்சிச் செயல்பாடா, எனக்குக் காசு கொடு, வாக்கு வேண்டுமா எனக்குக் காசு கொடு என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்துவிட்டனர். இதற்கும் காரணம் நம் அரசியல் கட்சிகள்தான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
  • ஏனென்றால், இன்று நம் கட்சிகள் நடத்தும் அரசியல் மக்களை வைத்து...மக்கள் அரசியல் நடத்தவில்லை. சந்தையிலிருந்து வரும் பணத்தில் நடத்தும் சந்தை அரசியலில் பொதுமக்களும் ஒரு சந்தைப்படுத்தப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு விட்டனர். இதன் விளைவுதான் நாம் இன்று பார்க்கும் மக்களாட்சிச் சிதைவுகள். இந்த நிலையிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை.
    ஆனால், அதை எப்படிச் செய்வது என்பதுதான் இன்றைய கேள்வி.
  • இது மந்திரத்தால் வருவதல்ல. திட்டமிட்ட செயல்பாட்டால் உருவாக்கப்படல் வேண்டும்.
    மக்களாட்சிக்கான பாடத் திட்டத்தை எல்லாத் தரப்பு மாணவர்களுக்கும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது, அந்தப் பாடத்திட்டம் என்பது மக்களாட்சியில், சமூகத்துக்கான குடிமக்கள் செயல்பாடு என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டு எல்லாத் துறையில் படிக்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டும்.
  • அது அறிவியல் படிப்பாக இருந்தாலும், மருத்துவப் படிப்பாக இருந்தாலும், வேளாண் படிப்பாக இருந்தாலும், எந்தத் துறையில் படிக்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டும். அந்தப் பாடத்திட்டத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள், நேர்மை, நியாயம், நீதி, கருத்துகளை வாங்குதல், எதிர்க்கருத்தையும் மதித்தல் போன்ற அடிப்படை விழுமியங்களை செறிவான முறையில் புகுத்தி, அந்த விழுமியங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் முறைகளையும் கற்பிக்க வேண்டும். அத்துடன் நம் சமூகம் எந்த அளவுக்கு மக்களாட்சிக்கு எதிரான பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளது என்பதையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

சிந்தனை

  • நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் சிந்தனையில், நடத்தையில் செயல்பாடுகளில் பிரதிபலிக்குமாறு தயார் செய்யப்பட வேண்டும். இந்த விழுமியங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளுக்குப் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
  • இல்லையேல் நம் அரசியல் கட்சிகள் மடங்கள் போலும், கம்பெனிகள் போலும், அரசியலை சந்தைப்படுத்துமேயன்றி ஜனநாயகப்படுத்தாது. இந்தக் கல்விதான் இன்று நமக்குத் தேவை.

நன்றி: தினமணி (02-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories