- மக்களாட்சியின் மாண்பினை உறுதிப்படுத்தும் அடிப்படைக் கூறுகளில் ஒன்று சபைகளில் வைக்கும் அறிவார்ந்த விவாதங்கள். இந்த அறிவார்ந்த விவாதங்கள்தான் ஒரு ஜனநாயகத்தை உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் கருவி.
ஆனால், இந்த உயர்ந்த நிலையை ஒரு ஜனநாயக நாடு அடைய வேண்டுமேயானால் அதற்கு மிக முக்கியத்தேவை அந்த நாட்டு மக்களுக்கு அரசியல், அரசாங்கம், ஆளுகை, நிர்வாகத்தின் கட்டமைப்புகள் குறித்து ஒரு பொதுப் புரிதல் தேவை.
மக்களாட்சி நடைபெறும் நாட்டில் பொதுமக்களுக்கு அரசியல், ஆளுகை, அரசு மற்றும் நிர்வாகம் பற்றி பொதுப் புரிதல் ஏற்பட்டுவிட்டால், அந்த நாட்டில் மக்கள் தங்களுக்கு யார் தலைவராக வரவேண்டும், யார் பிரதிநிதியாக வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதைத் தீர்க்கமாக முடிவெடுத்து தங்கள் தலைவர்களையும், பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
- அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தாங்கள் உறுப்பினராக இருக்கின்ற மன்றங்களில், முடிவெடுக்கும்போது, தலையாட்டி பொம்மைகளாக இல்லாமல், அறிவுசார்ந்த விவாதங்களை முன்வைக்கத் தவற மாட்டார்கள். ஏனெனில், தங்களுக்கு வாக்களித்த மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள், தங்களை கண்காணிப்பார்கள், தங்கள் செயல்பாடு சரியில்லை என்று தெரிந்தால் கேள்வி கேட்பார்கள், மீண்டும் நின்றால் நம்மைத் தோற்கடித்து விடுவார்கள் என்ற பயம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கும்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள், உள்ளாட்சி மன்றங்கள்
- பொதுவாக மக்களாட்சியில் முடிவெடுக்கும் மன்றங்களாக விளங்கும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள், உள்ளாட்சி மன்றங்கள் அனைத்தும் அறிவார்ந்த விவாதங்களுக்குப் பிறகு, விவாதத்தின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் என்பதுதான் கோட்பாடு. ஒரு முதிர்ந்த மக்களாட்சியில் எண்ணிக்கை என்பது அடிப்படை அல்ல, விவாதத்தின் உண்மைத் தன்மை என்பதுதான் ஒரு முடிவைத் தீர்மானிக்கும் காரணியாக விளங்கும்.
- இந்த நிலைக்கு ஒரு நாடு வந்து விட்டால் அது மேன்மை பெற்ற மக்களாட்சி நாடு எனப் போற்றப்படும். இந்த நிலையை எட்டுவதற்கு ஒரு நாடு தன்னை மிகப் பெரிய தயாரிப்புக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு அறிவு, பக்குவம், ஒழுக்கம், தியாகம், துணிவு ஆகியவை தேவை. இந்தப் பண்புகள் குடிமக்களுக்கும் தேவை, அவர்களால் மக்கள் மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கும் தேவை. இவர்களை வழிநடத்தும் தலைவர்களுக்கும் தேவை.
- இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து, மக்களாட்சி குறித்து ஜான் ஸ்டுவர்ட் மில் விளக்கும்போது, மக்களாட்சி என்பது வல்லமை கொண்ட ஓர் ஆட்சிமுறை, இதைக் கையாள்வதற்கு வல்லமை கொண்ட சமுதாயங்கள் உருவாக்கப்பட வேண்டும், அப்படிப்பட்ட சமுதாயங்கள் உலகில் ஒருசில நாடுகளில்தான் இருக்கின்றன என்று கூறினார்.
- இந்தக் கருத்தைக் கூறியதன் காரணமாக அறிஞர்களின் கண்டனத்துக்கு அவர் ஆளானார். குறிப்பாக, இந்தப் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை கையாளும் திறமை மேற்கத்திய சமுதாயத்துக்கு மட்டும்தான் உள்ளது என்ற கோணத்தில் அவர் கூறியதால் அனைவரும் விமர்சனம் செய்தனர்.
கருத்துகள்
- அதற்குப் பதில் அளிக்கும்போது, "நான் கூறுவதை எதிர்காலத்தில் மக்களாட்சி நடைபெறும் நாடுகளை ஆய்வு செய்து முடிவு செய்து கொள்ளுங்கள்' என்று கூறி விமர்சனத்துக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாலும், அறிவுஜீவிகள் தொடர்ந்து அவர் வைத்த கருத்துகளை ஆய்வு செய்வதை நிறுத்தவில்லை. தொடர்ந்து ஆய்வு செய்தபோது அவர் அன்று செய்த விமர்சனம் முற்றிலும் தவறு என்று யாராலும் கூற முடியவில்லை.
- மக்களாட்சியை நீண்ட நாள்களாகக் கடைப்பிடித்த பல நாடுகளில் அது சிதிலமடையத் தொடங்கி, சீரமைப்புச் செய்ய நிறுவனங்களை உருவாக்கி வருகின்றனர். நம் நாட்டிலும் மக்களாட்சியின் பண்புகள் சிதிலமடைவதை கடந்த முப்பது ஆண்டுகளாக மக்களாட்சி பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.
இந்தக் கருத்துகளை நம் நாட்டுத் தலைவர்களும் மேற்கோள் காட்டிப் பேசியும் எழுதியும் வருகின்றனர். இருந்தபோதிலும் நம் நாட்டில் இதற்கான எந்தச் சீரிய முயற்சியும் பெரிய அளவில் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்தச் சூழலைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் நமக்குத் தேவை.
- இதற்கு முதல் நிலையில் நாம் செய்ய வேண்டியது நம் பிரதிநிதிகளின் திறன் காட்டப்பட வேண்டும். இவர்களுக்கு கடுமையான தொடர் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அப்படி அளித்தால் மட்டுமே நம் மக்கள் பிரதிநிதிகள் அறிவார்ந்த அறிவியல்பூர்வமான விவாதங்களை உருவாக்குவார்கள். இல்லையெனில் வசை பாடுதல் மன்றமாகவும், லாவணி மன்றமாகவும், புகழ் பாடும் மன்றமாகவும் மட்டுமே நம் நாடாளுமன்றமும் சட்டப்பேரவைகளும் செயல்படும்.
- இந்தத் தயாரிப்பு நடந்துவிட்டால் நம் மக்கள் பிரதிநிதிகள் கடினமாக உழைத்து முடிவெடுக்கும் மன்றங்களில் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நன்மை கருதி அறிவார்ந்த விவாதங்களை உண்மையின் அடிப்படையிலும் தரவுகளின் பின்னணியிலும் அறிவியல்பூர்வமாக எடுத்து வைத்து முடிவெடுக்க உதவுவார்கள்.
- இந்தப் பிரதிநிதிகளின் விவாதங்கள்தான் ஒரு மன்றத்தை முடிவுகளை நோக்கி இட்டுச் செல்லும். இதற்கு நம் பிரதிநிதிகளுக்கு எந்த மன்றத்திலிருந்தாலும் ஒரு தயாரிப்பு தேவை. முடிவெடுக்கும் மன்றங்களில் விவாதம் செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அடுக்கு மொழியில் பேசுவதோ, அலங்காரமாகப் பேசுவதோ, உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதோ முக்கியமல்ல.
ஜனநாயகம்
- உண்மையின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், அறிவியல்பூர்வமாக அசைக்க முடியாத கருத்துகளை எடுத்து வைத்து மன்றத்தை முடிவை நோக்கி இட்டுச் செல்ல வைப்பதற்கு மிகப் பெரிய தயாரிப்பு தேவை. அந்தவிதத் தயாரிப்பை இன்று நம் நாடாளுமன்ற சட்டப்பேரவை, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் செய்கின்றார்களா என்று கேட்டால், "ஆம்' என்று எவராலும் சொல்ல முடியாது.
- இன்று இந்த மாமன்றங்கள் அனைத்தும் உண்மையைப் பிரதிபலிக்கும் விவாதங்களை மன்ற உறுப்பினர்களிடமிருந்து பெற முடியவில்லை.
காலத்தையும், பணத்தையும் விரயம் செய்யும் மன்றங்களாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை ஆராய்ச்சி அமைப்புகளும், ஊடகங்களும் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
- நாடாளுமன்ற ஜனநாயகம் இன்று எண்ணிக்கை ஜனநாயகமாக மாற்றப்பட்டுவிட்டது. முடிவெடுப்பதற்குத் தேவையான எண்ணிக்கை இருக்கிறது; எனவே, எந்த முடிவையும் எடுப்பேன்; விவாதமோ கருத்தோ எனக்குத் தேவையில்லை என்று கருதிச் செயல்படும் நிலை வருந்தத்தக்கது; அதேபோல், வாதத் திறமையால் உண்மைக்குப் புறம்பானவற்றை எடுத்து வைத்து, தன் விவாதத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகின்ற நிலையும் வருந்தத்தக்கது.
- எல்லா விவாதங்களின் பின்புலத்தில் உண்மையை நிறுத்திவிட்டால், அதுதான் ஆட்சியாளரின் மனதை உலுக்கும் வல்லமை கொண்ட செயல்பாடாகும். இன்று எல்லா மன்றங்களும் கூடிக் கலையும் மன்றங்களாக மாற்றப்பட்டுவிட்டன. அதே நேரத்தில் மன்றச் செயல்பாடுகளுக்காக மக்களின் வரிப் பணம் வாரி இறைக்கப்படுவதையும் நாம் பார்க்கிறோம். மன்றம் கூடியது, கலைந்தது, எந்தச் செயல்பாடும் நடைபெறவில்லை, இருந்தும் உறுப்பினர்களுக்கான தொகை வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இருக்கும் மிகப் பெரிய முறைகேடு; இருந்தபோதிலும் அதை ஓர் உத்தியாகவே நம் அரசியல் கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன.
- நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளின் விவாதங்கள் என்பது ஆராய்ச்சி செய்யப்பட்ட கருத்துக் கோவைகளாக இருக்க வேண்டும். அவை அனைத்தும் எதிர்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டும் பாடமாக விளங்க வேண்டும். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எட்மண்ட் பர்க் பிரிஸ்ட்டோல் தொகுதி உறுப்பினராக இருந்து பேசிய பேச்சுகள் அரசியல், அறிவியல், வரலாறு, இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வடிவமைத்து போதிக்கின்றன. உலகத்தில் பல பல்கலைக்கழகங்கள்.
விவாதங்கள்
- நம் நாட்டிலும் கூட அப்படிப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளின் பேச்சுகள் முதல் மூன்று, ஐந்தாண்டுகளில் பார்க்க முடிந்தது. அந்த விவாதப் பேச்சுகள் என்பது மிகப் பெரிய ஆய்வுக்குப்பின் உருவாக்கப்பட்டவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட விவாதப் பேச்சுகளை உருவாக்க ஒரு மனோபாவம், ஒரு பார்வை, அதற்கான திறன், கடின உழைப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக உண்மை இருக்க வேண்டும். இந்த நிலையை உருவாக்க ஒரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். அந்தக் கலாசாரம் என்பது உண்மையை நோக்கிச் செல்லும் பயணமாக இருக்க வேண்டும்.
- இதற்குத் தேவை ஒரு துணிவு, நாட்டின் மேல் அக்கறை, தன்னலமற்று இயங்கும் ஒரு மனோபாவம், பிரச்னைகளைப் பார்க்க ஒரு பார்வை, இவை அனைத்தும் ஓர் உயர் நிலை ஆத்ம சக்தியிடமிருந்து புறப்பட வேண்டும். இதற்கான சூழல் இன்றுள்ளதா, உருவாக்க முடியுமா, யார் அதற்கு வித்திடுவது என்பது தான் நம் முன் நிற்கும் கேள்விகள்.
நன்றி: தினமணி (09-09-2019)