TNPSC Thervupettagam

மக்களாட்சி யாருக்கானது

August 2 , 2023 399 days 344 0
  • ஜோசுவா குர்லாண்ட்சிக் எழுதிய "பின்வாங்கும் மக்களாட்சி' என்ற நூலை வாசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. இந்த நூல் இன்றைய உலக மக்களாட்சி சூழலைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. உலக அளவில் மக்களாட்சி எப்படி சிதைவுறுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் நூல்தான் இது.
  •  இன்று உலகம் முழுவதும் ஒரு கூக்குரல் கேட்கிறது. "மக்களாட்சிக்கு ஆபத்து, மக்களாட்சி சிதிலமடைகிறது' என்று அரசியல் கட்சிகள் விவாதிக்கின்றன. இந்தியாவிலும்கூட அப்படிப்பட்ட கூக்குரல் ஒலிக்கிறது. நீண்ட காலமாக இந்திய மக்களாட்சி குறித்து பெரும் ஆய்வுகளை நடத்தும் சுகாஷ் பல்சீக்கர் வழி தவறும் மக்களாட்சி, யாருக்கான மக்களாட்சியை நாம் இந்தியாவில் கட்டமைக்கிறோம், யாருடைய மக்களாட்சி குறித்து நாம் விவாதிக்கிறோம் என்று பேசியும் எழுதியும் வருகிறார்.
  • அவர் பேசும் பல கருத்துகள் இன்று உலகளாவிய நிலையில் "பின்வாங்கும் மக்களாட்சி' என்ற நூலில் விவாதிக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் மக்களாட்சி குறித்து ஆய்வு செய்பவர்கள் இன்றைய பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது வலுவிழந்து, தாழ்வு நிலை நோக்கி நகர்ந்து வருவதைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர். பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை மறுக்கவில்லை. இந்தியாவில் மிகப் பெரும் பொதுக் கருத்தாளர்கள் இந்தக் கருத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
  • இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிநிதிகளைக் கொண்டு நடத்தப்படும் அரசாங்கம், தன் ஆளுகையை வலுவாக கட்டமைத்து ஆளுகைக்கு வலுச் சேர்த்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை கூட்டுவதில் கவனம் செலுத்துவதற்குப் பதில், தேர்தலை நோக்கிய ஓர் அரசியலை கட்டமைத்து, அந்தத் தேர்தலுக்கு நிதி என்ற பெயரில் பெரும் ஊழலில் ஈடுபட்டு அதன் விளைவாக ஆட்சியும் நிர்வாகமும் சிதைவுறும் நிலைக்கு வந்துவிட்டது என்பது விவாதப் பொருளாக்கியுள்ளது.
  • இந்த ஊழல் என்பது ஒரு நிலை வரை கட்சியை பலப்படுத்துவதற்காகவே நடந்தது. அடுத்த நிலையில் ஊழலில் பெரும்பணம் வர ஆரம்பித்தவுடன் அந்த ஊழல் பணம் குடும்ப வளர்ச்சிக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டது. இந்த நிலைதான் ஒட்டுமொத்த மக்களாட்சியின் சிதைவுக்குக் காரணமாகிறது. புதிதாக மக்களாட்சிக்குள் வந்த நாடுகள் தேர்தலை முன்னிலைப்படுத்தித்தான் மக்களாட்சிக்கு வருகிறோம் என்று பிரகடனப்படுத்தி வந்தன.
  • ஆனால், மக்களாட்சிக்குள் வந்து மக்களாட்சியில் ஒவ்வொரு நிலையாக உயர்வதற்குப் பதில், 50 அல்லது 60 ஆண்டுகளைக் கடந்து, தேர்தலைத் தாண்டி மக்களாட்சியின் அடிப்படை விழுமியங்களைக் கடைப்பிடிப்பதில் சமூகத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை. இந்தச் சூழல்தான் அரசியல் கட்சிகளின் கருத்து வறட்சியை எடுத்துக்காட்டுகிறது. மக்களாட்சி அரசியலில் எந்தப் புதுமையையும் காண முடியவில்லை.
  • அடுத்து தேர்தலையே மையப்படுத்திய காரணத்தால், அதற்காகவே நிதி திரட்டும் அரசியல் செயல்பாட்டால் அரசியலில் மையப்படுத்தப்பட வேண்டிய கருத்தாக்கங்கள், கொள்கைகள் கோட்பாடுகள் புறந்தள்ளப்பட்டு, நிதி உருவாக்கம் ஆக்கிரமித்துக் கொண்டது. நிதி உருவாக்கம் அரசியல்வாதிகளின் சிந்தனையை ஆட்கொண்ட காரணத்தால் அரசியல் மக்களுக்கானது, மக்கள்தான் முதன்மையானவர்கள், மக்களாட்சியில் மக்களை அணுகுவதைத் தவிர மாற்று இல்லை என்ற நிலை மாறி, மக்களை நிதிக்கு வாங்கிக் கொள்ளலாம், நிதிதான் பிரதானம் என நம்பும் சிந்தனைப் போக்கு மேலோங்கிவிட்டது.
  • அந்த சிந்தனைப்போக்கு சந்தை அரசியல்வாதிகளிடம் விதைத்துவிட்டது. அது மட்டுமல்ல; நிதி திரட்டி வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்கி அதிகாரத்தைப் பெற்றுவிட்டால், நாம் பலம் பொருந்தியவர்களாகச் செயல்படலாம் என்ற அடுத்த சிந்தனைப் போக்கும் மக்களாட்சிக்கு எதிரான சூழலை உருவாக்கிவிட்டது.
  • அதிகாரத்துக்கு தேர்தல் மூலம் வந்தவர்கள், தான் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்ற சிந்தனையில் செயல்பட ஆரம்பித்துவிட்டனர். சட்டத்தின்படி ஆட்சி என்ற நிலை போய் ஆளுங்கட்சி சொல்வதுதான், செய்வதுதான் ஆளுகை மற்றும் நிர்வாகம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுவந்ததன் விளைவு, சட்டத்தை மீறும் ஒரு கலாசாரம் உருவாகி, எல்லையற்ற ஊழலில் ஆட்சியாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதை பலர் தெரிந்தே செய்தனர். சிலர் அறியாது செய்தனர்.
  • மக்களாட்சி அனைவருக்குமானது; ஆனால், இன்று நிதி உள்ளவர்களுக்குத்தான் வாய்ப்பு என்ற நிலை வந்ததால் ஏழை மக்களால் தேர்தலுக்குள் நுழைய இயலவில்லை. விளைவு, நாம் யாருக்கான மக்களாட்சியை விவாதிக்கிறோம் என்று மக்களாட்சிக் கோட்பாட்டாளர்கள் கேட்கின்றனர். ஏழை மக்களால் பங்குபெற முடியாத ஒரு மக்களாட்சி மங்குமே தவிர பொங்காது.
  • இன்றைய மக்களாட்சிச் சூழலில் - அதாவது, அரசியலிலிருந்து நல்லவர்கள், திறன் உள்ளவர்கள், ஏழைகள் அந்நியப்பட ஆரம்பித்தபோது அங்கு வந்து சேர்பவர்கள் பெரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள். குற்றப் பின்னணி கொண்டவர்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும்
  • சட்டப்பேரவைக்குள்ளும் பெருமளவில் நுழைந்துவிட்டனர். ஏறத்தாழ 44% சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறக்கூடியவர்களாக இருக்கும்போது அந்த நாடாளுமன்றமும் சட்டப் பேரவைகளும் எந்த அளவுக்கு மக்களின் சிந்தனையைக் கொண்டு நியாய உணர்வுடன் மக்களாட்சி அனைவருக்குமானது என்ற உணர்வுடன் செயல்படும்? இவற்றை அரசு கொண்டுவரும் தீர்மானங்களையும், சட்ட முன்வரைவுகளையும் முடிவுகளையும் ஆமோதிக்கும் மன்றங்களாக மாற்றிவிட்டனர். நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க வேண்டிய விவாத ஜனநாயகத்தைப் புறந்தள்ளி ஒரு சடங்கை மேற்கொள்கின்றனர்.
  • மக்களாட்சியில் இரண்டு விதமான அரசியல் செயல்படுகிறது. ஒன்று, மக்கள் அரசியல்; இரண்டாவது, அதிகார அரசியல். மக்கள் அரசியல் என்பது மக்களின் ஆதரவை நம்பிச் செயல்படுவது; மக்களைத் தயார்படுத்தி, மக்களின் பங்கேற்போடு நடத்தப்படும் ஓர் அரசியல். எதையும் மக்களை முன்னிறுத்திச் செயல்படுவது. அதிகார அரசியல் என்பது அதிகாரத்தை மையப்படுத்தி எந்த வழியிலாவது அதிகார மையங்களுக்குள் நுழைந்து, அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயல்படுவது. இதைத்தான் 50 ஆண்டுகால அரசியலில் நாம் பார்த்து வருகிறோம்.
  • ஆட்சியில் இருந்த கட்சிகள் நிர்வாகத்தில் தவறுகள் செய்யாமல் இருக்க முடியாது. இதை பொது நிர்வாகத்தின் தந்தை என போற்றப்பட்ட உட்ரோ வில்சன் கூறுகிறார். முறையாக தணிக்கைகள் நடைபெறும்போது நிர்வாகத்தில் தவறுகள் நடப்பது சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.
  • ஒரு காலம்வரை அந்தத் தவறுகளைப் பெரிதாக்கி அரசியல் கட்சிகள் அரசியல் செய்யவில்லை. காரணம், அந்தத் தவறுகளால் பெரும் பணம் கட்சிக்கும், அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் செல்லவில்லை. என்று பெரும் பணம் கட்சிக்கும், கட்சித் தலைவர்களுக்கும் பெருமளவில் செல்ல ஆரம்பித்ததோ, அப்போதுமுதல் அரசியல் கட்சிகள் அவற்றின் இயல்புத் தன்மையை இழந்து, வணிகம் செய்யும் நிறுவனங்கள்போல் ஊடகங்களைத் தங்களுக்காக உருவாக்கி, அந்த ஊடகங்கள் மூலம் தன் கட்சிக்கும் தலைவர்களுக்கும் பிம்பங்களைக் கட்டி ஒரு வணிக சாம்ராஜ்யத்தை கட்சிச் செயல்பாடுகளுக்குள் கொண்டுவந்து விட்டன. அரசியல் கட்சிகள் தங்களின் விளம்பரங்களைச் செய்ய விளம்பரக் கம்பெனிகளை நாடின.
  • இவை அனைத்தும் ஒரு முப்பது ஆண்டுகால உருவாக்கங்கள். இதன் பின்புலம் என்பது சந்தை யுகம் என்பதை பலர் முறையாகப் புரிந்துகொண்டு செயல்படுவதில்லை. இந்தப் புதிய சூழல்தான் பொதுமக்களுக்கும் கட்சிகளுக்கும் உள்ள உறவை போலியாக்கி விட்டது. அத்துடன் இது நிற்கவில்லை; கட்சிக்கும் கட்சிக்காரர்களுக்கும் உள்ள உறவையும் போலியாக்கி விட்டது.
  • கொள்கைகள், சித்தாந்தங்கள் குறித்த விவாதங்களை அரசியல் கட்சிகள் முன்னெடுப்பதற்குப் பதிலாக தேர்தலில் வெற்றி பெற நுணுக்கங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள் மக்கள் சேவையில் இணைந்திடுவதற்குப் பதிலாக, போரிடும் இரண்டு நாடுகள்போல் ஒருவரையொருவர் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்து, நீதிமன்றங்களுக்குச் சென்று நீதிமன்றத்தின் மூலம் ஒருவரையொருவர் பழிவாங்கும் வகையில் செயல்படுகின்றனர். இந்தப் போரில் நீதிமன்றத்தையும் தங்கள் தரம் தாழ்ந்த அரசியலில் உள்வாங்கிக் கொண்டுள்ளன அரசியல் கட்சிகள்.
  • ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகள் அரசின் நிர்வாகத்தில் சட்டப்படி ஆட்சி என்பதைத் தவிர்த்து, ஆளும் கட்சி தரும் வாய்மொழி உத்தரவை அமல்படுத்தும் ஏவலராக மாறிவிட்டது என்பதுதான் நாம் பார்க்கும் அரசியல் எதார்த்தம்.
  • இந்த சிதைவுற்ற மக்களாட்சியைச் சீரமைப்பது எப்படி என்பதுதான் இன்று அனைவர் முன் எழும் கேள்வி. பலர் தேர்தல் சீர்திருத்தத்தைச் செய்யுங்கள்; தேர்தல் அரசியலில் பெருமளவு மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்கின்றனர். ஆளுகையிலும் நிர்வாகத்திலும் சீர்திருத்தம் செய்யுங்கள்; பெருமளவு ஊழலையும் நிர்வாகச் சீர்கேட்டையும் தடுக்கலாம் என்று பலர் ஆலோசனை வழங்குகின்றனர்.
  • ஊழலுக்கான நீதி விசாரணையை விரைவு நீதிமன்றத்தின் மூலம் நடத்தி குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதும், குற்றப் பின்னணி உள்ளவர்களைத் தண்டிப்பதன் மூலம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விடலாம் என ஆலோசனை வழங்குகின்றனர். இன்றைய அரசியல் பிரச்னைகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை மூலம் தீர்வுகாண பலர் முயலுகின்றனர். ஆனால், எதுவும் நடைபெறவில்லை.
  • குற்றப் பின்னணி கொண்டோர் ஏன் அரசியலுக்குள் செல்கிறார்கள் என்றால், அங்கு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது என்பதால்தான். அரசியல் நடத்த குற்றப் பின்னணி கொண்டவர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். அந்த அளவுக்கு வன்முறை நிறைந்ததாக அரசியல் மாறிவிட்டது. மேலே குறிப்பிட்ட அனைத்துத் தீர்வுகளும் நாடாளுமன்றத்தின் புதிய சட்டங்கள் மூலமாக வரவேண்டும்.
  • அனைவரும் மக்களாட்சியைக் காப்பாற்றுவதாகப் பேசுகிறார்கள். எந்த மக்களாட்சியைப் பேசுகிறார்கள்? சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்து மக்களாட்சி நடைபெறும் நாட்டில் சமத்துவமின்றி, மரியாதையின்றி, அரசு தரும் பயன்களுக்காக கையேந்தி நிற்கிறார்களே- அவர்களின் மக்களாட்சி பற்றி ஏன் பேசுவதில்லை?
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம். அப்படியொரு சூழல் இன்று இருக்கிறதா? எல்லையற்ற ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தை கவ்வியுள்ளன. சமூக ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்த ஒரு நாடு, இன்று பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்பட்டு சமத்துவத்தை இழந்து தவிக்கும் சமூகங்கள் நிறைந்த நாடாக உள்ளது. எங்கே, எப்படி இந்த சமத்துவத்தை கொண்டுவருவார்கள் நம் ஆட்சியாளர்கள்?
  • உரிமைகளோ, சமத்துவமோ, சகோதரத்துவமோ, நீதியோ, நேர்மையோ மையப் பொருளாகக் கொண்ட ஒரு மக்களாட்சியைப் பேச இயலவில்லை. பேசுபொருளாக இன்று இருப்பது தேர்தல் ஜனநாயகம்; இந்த ஜனநாயகத்தில் ஆட்சிகள் மாறலாம், அடிப்படை மாறாது. எனவே, புதிய ஜனநாயகம் நோக்கி சமூகத்தை நகர்த்த நாம் செய்ய வேண்டியது, எது புதிய ஜனநாயகம் என்பதற்கான விவாதத்துக்குள் பயணிக்க வேண்டும்.

நன்றி: தினமணி (02 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories