TNPSC Thervupettagam

மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் பட்ஜெட்

February 3 , 2025 2 hrs 0 min 15 0

மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் பட்ஜெட்

  • வரும் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார்.இதன்படி, திட்டமிடப்பட்டிருக்கும் மொத்த செலவு ரூ.50.65 லட்சம் கோடி. எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் ரூ.28.37 லட்சம் கோடி. மற்ற வரவுகளும் சேர்த்து மொத்த வரவு, ரூ.34.96 லட்சம் கோடி. பற்றாக்குறையை சரி செய்ய பெறப் போகும் கடன் தொகை ரூ.14.82 லட்சம் கோடி. நிதி பற்றாக்குறை அளவு, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 4.4 சதவீதம்.
  • தனி நபர் வருமான வரியில் சலுகைகள்:
  • மாத சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பாராட்டை பெறுகிற பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. காரணம் தனிநபர் வருமான வரியில் செய்யப்பட்டிருக்கும் பெரும் மாற்றங்கள். ’நியு ரெஜிம்’ திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள தனிநபர் வருமான வரி மாற்றங்கள் எவரும் எதிர்பாராதது.
  • தற்போது ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை பெறுபவர்கள் வருமான வரி கட்ட தேவையில்லை என்கிற நிலை உள்ளது. வரும் நிதியாண்டு முதல் ரூ.12 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் காரணமாக, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுபவர்கள், நடப்பாண்டில் கட்டும் ரூ.90 ஆயிரம் வருமான வரியை, வரும் 25– 26 நிதி ஆண்டில் கட்டத் தேவையில்லை.
  • ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் கூடுதலாக வருமானம் பெறுபவர்களுக்கும், அவர்களது வருமான அளவுகளைப் பொறுத்து, ரூ80,000 முதல் 1.1 லட்சம் வரை வருமான வரி குறையும் விதம் ஸ்லாபுகள் மாற்றப்பட்டிருக்கின்றன.
  • மாத சம்பளக்காரர்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட்டிடெக்‌ஷன்) முறையில் மற்றொரு ரூ.75,000-க்கும் வருமான வரி இல்லை. இந்த மாற்றங்கள் காரணமாக சுமார் ஒரு கோடி தனி நபர்கள் பலனடைவார்கள். மத்திய அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும்.

சிறு குறு தொழில் நிறுவனங்கள்:

  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக (MSME) சலுகைகள் பெறுவதற்கு, ஏற்கெனவே உள்ள முதலீடு மற்றும் விற்றுமுதல் (டர்னோவர்) வரம்புகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ரூ.2.5 கோடி வரையிலான முதலீடு, ரூ.10 கோடி வரையிலான விற்றுமுதல் செய்பவை, குறு நிறுவனங்களாகவும்; ரூ.25 கோடி முதலீடு, ரூ.100 கோடி விற்றுமுதல் செய்பவை சிறு நிறுவனங்களாகவும்; ரூ.25 கோடிக்கு மேல் முதலீடு ரூ.500 கோடி வரை விற்று முதல் செய்யும் நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகவும் கருதப்பட்டு இனி சலுகைகள் பெற முடியும்.
  • இந்த உச்சவரம்புகள், முதலீட்டில் முன்பிருந்ததைப் போல இரண்டரை மடங்கும் விற்று முதலில் 2 மடங்கும் ஆகும். தவிர, நிறுவனங்களுக்கு வங்கிகள் மத்திய அரசின் உத்தரவாதத்துடன் நிறுவனங்கள் பிணையம் ஏதும் தராமலே பெறக்கூடிய கடன் அளவு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்:

  • இவற்றுக்கு வழங்கக்கூடிய பிணையம் இல்லா கடன் தொகை உச்சவரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் மார்ச் 31., 2025 வரை உருவாக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு இனி 31 மார்ச், 2030 வரை தொடங்கப்படுகிற அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.

ஜிடிபி வளர்ச்சியை ஊக்குவிக்கும்:

  • கடந்த 2023-24 நிதியாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.2 சதவீதமாக இருந்தது. இது நடப்பு (2024-25) நிதியாண்டில் 7%க்கு மேல் இருக்கும் என உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்டவை கணிப்பு வெளியிட்டிருந்தன. குறிப்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஒ) 7.2% வளரும் என கணித்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன்) ஜிடிபி 6.7% ஆக இருந்தது.
  • இது 2-வது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர்) 5.4 ஆக குறைந்தது. இதன் மூலம் நிறுவனங்களின் வருமானமும் லாபமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, வாகனங்கள், நுகர்பொருட்களின் விற்பனை வளர்ச்சி வேகம் குறைந்து வருவதே இதற்குக் காரணம் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.4% ஆக குறையும் என என்எஸ்ஓ கடந்த ஜனவரியில் தெரிவித்தது. இதுபோல, வரும் 2025-26 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 6.3% முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கடன்கள் மீதான வட்டியைக் குறைத்தால் நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் கிடைப்பதுடன் நுகர்வும் அதிகரித்து தொழில் துறை ஊக்கம் பெறும் என மத்திய அரசு கருதியது.
  • ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்து வருவதே இதற்குக் காரணம். இந்த சூழ்நிலையில் வட்டி விகிதங்களை குறைத்தால் ரூபாய் மதிப்பு மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • எனவே, வட்டி விகிதங்களை குறைக்காமல் நுகர்வை ஊக்குவிக்க வேண்டுமானால், பொதுமக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில்தான், தனிநபர் வருமான வரி விகிதங்களை மத்திய அரசு பெருமளவில் குறைத்துள்ளதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இதுதவிர, அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க தொடங்கிவிட்டார். இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை சமாளிக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுணங்கிவிடாமல் தொடரவும் இந்த பட்ஜெட் ஓரளவேனும் உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories