TNPSC Thervupettagam

மக்களின் மனப்பதற்றத்துக்கும் சமகால அரசியல் சூழலுக்கும் என்ன தொடர்பு?

January 7 , 2020 1836 days 1349 0
  • அரசியல் நெருக்கடி குறித்து ஒவ்வொருவரிடமும் ஒரு விளக்கம் இருக்கிறது. நம் எல்லோருடைய ஒட்டுமொத்த மனநலனைப் பொருத்ததே நம்முடைய அரசியலும் என்பது என்னுடைய விளக்கம். நம் நாட்டு அரசியலையொட்டியே நம்முடைய மனநலனும் என்று மாற்றியும் கூறலாம்.
  • இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று இணையாகக் குன்றிவருவது வெறும் தற்செயலான நிகழ்ச்சியல்ல. அமெரிக்க உளவியல் சங்கம் தனது அறிக்கையில், 2016 முதல் 2017 வரையில் ‘கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மனப்பதற்றம் அதிகமாக இருக்கிறது’ என்று கூறி, வயதுவந்தோரின் எண்ணிக்கை 36% உயர்ந்துள்ளது என்கிறது. 2017-ல் 1.7 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பலமான மனச்சோர்வு ஏற்பட்டது.
  • 12 வயது முதல் 17 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரில் 30 லட்சம் பேருக்குக் குறைந்தது ஒரு முறையாவது மனச்சோர்வு ஏற்பட்டது. 4 கோடிப் பேர் பதற்றம் காரணமாகப் பாதிப்படைந்திருக்கின்றனர். இது மொத்த வயதுவந்தோர் மக்கள்தொகையில் 20%. (இவற்றை மனச்சோர்வு - பதற்றம் என்று வகைப்படுத்துவார்கள்.) உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகரித்திருக்கும் தற்கொலை எண்ணம்

  • கவலை தருவது எதுவென்றால் தற்கொலைகள் பற்றிய அறிக்கை. அனைத்துப் பிரிவு அமெரிக்கர்களிடமும் தற்கொலை எண்ணமானது 1999 முதல் 2017 வரையில் 33% அதிகரித்திருக்கிறது. கருப்பர்கள் - வெள்ளையர்கள், ஆண்கள் - பெண்கள், முதியவர்கள் - இளைஞர்கள் என்ற வெவ்வேறு பிரிவினர்களுக்கு இடையிலான சமூக, அரசியல்ரீதியான பிளவுகள் வலுத்ததால் இந்த மனச்சோர்வு, பதற்றம் ஆகிய மனச்சிதைவுகள் அதிகமாகியுள்ளன.
  • இப்படி சமூகத்துக்குள்ளேயே எதிரெதிர் போக்குகள் நிலவுவதல்லாமல், பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள் என்று பொது இடங்களில் திடீரென யாராவது ஒருவர் மற்றவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொல்வது, சாகச் சொல்லும் இணையதள விளையாட்டுகளால் தற்கொலையை நாடுவோர், பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக சமூகத்தின் எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த பெண்கள் பல சம்பவங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவது, பருவநிலை மாறுதல்களால் இயற்கைக்கும் சூழலுக்கும் ஏற்படும் ஆபத்துகள், தொழில் - வர்த்தகத் துறைகளில் நிலவும் கடுமையான போட்டிகள், நோய்த்தடுப்பு மருந்துகளுக்குக்கூடக் கட்டுப்படாத நோய்க் கிருமிகளின் பெருக்கம், மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாதபடிக்கு முடக்கிப்போடும் கல்விக் கடன் சுமை, எல்லோரும் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெற முடியாத பொருளாதார நிலை, உயர் கல்வியைத் தொடர முடியாத குடும்பச் சூழல் என்று வேறு பல அம்சங்களும் அமெரிக்கர்களை அலைக்கழித்துவருகின்றன.
  • மனச்சோர்வால் தோன்றும் விபரீதமான சிந்தனைகளால் நம் சூழல் மேலும் பயங்கரமானதாகிவிடுகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கே ஏற்பட்ட சவால்கள் இல்லாவிட்டால், நான் இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டிருக்க மாட்டேன். அடிக்கடி எனக்குள் ஏற்படும் தற்கொலை எண்ணமும் அந்த சவால்களில் ஒன்று. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் காலையில், பாதாள ரயில் வரும்போது அதன் முன்னால் போய் நின்றால் என்ன என்றுகூடத் தோன்றியது. அது பிரச்சினையிலிருந்து தப்பிச்செல்வதற்கான கனவு முயற்சியே. வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டால் வலிகள் இருக்காது என்ற தவறான எண்ணமே இந்தத் தவறான சிந்தனைகளுக்கெல்லாம் காரணம்.

இசை எனும் வடிகால்

  • மனச்சோர்வுக்கு ஆளானவர்களுக்கு இது புரியும், என்னுடைய வாழ்க்கைக்கு இதுவரையில் ஏற்பட்டிராத முதலும் முக்கியமுமான சவால் இதுவே. சுயத்துக்கும் சுயத்துக்கு வேறு வடிவம் தர விழையும் வெளிச் சக்திகளுக்குமான வேறுபாடு நாம் நம்புவதைவிட மிகவும் குழப்பமானது. குறிப்பிட்ட சில வெளிக் காரணிகள் என் மண்டைக்குள் புகுந்து என்னைத் தற்கொலை முயற்சிக்குத் தூண்டுகின்றன. இப்போது மனநலத்துக்கான மாத்திரைகளைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். என் பிரச்சினைகளுக்கு இப்போது நானே தீர்வையும் கண்டுபிடித்துவிட்டேன். ஆம், இசை வழியாக. இசை ஒரு நல்ல வடிகால்.
  • நம் வாழ்க்கையில் எப்போதும் நிதி சார்ந்த பிரச்சினைகள் இடைவெளியே இல்லாமல் நம்மைத் தாக்கிக்கொண்டே இருக்கின்றன. நம் சம்பாதிக்கும் ஆற்றலைவிடப் பல மடங்குக்குச் செலவுகள் தொடர்கின்றன. அதிலும் ஒரு குழந்தையின் தேவையைப் பூர்த்திசெய்யும்போது இன்னொரு குழந்தையின் தேவையைப் பூர்த்திசெய்யப் பணம் இல்லாதபோது ஏற்படும் நெருக்கடி சொல்லி மாளாது.
  • இது வெறும் பணம் சம்பந்தப்பட்டதல்ல. இந்த நாட்டு மக்களிடையே உண்மையாக ஏற்பட்டிருக்கும் பிளவு என்பது மனநோய்க்கு சிகிச்சை செய்துகொள்ளும் வசதி படைத்தவர்கள், அந்த வசதி இல்லாதவர்கள் என்கிற இரட்டைத் தன்மை கொண்டதாகத்தான் இருக்கிறது.
  • மனநல நெருக்கடி முற்றிக்கொண்டே வந்தாலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களும் மருத்துவக் கட்டுரைகளும் பிரசுரமாகி, மருத்துவ வணிகத்தில் மனநோயைச் சிறந்த விற்பனைப் பொருளாக்கிவருகின்றன. மனநோய் பற்றிப் பேசுகிறோம்; அதை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்துப் பேசத் தவறுகிறோம். 1977-ல் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மனநல சுகாதாரம் குறித்து ஆராய, அதிபரின் ஆணையம் ஒன்றை நிறுவினார். அதன் விளைவாக, 1980-ல் மனச் சுகாதார அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
  • ரொனால்ட் ரீகன் கொண்டுவந்த சட்டம், அச்சட்டத்தின் பெரும் பகுதியை நீக்கிவிட்டது. ஆனால், பல கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், பெண்கள், பாலினமற்றவர்கள், குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், வயது முதிர்ந்த அமெரிக்கர்கள், கிராமங்களில் வசிப்போர், பாலியல் வல்லுறவுக்கு ஆளானோர் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மனநலம் குறித்து விவாதிக்க வேண்டும்

  • அதிபர் ட்ரம்ப் நம்முடைய அற்பமான உணர்வுகளை மட்டும் தூண்டும் வகையில் அரசியல் பேசுகிறார். நம்முடைய ஒட்டுமொத்த ஆளுமை மீது அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுவதில்லை. இவற்றில் பல கருத்துகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மனநலம் சார்ந்த சுகாதாரம் குறித்து தேசிய அளவில் அதற்குப் பின்னர் பேசப்படவே இல்லை. எங்கும் காணப்படும் மனநலம் குறித்து அதிபர் பதவிக்கான தேர்தல் விவாதங்களில்கூடப் பேசப்படுவதில்லை.
  • அதிபர் கார்ட்டரைப் போல ஒருவர் மனநலம் சார்ந்தவற்றை இடைக்காலச் சட்டமியற்றல் மூலமாக அல்ல, தேசிய இயக்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடுகள் தேவை, பருவநிலை மாறுதலின் தீய விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்ற தேசியத் தலைப்புகள் மூலம் மக்கள் விவாதிப்பதைப் போல மனநல நோயாளர்கள் குறித்தும் அவசியம் விவாதிக்க வேண்டும்.
  • பகுத்தறிவு, நன்நடத்தை, கண்ணியம் ஆகியவற்றைத்தான் அதிபர் அல்லது அதிபர் வேட்பாளரிடம் எதிர்பார்க்கிறேன். தாங்கள் காப்பாற்றப்பட வேண்டும், தங்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினருமே விரும்புகின்றனர். அதைத் தேசிய அரங்கில் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதை ட்ரம்ப் நன்றாகவே அறிந்திருக்கிறார். உணர்ச்சிகளின் அடிமட்டத்துக்குச் சென்று அவர் அழைப்பு விடுக்கிறார். எனவே, அவருடைய அழைப்பை ஏற்க முடியாதவர்கள் தங்களுக்கு ஆபத்து என்று அஞ்சுகின்றனர். ஒருங்கிணைந்த தேசியக் கொள்கை அரசிடம் இல்லாததால், தொடர்ந்து மனச்சோர்வு, பதற்றம், ஆதரவற்ற நிலை ஆகியவற்றை மக்களிடம் பார்க்கிறோம். மக்கள் இவற்றிலிருந்து மீளும் வழிகளை ஆராயும் அரசு, அதைத் தீவிரப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories