TNPSC Thervupettagam

மக்களோடு முதல்வர்: நீளட்டும் திடீர் ஆய்வின் எல்லை

October 2 , 2021 1032 days 576 0
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தருமபுரி செல்லும் வழியில், அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் மேற்கொண்ட திடீர் ஆய்வு, பெருங்கவனத்தைப் பெற்றுள்ளது.
  • முதல்வராகப் பதவியேற்ற சில நாட்களில், சேலத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறந்துவைத்துவிட்டு, திருப்பூர் செல்லும் வழியில் மகுடஞ்சாவடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இதே போல அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டது, அப்போது முக்கியப் பேசுபொருளானது.
  • முதல்வரின் திட்டமிட்ட பயணங்களுக்கு நடுவே அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இத்தகைய எதிர்பாராத ஆய்வுகள் ஒவ்வொரு அரசு அலுவலகத்தையும் எப்போதும் ஆய்வுக்குத் தயார் நிலையில் வைத்திருக்கத் தூண்டும்.
  • பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு அரசு அலுவலகங்களிலிருந்து விரைவில் தீர்வுகள் கிடைக்கவும் இது உதவும். முதல்வரின் இத்தகைய திடீர் ஆய்வு உத்திகளை அவரது அமைச்சரவை சகாக்களும் பின்பற்றலாம்.
  • கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதல்வர் அவ்வப்போது மிதிவண்டிப் பயிற்சி செல்லும் காட்சிகளும் அப்போது அவர் பொதுமக்களுடன் உரையாடும் காட்சிகளும் இணையவெளியில் பெருமளவில் பகிரப்பட்டுவருகின்றன.
  • மக்களுடனான எதிர்பாராத இந்தச் சந்திப்புகளும் உரையாடல்களும்கூட அரசு நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களுக்கு வித்திடக்கூடும்.
  • காமராஜர் தனது பயணத்தில் காரை நிறுத்தி, வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்களுடன் பேசியதுதான் மதிய உணவுத் திட்டத்துக்குக் காரணமானது என்பது என்றென்றும் வழிகாட்டும் ஒரு வரலாற்று முன்னுதாரணம்.
  • கனிமங்கள் தோண்டப்படும் இடங்கள், கல்குவாரிகள், போக்குவரத்து ஆக்கிரமிப்புகள் போன்ற இடங்களுக்கும் முதல்வர் சென்று திடீர் ஆய்வு நடத்த வேண்டும்.
  • அப்போது ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் தவறிழைத்திருப்பது தெரியவந்தாலும் அவர்கள் மீது தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தேர்தல் நேரத்தில் மக்களைத் தேடித் தேடி வாக்குகள் சேகரிக்கிற அரசியல் தலைவர்களை, ஆட்சியில் அமர்ந்த பிறகு பார்க்கவே முடிவதில்லை என்ற பொது அபிப்பிராயத்தை முதல்வரின் எதிர்பாராத மக்கள் சந்திப்புகள் மாற்றக்கூடும்.
  • ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, கட்சித் தொண்டர்களும்கூட முன்பு போல அவரை எளிதில் அணுக முடியாது.
  • பெரும் எண்ணிக்கையிலான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில், மத்திய - மாநில அளவில் ஆட்சிப் பொறுப்பு என்பது ஒவ்வொரு நாளையும் பொழுதையும் ஓய்வின்றிச் செலவிட வேண்டிய கடமையையும் உள்ளடக்கியது.
  • அதன் காரணமாக மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையில் எழும் தவிர்க்க முடியாத இடைவெளியை அரசு நிகழ்ச்சிகளும் பத்திரிகையாளர் சந்திப்புகளும் ஓரளவு இட்டுநிரப்புகின்றன.
  • என்றபோதும், தலைவர்களின் இயல்பானதும் எதிர்பாராததுமான சந்திப்புகளே மக்களுடனான நெருக்கத்தை வளர்த்தெடுக்க உதவும்.
  • ஜனநாயக ஆட்சிமுறை என்பது மக்கள் அதன்மீது கொண்ட நம்பிக்கையையே அடித்தளமாகக் கொண்டது என்ற நோக்கில் பார்த்தால், தலைவர்கள் மக்களுடன் உரையாடுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பும் இந்த அரசமைப்பை இன்னும் வலுப்படுத்துகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories