- தனது சுதந்திர தின உரையில் சிறிய குடும்பம் தேசியக் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதைத் தொடர்ந்து, கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பேசப்படாமல் இருந்த மக்கள்தொகைப் பெருக்கப் பிரச்னை இப்போது மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. 1951 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது வெறும் 36.1 கோடியாக இருந்த எண்ணிக்கை 2011-இல் 120 கோடியாக அதிகரித்து, இப்போது 133 கோடியை எட்டியிருக்கிறது. சீனாவின் மக்கள்தொகையை 2027-இல் இந்தியா தாண்டிவிடும் என்றும், 2050-இல் இந்தியாவின் மக்கள்தொகை 160 கோடியைத் தாண்டும் என்றும் ஐ.நா. சபையின் அறிக்கையொன்று கூறியிருப்பதன் அடிப்படையில் மக்கள்தொகைப் பிரச்னை குறித்துத் தனது கருத்தை பிரதமர் கூறியிருக்கிறார் என்று கருத இடமிருக்கிறது.
புள்ளிவிவரம்
- 1960 முதல் 1990 வரையிலான 30 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. ஆண்டொன்றுக்கு 2% என்கிற அளவில், திட்டமிடாத மக்கள்தொகை வளர்ச்சியை நாம் எதிர்கொள்ள நேர்ந்தது. 1950-இல் ஆயிரம் பிரசவங்களுக்கு 225 மரணங்கள் என்று இருந்த நிலைமை, மருத்துவ வசதிகள் அதிகரித்ததால், 1990-இல் 1,000 பிரசவங்களுக்கு 80 மரணங்களாகக் குறைந்தன. அதனால்தான், 1966-இல் ஒரு பெண்ணுக்கு 6 குழந்தைகள் என்கிற சராசரி, 1992-இல் 3.8 குழந்தைகள் என்று குறைந்தும்கூட மக்கள்தொகை அதிகரித்து வந்ததைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
- மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துத் தொடர்ந்து கவலை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் விவாதங்களாகவும், கருத்தரங்குகளாகவும் முடிந்து விடுகின்றன. 1992-இல் தேசிய வளர்ச்சிக் குழு, அன்றைய கேரள முதல்வர் கே. கருணாகரன் தலைமையில் மக்கள்தொகை பிரச்னை குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைத்தது.
- அந்தக் கமிட்டி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் அரசில் எந்தப் பொறுப்பான பதவியையும் வகிக்கக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பரிந்துரைத்து, நிராகரிக்கப்பட்டது.
ஊக்கத் தொகை
- 1959-இல் அன்றைய சென்னை மாகாணத்தில், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.30, அதற்குத் தூண்டுதலாக இருப்பவர்களுக்கு (அழைத்து வருபவர்களுக்கு) ரூ.15 வழங்கத் தலைமைச் செயலர் அனுமதி வழங்கி இருக்கிறார். இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதன் பின்னணியில் மேலைநாடுகள், குறிப்பாக அமெரிக்க மிஷனரிகள், முனைப்புக் காட்டியது ஏன் என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது.
- ஐ.நா. சபை வெளியிட்டிருக்கும் இன்னொரு சமீபத்திய புள்ளிவிவரம் வித்தியாசமான தகவலைத் தருகிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால், மொத்த கருத்தரிப்பு விகிதம் 5-ஆக இருந்தது. இப்போது 2.2 முதல் 2.3 விகிதம் என்று குறைந்திருக்கிறது. கருத்தரிப்பு அளவு என்பது, இந்தியப் பெண்களின் சராசரி மக்கட்பேறு எண்ணிக்கை. சராசரி மக்கட்பேறு எண்ணிக்கை 2.1 விகிதமாக இருந்தால் மக்கள்தொகை நிலையானதாக இருக்கும் எனும் நிலையில், 2.2 அல்லது 2.3 விகிதம் என்பது அச்சப்படும் அளவில் இல்லை.
ஐ.நா. சபையின் மக்கள்தொகை நிதியம்
- ஐ.நா. சபையின் மக்கள்தொகை நிதியம் வயதாகும் இந்தியா 2017 என்கிற அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்தியாவில் 60 வயதைக் கடந்த முதியோரின் எண்ணிக்கை 2050-இல் மொத்த மக்கள்தொகையில் 19%-ஆக இருக்கும். 2015-இல் முதியோர் விகிதம் 8% எனும் நிலையில் இதை அணுக வேண்டும். இதே நிலைமை தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் கடைசியில் முதியோரின் விகிதம் ஏறத்தாழ 34%-ஆக மாறிவிடும். அதை எப்படி எதிர்கொள்வோம் என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது.
- மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்கள் இன்னும் பல தகவல்களைத் தருகின்றன. தென்னிந்திய மாநிலங்கள், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் ஆகியவற்றின் மொத்த கருத்தரிப்பு விகிதம் 1.6 - 1.7 என்ற அளவில்தான் காணப்படுகிறது. தேசிய சராசரி 2.2. ஆனால், ஹிந்தி பேசும் உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவே 3.0 - 3.2 விகிதம் என்கிற அளவில் காணப்படுகிறது.
- 2010-13-க்கான தேசிய சுகாதார அறிக்கையின்படி, வடக்கு, கிழக்கிலுள்ள 9 மாநிலத்தவர்கள்தான் இந்திய மக்கள்தொகையில் 48% பேர். இந்தியாவில், 59% பிறப்புக்கும், 70% சிசு மரணத்துக்கும் இந்த மாநிலங்கள்தான் காரணம்.
இந்தியாவிலுள்ள 621 மாவட்டங்களில் 174 மாவட்டங்கள் 2.1 கருத்தரிப்பு விகித அளவைக் கொண்டிருக்கும்போது, மேலே குறிப்பிட்ட 9 மாநிலங்களிலுள்ள 72 மாவட்டங்களில் சராசரியாக ஒரு பெண்மணிக்கு 4 குழந்தைகள் என்கிற அளவில் காணப்படுகிறது. மக்கள்தொகைப் பெருக்கம் குறித்த அச்சம் இந்த 9 மாநிலங்களுக்கு மட்டுமாகத்தான் இருக்க முடியுமே தவிர, பிரதமர் அதை தேசியப் பிரச்னையாக்க வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள் தொகைப் பெருக்கம்
- மக்கள்தொகைப் பெருக்கத்தைப் பொருத்தவரை, இந்தியாவின் நிஜமான பிரச்னை குறித்து யாருமே சிந்திப்பதோ, கவலைப்படுவதோ இல்லை. படித்தவர்களும், வசதியானவர்களும் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொண்டு அவர்களை நன்றாகப் படிக்கவைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். முறையாகக் கல்வியோ, ஊட்டச்சத்தோகூடத் தங்களது குழந்தைகளுக்கு வழங்க முடியாத அடித்தட்டு மக்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்று, வாக்காளர்களாக தேசத்துக்கு வழங்குகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் தேசப்பற்று படித்த, வசதி படைத்தவர்களுக்கு இல்லை என்பதுதான் பிரச்னை!
நன்றி: தினமணி(20-08-2019)