TNPSC Thervupettagam

மக்கள் குரலான மனதின் குரல்

May 24 , 2023 551 days 363 0
  • கடந்த 2014-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்டு, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று "மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களோடு உரையாடியதன் வாயிலாக புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 140 கோடி மக்களைக் கொண்ட இந்திய தேசத்தில் பல்வேறு மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் கொண்ட மக்கள் வாழுகின்றனர். அவர்களில் சாதனை படைத்த சாமானிய மக்களைக் கண்டறிந்து அவர்களை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அரும்பணியை "மனதின் குரல்' செய்திருக்கிறது.
  • நாட்டு மக்களின் நல்ல குணங்கள், நற்பண்புகள் என ஒவ்வொரு மாதமும் இந்திய மக்களின் பல்வேறு திறன்களையும் சாதனைகளையும் முயற்சிகளையும் பிரதமர் மக்களிடம் விவரித்தபோது 23 கோடி இந்திய மக்களும் மாணவர்களைப் போல குறிப்பெடுத்துக் கொண்டும், அக்கருத்துகளை உள்வாங்கிக் கொண்டும், ஒரு உத்வேகத்தை தங்களுக்குள் உருவாக்கிக் கொண்டனர்!
  •  "மக்களிடம் செல், மக்களோடு வாழ், அவர்களிடம் இருப்பதைக் கொண்டு திட்டமிடு' என்று சீன அறிஞர் லாவோட்ச் சொன்னதைப் போல் மக்களிடம் நெருங்கி, மக்களோடு வாழ்ந்து "ஒரே இந்தியா உன்னத இந்தியா' எனும் உணர்வை மக்களிடத்தில் உருவாக்கிய ஒப்பற்ற புரட்சியை "மனதின் குரல்' ஏற்படுத்தியிருக்கிறது!
  • 22 இந்திய மொழிகளில், 29 கிளை மொழிகளில், பிரெஞ்சு, சீன மொழி உள்ளிட்ட 11 வெளிநாட்டு மொழிகளில் "மனதின் குரல்' நூறாவது நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. இது இதற்கு முன்னர் எந்தவொரு இந்திய பிரதமரும் செய்யாத சாதனையாகும்.
  • அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்ஸி மாகாணங்களின் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தில், அரசின் நிர்வாகத்தை மேம்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் "மனதின் குரல்' தொடர் நிகழ்ச்சி பயன்படுகிறது என்று சுட்டிக்காட்டியிருப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிடைத்திருக்கும் பெருமை.
  • நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஏப்ரல் 30 நள்ளிரவு நேரடியாக "மனதின் குரல்' ஒலிபரப்பப்பட்டது. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கேட்டு மகிழ்ந்தனர். பிரிட்டன், சீனா, ரஷியா, பிரான்ஸ், தென்னப்பிரிக்கா, மெக்ஸிகோ, காங்கோ, இராக், இந்தோனேசியா, வங்கதேசம், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் ஒலிபரப்பப்பட்டது. அங்கெல்லாம் மாணவர்கள், பொதுமக்கள், அதிகாரிகள் ஆர்வத்தோடு கேட்டு பரவசமடைந்தனர்!
  • இந்தியாவில் நான்கு லட்சம் இடங்களில் ஒலிபரப்பப்பட்ட "மனதின் குரல்' நூறாவது பகுதியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை, புதிய எழுச்சியை, சாதனை நிகழ்த்திட வேண்டும் என்ற எண்ணத்தை திரண்டிருந்த பல லட்சம் மக்களிடம் உருவாக்கியது என்பதை மறுக்க முடியாது.
  • யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஆட்ரி அசூலே, நரேந்திர மோடியின் வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' நூறாவது நிகழ்வில் பங்கேற்று, "இந்தியாவின் கல்வி, கலாசாரம், பாரம்பரியம் அனைவருக்கும் தரமான கல்வி ஆகியவற்றை "மனதின் குரல்' இந்திய மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறது. அவற்றுற்காக பாடுபட்டு வரும் யுனெஸ்கோ அமைப்பு பெருமைப்படுகிறது' என்று கூறியிருக்கிறார்!
  • நாட்டின் பல்வேறு திசைகளிலும் குடத்துக்குள் வைக்கப்பட்டிருந்த விளக்குபோல வெளியே தெரியாமலிருந்த சாமானிய மனிதர்களின் சாதனைகளை "மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் குன்றின் மேலிட்ட விளக்க உயர்த்திய பெருமை மோடியையே சாரும்.
  • ஊழலாலும், குடும்ப அரசியலாலும், வாரிசு ஆதிக்கத்தாலும் இந்திய ஜனநாயகம் செல்லரித்து போய் கிடக்கிறது. இந்தியா ஊழல் எனும் நோயால் எலும்பும் தோலுமானது. செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்த மக்களிடத்தில், "மனதின் குரல்' மூலம் "நானிருக்கிறேன், கவலை வேண்டாம்' என்று நம்பிக்கைக் குரல் கொடுத்தார் மோடி.
  • செஞ்சீனத்தின் வானில் ஒரு சிகப்பு நட்சத்திரமாகத் திகழந்த மா சேதுங் கொடுங்கோல் குடும்ப ஆட்சியை வீழ்த்திட நெடும் பயணம் மேற்கொண்டார். ஆயினும் மக்கள் முழுமையான விழிப்புணர்வை பெற்றார்களில்லை. அவருடைய தத்துவங்கள், போராட்டங்கள் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கண்டிருந்தாலும், ஒட்டுமொத்த மக்களின் பங்களிப்பை நிர்வாகத்தில் ஏற்படுத்திட இயலவில்லை.
  • ஜனநாயகத்தின் தத்துவத்தை சொல்லித் தந்த தாமஸ் ஜெபர்சன், "தனது இலக்கினை அடைவதற்கான சரியான அணுகுமுறை கொண்ட ஒருவனை எதுவும் தடுத்து நிறுத்தமுடியாது; தவறான அணுகுமுறை கொண்ட ஒருவனுக்கு இந்த பூமியில் எதுவும் உதவ முடியாது' என்றார். ஆனாலும், அவரால் கூட மக்களின் பங்களிப்புடன் கூடிய ஜனநாயகத்தை உருவாக்கிட முடியவில்லை.
  • இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து நாட்டின் வெற்றிக்கு வழிவகுத்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்த அவர், ஹிட்லர், முúஸாலினி போன்ற ஆற்றல் வாய்ந்த சர்வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களின் ஒத்துழைப்பால் நேச நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கி, சர்வாதிகாரிகளை வீழ்த்தினார். அவர்கூட மக்களை உள்ளடக்கிய ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கத் தவறிவிட்டார். அதனால்தான் தோல்வி அவரைத் தழுவியது.
  • பிரான்சு நாட்டில் ஏற்பட்ட புரட்சிக்கு வித்திட்ட வால்டேர், ரூசோ போன்ற தலை சிறந்த சிந்தனையாளர்கள் கூட, சாமான்ய மக்களின் பங்களிப்பை தங்களுடைய செயல்களால் ஏற்படுத்திட முடியவில்லை. அவர்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கையை, கோட்பாட்டை உருவாக்கி புரட்சிக்கு வழிகோலினார்கள். புரட்சியைத் தொடர்ந்து உருவான அந்நாட்டின் நிர்வாகத்தில் மக்கள் ஒதுங்கியே நின்றனர் என்பதை மறுதலிக்க முடியாது.
  • "மக்களால், மக்களுக்கான, மக்களுடைய அரசு' என்று ஜனநாயகத்திற்கு விளக்கம் தந்த அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன், மக்கள் துடிப்போடும், எழுச்சியோடும், உணர்ச்சியோடும் பங்கேற்கும் ஆட்சி நிர்வாகத்தைக் கட்டமைத்திட முடியாமல் தவித்தார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.
  • தென்னாப்பிரிக்ககவில் நெல்சன் மண்டேலா, கியூபா புரட்சியாளர்கள் பிடல் காஸ்ட்ரோ, சே குவாரா, மியான்மர் ஆங்சான் சூகி போன்ற சமீபகால புரட்சியாளர்கள்கூட ஒட்டுமொத்த மக்களின் பங்களிப்பை ஏற்படுத்தி புரட்சியை நடத்திக் காட்டினார்களா என்ற வினாவுக்கு ஆம் என்ற பதில் கிடைத்திடவில்லை!
  • ரஷிய புரட்சியாளர் லெனின், வியத்நாம் புரட்சியாளர் சுகர்னோ என பல்வேறு தேசங்களில் எண்ணற்ற புரட்சியாளர்கள் புதிய தத்துவங்களை உருவாக்கினார்கள். ஆனால், மக்கள் அந்த தத்துவங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு புரட்சி செய்வதற்காகக் களத்தில் குதித்தார்களா என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.
  • மாவீரன் அலெக்ஸாண்டர், நெப்போலியன், துருக்கி கமால் பாட்சா, மாஜினி, செங்கிஸ்கான் என வரலாற்றின் பாதை நெடுகிலும் வாளெடுத்துப் போர் தொடுத்து, ரத்த சகதியில் நடந்து, குருதி குளத்தில் மூழ்கிய பின்னரே அவர்கள் உலகையே ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தனர். சிலர் கொண்டுவர முயன்றனர்!
  • ஆனால் அங்கெல்லாம் மக்களுக்கும் அவர்கள் நடத்திய போர்முறைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை! பிணங்கள் விழுந்தன; மண் சிவந்தது; மகுடங்கள் உருண்டன என்பதுதான் மயிர்க்கூச்செறியும் வரலாறு! ஆனால் மக்கள் மௌனமாகி வேடிக்கைதான் பார்த்தனர்.
  • சூடான் நாட்டில் இன்றைக்கு நடப்பது என்ன? உக்ரைன்- ரஷியா போர் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்வது, இராக்- ஈரான், வடகொரியா - தென்கொரியா, லெபனான் - இஸ்ரேல் என உலக நாடுகளிலெல்லாம் நடப்பதென்ன? ஜனநாயகம் என்கின்ற போர்வையில் தனிமனிதனின் சர்வாதிகார வெறிதான் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
  • ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது; பிணங்கள் மலைமலையாக குவிந்து கிடக்கின்றன; பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது; ஈவு இரக்கமின்றி பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்; பலர் குடும்பத்தோடு கொல்லப்பட்டு குழிதோண்டி புதைக்கப்படுகின்றனர்; மக்கள், பசி, பஞ்சம், பட்டினி காரணமாக அலை அலையாய் அகதிகளாக நாடுவிட்டு நாடு செல்கின்றனர்; தேசம் விட்டு தேசம் புலம்பெயர்கின்றனர். எங்கும் அமைதியில்லை. எல்லா நாடுகளிலும் அல்லல்கள், அவலங்கள், அவமானங்கள்காணப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் எப்போதுதான் தீர்வு?
  • ஆனால், இந்தியத் திருநாட்டில் மட்டும் எல்லா நிலையிலும் சீரான, திடமான, தெளிவான, உறுதியான, உண்மையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னேற்றப் பாதையில் மக்கள் கம்பீரமாக, வீறுநடை போட்டுக்கொண்டுள்ளனர்.
  • பிரதமர் ஊழலற்ற, எல்லோருக்கும் எல்லோருடனுமான வளர்ச்சிப் பாதையில் இந்திய தேசத்தை நடைபோட வைத்துள்ளார். தேசத்தின் மூலை முடுக்குகளில், தெருவோரங்களில் கவனிப்பாரற்றுக் கிடந்த எளிய மக்களுக்குத் தனது "மனதில் குரல்' நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் மகுடம் சூட்டி மகிழ்ந்தார். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற எண்ணத்தை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தினார்.
  • பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' மகத்தான சித்தாந்த எழுச்சியை, சிந்தனை வளர்ச்சியை, உண்மை ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கச் செய்திருக்கிறது! அமெரிக்க வாழ் இந்தியர்கள் குடும்பம் குடும்பமாக நள்ளிரவு வேளையிலும் விழித்திருந்து நூறாவது 'மனதின் குரல்' நிகழ்ச்சியை கூர்ந்து கேட்டு, மகிழ்ந்து வியந்து சென்றார்கள் என்கின்ற செய்தி சாதாரணமானது அல்ல.
  • பல்வேறு நாடுகளில் வாழுகின்ற இந்தியர்கள், இந்தியாவின் பல்வேறு திசைகளில் விரிந்து பரந்து வாழ்கின்ற மக்களெல்லாம் "மனதின் குரல்' மக்களின் குரல் என்ற உணர்வால் உந்தப்பட்டு 'ஒரே இந்தியா உன்னத இந்தியா' என்ற கோட்பாட்டில், ஒருங்கிணைந்து நிற்கின்றனர்! எந்த பிரிவினை சக்திகளாலும் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் தேசிய உணர்வை சிதைத்து சீர் குலைத்திட முடியாது.
  • இதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் "மனதின் குரல்' ஒலிபரப்பின் நூறாவது நிகழ்ச்சி உலகிற்கு தெரிவித்திருக்கும் செய்தி! ஆயிரத்தையும் தாண்டித் தொடரட்டும் பிரதமர் மக்களுடன் உரையாடும் "மனதின் குரல்' என வாழ்த்துவோம்!

நன்றி: தினமணி (24 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories