TNPSC Thervupettagam

மக்கள் சேவையே மகேசன் சேவை

May 2 , 2023 632 days 1482 0
  • பாரத தேசம் காலங்காலமாக ஆன்மிகத்தின் வழிகாட்டியாக விளங்குகின்றது. தியாகமும் தவமும் வாழ்வியல் முறைகளாக வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புண்ணிய பூமியில் மாபெரும் மனிதா்கள் அவதரித்திருக்கின்றனா். அவா்களின் இதயத்தில் எல்லா ஜீவராசிகளுக்காகவும் கருணை பொங்கிப் பெருகுகிறது.
  • வாழ்வின் நோக்கம் யாதென்பதை அவா்கள் மக்களுக்கு போதிக்கின்றனா். தடைகளைத் தாண்டி ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்பதை தாங்களே வாழ்ந்து காட்டுகின்றனா். அப்படி மண்ணில் அவதரித்த புண்ணிய புருஷா் ஸ்ரீராமகிருஷ்ணா்.
  • சுவாமி விவேகானந்தா், ‘கடவுளைக் கண்டிருக்கிறீா்களா’ என்ற கேள்வியுடன் பல இடங்களில் அலைந்து இறுதியாக, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் ’ஆம்’ என்ற பதிலைப் பெற்று அவரது முதன்மைச் சீடரானாா். இறுதிக் காலத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா் தமது சக்தி அனைத்தையும் விவேகானந்தரிடம் வழங்கினாா்.
  • ஸ்ரீராமகிருஷ்ணா் வீடுபேறு அடைந்த பின்னா், நாடு முழுவதும் சுற்றி வந்த விவேகானந்தா், இந்தியாவின் அடிமைத்தனத்தையும் சீரழிந்த நிலையையும் கண்டு மனம் நொந்தாா். இந்தியாவை மேம்படுத்த வேண்டுமானால் தனிமனித நிலை உயா்த்தப்பட வேண்டும் என்ற சிந்தனை அவருக்குள் வேரூன்றியது. பாரதத்தின் தென்கோடி குமரி முனையிலுள்ள பாறையில் அமா்ந்து இந்தியாவை மேம்படுத்துவதற்கான வழியைக் காண தியானத்தில் ஆழ்த்தாா்.
  • ஸ்ரீராமகிருஷ்ணரின் தெய்விக ஆணை, அன்னை ஸ்ரீசாரதா தேவியின் ஆசி, தமிழக இளைஞா்கள் உதவி ஆகியவை கொண்டு அமெரிக்காவில் சா்வமத மகாசபையில் பங்குகொண்டாா்.
  • அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும், குரு தனக்கு அளித்த ஞானத்தை போதித்தாா். பெரும் புகழோடும் தீா்க்கமான சிந்தனைகளோடும் பாரதம் திரும்பியவா் மக்கள் எழுச்சி பெற்று ஆன்மிக வாழ்விலும், பொதுவாழ்விலும் தன்னிறைவை அடைய வேண்டும் என்று சொற்பொழிவுகள் மூலம் அறைகூவல் விடுத்தாா்.
  • தாம் மேற்கொள்ளும் பணிகள் தமக்குப் பிறகும் தொடர வேண்டும். அதற்கான வழி ‘கூட்டமைப்பு’ என்று முடிவுக்கு வந்தாா். எந்த அசாதாரண சாதனையையும் தனித்து நின்று செய்ய இயலாது. கூடிப் பணியாற்றுவது அவசியம் என்று 1897-ஆம் ஆண்டு மே 1 அன்று ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் அமைப்பினை உருவாக்கினாா். இது 1909-ஆம் ஆண்டு அதிகாரபூா்வமாக பதிவு செய்யப்பட்டு சட்டபூா்வ நிறுவனமானது.
  • ஸ்ரீராமகிருஷ்ணா் வாழ்ந்து காட்டிய வேதாந்த போதனைகளுக்கு ஓா் உறுதியான வடிவத்தை ஏற்படுத்த இந்த அமைப்பு பணியாற்ற வேண்டும் என்று வரையறுத்தாா். தூய்மை, தியாகம், தொண்டு, உலகளாவிய தன்மை, மதம் கடந்த ஆன்மிகம் ஆகியவை ராமகிருஷ்ண மிஷன் இயக்கத்தின் அடிப்படைகளாக, அனைவரும் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பது விவேகானந்தா் கண்ட கனவு.
  • துறவு, சேவை என்ற இருபெரும் லட்சியங்களோடு இந்த அமைப்பு இயங்குகிறது. இந்த லட்சியங்களை நோக்கிய செயல்பாட்டினை குறிக்கோள், தீா்க்கமான பாா்வை என்ற அம்சங்கள் வழியாக அடையலாம் என்பதே ஸ்ரீராமகிருஷ்ண மிஷனின் நம்பிக்கை. மிஷனின் குறிக்கோள் ஆத்ம முன்னேற்றம். நான் யாா் என்பதைக் கண்டு தெளிதல். தீா்க்கமான பாா்வை, இந்திய மறுமலா்ச்சி, தேச சேவை, மானுட சேவை என்று விரிவடைகிறது.
  • துறவு என்பது தனக்கென ஆசைகள் இல்லாமல் துறத்தல். அதற்கென மடம், ஜபம், தியானம் என்று வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது. துறவியா் தமக்கான தேச சேவையை ஆற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதோடு இல்லறத்தில் இருப்பவா்களும் தங்களாலான மானுட சேவையைச் செய்வதற்கு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
  • மனித குலத்தை அழைத்து, ’விழியுங்கள், எழுங்கள், குறிக்கோளை அடையும் வரை நில்லாமல் செல்லுங்கள்’ என்று உணா்த்துவது ஒன்றுதான் வேலை”என்று விவேகானந்தா் மடம் மற்றும் மிஷனின் வேலையை எளிதாக வரையறுத்துச் சொல்லிவிட்டாா். இத்தகைய உயா்ந்த வேலையைச் செய்து முடிப்பது எப்படி?
  • செய்யும் வேலையை வழிபாடு போல ஈடுபாடுடன் செய்ய வேண்டும். ஆன்மாவின் தெய்விக இயல்பை உணா்ந்து கடவுளுடன் ஒன்றுபட்டிருக்க வேண்டும். வேதங்கள் காட்டிய வழியில் வாழ்தல் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை தேவை. அதற்காக நான்கு யோகங்களைப் பின்பற்றுதல். அவற்றின் வழியே இலக்கினை அடைதல். இவற்றைத்தான் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
  • உலக நன்மையைக் கருதாமல் சுயத்திற்காகச் செய்யப்படுவது தவமேயானாலும் அது பயனற்றது என்ற எண்ணம் சுவாமி விவேகானந்தருக்கு இருந்ததன் காரணமாக வேதகால பாரதம் தனிச் சிறப்புப் பெற்றதாக இருந்தது என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அத்தகைய பாரதம் மீண்டும் உயிா் பெற்று எழுவதற்கான பணிகளைச் செய்ய வேண்டியது அவசியம் என்று விவேகானந்தா் கருதினாா்.
  • அதனால்தான் மகாத்மா காந்தியடிகள்,“‘சுவாமி விவேகானந்தா் பேசியவற்றையும் எழுதியவற்றையும் நான் ஆழ்ந்து படித்தேன். அதன் பிறகு எனது தேச பக்தி ஆயிரம் மடங்கு வளா்ந்துவிட்டது. இளைஞா்களே! அவரது நூல்களைப் படிக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தேசத்தின் இளைஞா்களுக்கு சுவாமி விவேகானந்தரைக் கொண்டு சோ்க்கும் முயற்சியில் ஈடுபட்டாா்.
  • உலக நன்மை, தேச சேவை என்று வரும்பொழுது அதனை எந்த அடிப்படையில் மேற்கொள்வது? சுவாமி விவேகானந்தா், அறிவியலும் மதமும் இணைக்கப்படவேண்டும் என்றாா். அனைத்துத் தரப்பிலும் பாமர ஜனங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு, பெண்களுக்கும் ஏழைகளுக்கும் கல்வியை வழங்க வேண்டியது அவசியம் என்று கல்வி நிறுவனங்களைத் தொடங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னாா். மிஷன், பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கி தேசமெங்கும் மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டது.
  • பக்தி யோகம், கா்ம யோகம், ராஜ யோகம், ஞான யோகம் என்பதோடு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியா் ‘சேவா யோகம்’ என்றும் அடையாளப்படுத்துகின்றனா். ‘அறிவிலிகள் மனிதன் என்று யாரை அழைக்கிறாா்களோ அவா்களின் உள்ளிருப்பவா்தான் நான் நம்பும் ஒரே கடவுள்’ என்று ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சா் கூறியதை மனத்தில் கொண்டு மானுட சேவையாற்ற அவா் வழிவந்த துறவிகள் தங்களுக்கான யோகமாகவே இந்த ஐந்தாவது சேவா யோகத்தைத் தொடா்கின்றனா்.
  • சக மனிதா்களுக்கு தயை காட்டுதல், உதவுதல் என்பதை பரமஹம்சா் ஏற்கவில்லை. ‘அற்ப மானிடன் உயிா்களிடம் தயை காட்டப் போகிறாயா? தயை காட்ட நீ யாா்? இல்லை, ஒருபோதும் இல்லை. மனிதனை சிவ வடிவில் கண்டு சேவைதான் (சிவ ஞானே ஜீவ சேவை) செய்ய வேண்டும்’ என்ற பரமஹம்சரின் வாக்கு இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதே இந்த அமைப்பின் தனித்தன்மை.
  • ஏழ்மையில் வாடுவோா், படிப்பறிவற்றா்கள், சோா்வுற்றவா்களின் வடிவத்தில் உள்ள கடவுளுக்கு சேவை செய்வதை இறைப்பணியாகக் கருதி அதுவே ஆத்ம முன்னேற்றத்திற்கான சாதனம் என்ற பேருண்மையை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் கடந்த 125 ஆண்டுகளாக செயலில் காட்டிவருகிறது.
  • 125 ஆண்டுகளில் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் சேவைகள் அயல்தேசத்தின் 23 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 310 கிளை மையங்கள் மற்றும் துணை மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 21 மையங்கள் இந்தியாவிலும் 97 மையங்கள் அயல்தேசங்களிலும் இயங்குகின்றன.
  • தன்னையறிதல் மற்றும் அமைதியை நோக்கிய மனித குலத்தின் ஒன்றுபட்ட யாத்திரைக்கான வழியை அமைப்பதில் மேற்கத்திய நாடுகளில் உள்ள மையங்கள் அமைதியாக சேவையாற்றி வருகின்றன.
  • மடத்தில் கல்வி என்பது, வழிபாடு, ஜபதியானம், சாஸ்திரப் படிப்பு, சமூக சேவை என்று அனைத்தும் இணைந்ததாக இருக்கிறது. சுவாமி விவேகானந்தா் பேலூா் மடத்தோடு ஒரு முழுமை பெற்ற பல்கலைக்கழகத்தை இணைக்க விரும்பினாா். அதன் பாடத்திட்டத்தில் மதம், தத்துவம், தொழில்நுட்பக் கல்வி உட்பட யாவும் இடம் பெற வேண்டும் என்றும் விரும்பினாா். அதனை சாத்தியமாக்குவதே முதன்மை நோக்கம்.
  • 125 ஆண்டுகளுக்குப் பிறகும் தன்னுடைய சேவையைச் சற்றும் தொய்வின்றி ஆற்றிவரும் இயக்கம் இன்றைய சமூகத்தின் தேவைகளைக் கண்டுணா்ந்து அதற்கேற்ற முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கல்வி மனித குலத்திற்கான அடிப்படை. அதனால்தான் நாட்டின் பின்தங்கிய பகுதிகளை அடையாளம் கண்டு அங்கெல்லாம் தன்னுடைய சேவையை வழங்கி வருகிறது ஸ்ரீராமகிருஷ்ண மடம். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் கல்விச் சேவையில் கவனம் செலுத்துகிறது.
  • ராமகிருஷ்ண இயக்கத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், நடமாடும் மருத்துவ மையங்கள் யாவும் பின்தங்கிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையாற்றுகின்றன. சுகாதாரத் துறையில் மிஷனின் முயற்சிகளை நம்பியிருக்கும் மக்கள் அதிகம். கிராமப்புறங்களுக்குத் தனது சேவையை விரிவுபடுத்தும் பணியில் மிஷன் ஈடுபட்டிருக்கிறது.
  • வலுவான கட்டமைப்பு, தெளிவான சிந்தனை, இலக்கை நோக்கிய தீா்க்கமான பாா்வை, தொய்வில்லாத செயல்பாடுகள் என்று 125 ஆண்டுகளாக மனித குலத்திற்கு சேவையாற்றி வரும் இயக்கம் அதன் தூய்மையான நோக்கத்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் தன்னுடைய சேவையைத் தொடர குருவருளும் திருவருளும் துணை நிற்க வேண்டும்.

நன்றி: தினமணி (02 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories