- அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரைஉள்ளடக்கிய சிவில் சமூகம் ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். வெகுஜன மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், மக்கள் நலனுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது, அரசால் அறிமுகப்படுத்தப்படும் நல்ல திட்டங்களைப் பாராட்டுவது, தீங்கு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளைப் பாரபட்சமின்றி விமர்சிப்பது எனச் சரியான பாதையில் அரசை வழிநடத்த வேண்டிய பொறுப்பு, கற்றறிந்தவர்கள் அங்கம் வகிக்கும் சிவில் சமூகத்துக்கு உண்டு.
- ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளும் அந்தக் கட்சிகளுக்குக் கொள்கைரீதியாக ஆதரவு அளிப்பதாகச் சொல்லிக்கொள்வோரும் சிவில் சமூகத்தின் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதே இயல்பான எதிர்பார்ப்பு.
- ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சிவில் சமூகம் தனது பணியை முறையாகத்தான் செய்துவருகிறதா என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகால ஆட்சியில் பல பிரச்சினைகள், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருந்த நிலையிலும், சிவில் சமூகம் பொறுப்புடன் அவை அனைத்தையும் விமர்சிக்கவில்லை என்பதால் எழுந்திருக்கும் நியாயமான கேள்வி இது.
கள்ள மெளனம்:
- மத்திய பாஜக அரசுக்கு அடிபணிந்துபோகக்கூடிய பலவீனமான அரசாகப் பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், இதே தவறுகள் நிகழ்ந்திருந்தால் மாநில உரிமை, சமூக நீதி ஆகியவற்றைப் பேசும் முற்போக்கு அறிவுஜீவிகளால் அவை மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கும். ஆனால், திமுக விஷயத்தில் அந்த விமர்சனக் குரல்கள் குறைந்தபட்சம் முனகலைக்கூட எழுப்பவில்லை.
- வேங்கைவயலில் பட்டியல் சாதி மக்கள் பயன்படுத்திவந்த குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் சமகாலத்தின் மிக மோசமான சமூக இழிவு. ஆனால், பழனிசாமி ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு சாதிக் கொடுமை நிகழ்வுக்கும் அரசைப் பொறுப்பாக்கிக் கடுமையாக விமர்சித்த சிவில் சமூகத்தினரில் பெரும்பான்மையானோர், வேங்கைவயல் நிகழ்வுக்காக திமுக அரசை விமர்சிக்கவில்லை.
- இந்தக் கொடுமையை நிகழ்த்தியவர்கள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்படுவது தாமதமாவது தொடர்பான விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்தபோது, அவற்றை மறுதலித்து அரசுக்கு ஆதரவான வாதங்களை முன்வைக்கவும் சிலர் தலைப்பட்டனர். அதோடு இந்த நிகழ்வு குறித்த விசாரணையின் பெயரில் பாதிக்கப்பட்ட பட்டியல் சாதி மக்கள் இன்னலுக்கு உள்ளாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் ‘கள்ள மெளனம்’ காக்கப்படுகிறது.
- அதேபோல், அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தை-மகன் கொல்லப்பட்ட விவகாரம் சிவில் சமூகத்தினரிடமிருந்தும் மக்களிடமிருந்தும் மிகக் கடுமையான கண்டனங்களைப் பெற்றது. ஆனால், திமுக ஆட்சியில் அம்பாசமுத்திரம்சரகக் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைத் தாக்குதல்கள் வலுவான கண்டனங்களைப் பெறவில்லை.
- உயிரைப் பறிப்பது மட்டுமல்ல, பற்களைப் பிடுங்கி உயிர்போகும் வலியை ஏற்படுத்துவதும் மனித உரிமை நோக்கில் மிகப் பெரிய அநீதிதான். ஆனால், இந்த விவகாரமும் பெயரளவிலான விவாதம்கூட நடைபெறாமல் கடந்துபோய்விட்டது.
கட்டமைக்கப்படும் பொய்த் தோற்றம்:
- இவற்றோடு மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சென்னை மெரினா லூப் சாலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் மீன் விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டபோது, அதிகாரிகளும் காவல் துறையினரும் மீனவர்களிடம் காட்டிய அதீதக் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகளில் சிவில் சமூகத்தினர் உரிய எதிர்ப்பைப் பதிவுசெய்யவில்லை.
- முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்வைத்து சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் சிலர் அந்தத் திட்டத்தைத் தர்க்கரீதியாக விமர்சித்தனர். பேனா நினைவுச்சின்னம் போன்ற அடையாளச் சின்னங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
- குறிப்பாக, இந்தத் திட்டத்தை விமர்சித்த யாரும் கருணாநிதியின் நினைவு போற்றப்படுவதை எதிர்க்கவில்லை. நூலகம் அமைப்பது உள்ளிட்ட மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள் கருணாநிதியின் பெயரில் செயல்படுத்தப்படுவதை வரவேற்கவும் செய்தனர். ஆனால், கருணாநிதி மீதான வெறுப்பின் காரணமாகவே பேனா நினைவுச்சின்னம் எதிர்க்கப்படுகிறது என்னும் பொய்த் தோற்றம் சமூக ஊடகங்களில் வெற்றிகரமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்ற சில அறிவுஜீவிகள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்களும் இதற்கு துணைபோவது வேதனைக்குரியது.
மழுங்கடிக்கப்படும் நம்பிக்கை:
- தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்துக்கொள்ள வழிவகை செய்யும் சட்டத்திருத்தமும், திருமண மண்டபங்களில் மதுபான விநியோகத்துக்கு அனுமதி வழங்கிய அரசு உத்தரவும் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டன.
- இந்த இரண்டு விஷயங்களில் வெளிப்பட்ட ஒருங்கிணைந்த தீவிரமான எதிர்ப்பு, சிவில் சமூகம் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்ததை மறுக்க முடியாது. ஆனால் அந்த நம்பிக்கையை மழுங்கடிக்கும் விதமாக, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது தொடர்பாக சிவில் சமூகத்தினரில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராக விரல் நீட்டவில்லை.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகள் இந்த விஷயத்தில் சில காத்திரமான விமர்சனங்களை முன்வைத்திருப்பது ஆறுதலுக்குரியது. ஆனால், திமுகவைக் கொள்கைரீதியில் ஆதரிக்கும் கட்சிசாரா ஆளுமைகள் யாரும் இது குறித்து வாய்திறந்ததாகத் தெரியவில்லை. அரசின் அலட்சியத்தால் அல்லது ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளால் மக்களுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிவில் சமூகத்தினர் இதேபோல் அமைதி காப்பார்களோ எனும் எண்ணம் சாமானிய மக்களிடம் எழத் தொடங்கியிருக்கிறது.
- திமுகவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் சமூக நீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றுக்கு அக்கட்சி ஆற்றியுள்ள பங்களிப்பு காரணமாக கட்சிசாராத செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் பலர் திமுக மீது தோழமை உணர்வும் அபிமானமும் கொண்டிருப்பது இயல்பானது.
- மக்கள் நலனை மட்டுமே முதன்மைப்படுத்தி அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டிய கடமைக்கு அந்தத் தோழமை உணர்வும் அபிமானமும் இடையூறு செய்கின்றனவா என்பதை சிவில் சமூகத்தினராகத் தம்மைக் கருதிக்கொள்பவர்கள் சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.
- அளவுக்கு அதிமாகக் காத்திருப்பது, முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, தற்போதைய ஆட்சியாளர்களின் தவறுகள் குறித்த விமர்சனத்தை நீர்த்துப்போகச் செய்வது, விமர்சனங்களுக்குப் பதிலாக ‘தோழமைச் சுட்டிக்காட்டல்’களை முன்வைப்பது ஆகிய மென்போக்குகளை அவர்கள் கைவிட வேண்டும். இல்லையெனில், திமுக அரசு ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ ஆகிவிட்ட பழியை சிவில் சமூகத்தினரும் சேர்த்தே ஏற்க வேண்டியிருக்கும்.
நன்றி: தி இந்து (23 – 05 – 2023)