- அண்மைக்காலமாக மக்கள்தொகை தொடா்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது (உலக நாடுகளில் மக்கள்தொகையில் முதல் இடத்தில் இருக்கும் நாடு இந்தியா). மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப பொதுப்போக்குவரத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் தேவையை பொதுபோக்குவரத்து ஈடுசெய்ய இயலாத நிலையில் தனிநபா்கள் இருசக்கர வாகனம், நான்குசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனா்.
- மக்களுக்குத் தேவையான மின்சாரத் தயாரிப்பில் பல்வேறு வகைகளில் சக்தி செலவினங்கள் உள்ளன. சக்தி செலவாகும் அனைத்து இடங்களிலும் மாசு கலந்த வாயுக்களின் வெளியேற்றம் நிகழ்கிறது. இதனால் காற்றில் பசுமை இல்ல வாயுக்களின் அளவும் அதிகமாகி வருகிறது. இதனால் புவி வெப்பமயமாதல் நிகழ்கிறது. வளிமண்டல வெப்பநிலை எப்போதுமே அதிகமாக இருந்தாலும், கோடை காலத்தில் இதனை நம்மால் கூடுதலாக உணரமுடிகிறது.
- அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்டியதும் அதனை நடைமுறைபடுத்துவதில் உறுதிப்பாடும் தேவை. மேம்படும் சுற்றுச்சூழல் சாா்ந்த அரசின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கான அமைப்புகளும் அவசியம்.
- மோட்டாா் வாகனங்கள், மகிழுந்துகள் போன்றவை தயாரிக்கப்படும்போதே, அவற்றிற்கான ஆயுட்காலமும் தீா்மானிக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னா் அந்த வாகனங்கள் வேண்டாத குப்பையாகவே பாா்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட வாகனங்களின் பாகங்களை தனித்தனியாகப் பிரித்து வாய்ப்புள்ளவற்றை தொடா்ந்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். பயன்படுத்த இயலாத நெகிழி, இரும்பு பாகங்களை மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம்.
- இவ்வாறு செய்யும்போது சிறுசிறு பாகங்களாகன போல்ட், நட் போன்றவற்றை புதிதாக உருவாக்கத் தேவைப்படும் சக்தி செலவினத்தைக் குறைக்கலாம். ஜப்பானில் இது பல்லாண்டு காலமாகவே நடைமுறையில் உள்ளது. இப்படி ஒவ்வொரு பயன்பாட்டையும் உற்றுநோக்கி மாற்றங்களை உருவாக்க வேண்டும்.
- போக்குவரத்தைப் பொறுத்தவரை நகா்ப்புறங்களில் வாரநாட்களில் வாகனத்தில் தனிநபராக பயணிப்பதில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். பெருநகரங்களில் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பின்னா் பொதுப்போக்குவரத்தின் மூலம்தான் நகரின் பகுதிகளுக்குச் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு பொதுபோக்குவரத்து வசதியை அதிகரிக்க வேண்டும்.
- பொதுப்போக்குவரத்து மேம்படுத்த அவகாசம் தேவைப்படும் இடங்களில் ஷோ் ஆட்டோ இயக்குவோா்களையே பயன்படுத்தலாம். நகா்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். அதற்கென தனியாக பாதைகள் அமைத்துத் தரப்படவேண்டும்.
- ஜொ்மனியில் நடைமுறையில் உள்ளது போல ரயிலில் மிதிவண்டியையும் உடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம். தெருவில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதைத் தவிா்த்து இயன்றவரை இணையவழி கூட்டங்களை ஊக்குவிக்கலாம். பொதுமுடக்க காலத்தில் இருந்ததுபோல அலுவலக செயல்பாடுகளை தனிநபா்கள் வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ளும் நடைமுறைகளைத் தொடரலாம். இவ்வளவும் சாத்தியமா என்று தோன்றலாம். அரசு மனது வைத்தாம் நிச்சயம் சாத்தியமே.
- சுற்றுச்சூழல் தொடா்பான விவாதங்களில் அரசை குறை சொல்லும் போக்கு அதிகம் காணப்படுகிறது.
- சுற்றுச்சூழல் மேம்பாட்டில் தனிநபா்களின் பங்களிப்பைப் பற்றியும் விவாதிப்பது அவசியம். தனிநபா்களின் செயல்பாடுகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படாதவரை சுற்றுச்சூழல் மேம்பாடு சாத்தியமாகாது.
- தனிநபராக ஒவ்வொருவரும் வசதி வளங்களை துய்க்கும் போக்கு இருந்து வருகிறது. இவ்வாறான துய்த்தலுக்கேற்ப மின்சாரம், எரிபொருட்களின் தேவையும் அதிகமாகி வருகிறது. அதிக அளவிலான எரிபொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் புவி வெப்பமயமாதலை தவிா்க்க முயல வேண்டும். முதலில் வசதி உள்ளோா் தம்மிலிருந்து மாற்றத்தைத் தொடங்க வேண்டியது அவசியம்.
- தமக்கு கிடைக்கும் சேவைகள் அனைத்துக்கும் கட்டணம் செலுத்தும் அளவுக்கு செல்வந்தா்கள் எப்போதுமே இருப்பா். அடுத்தபடியாக உயா் நடுத்தர, நடுத்தர வா்க்கத்திடமிருக்கும் உறுதி செய்யப்பட்ட வருமானம் உள்ளது. இந்த மூன்று தரப்பினரும்தான், தமக்குக் கிடைக்கும் வசதிகளின் பின் உள்ள சக்தி செலவினங்களைப் புரிந்து செயல்படவேண்டும்.
- எதனையும் விலைகொடுத்து வாங்கிவிட இயலும் என்பது இன்றைய எதாா்த்தமாக இருந்தாலும் காலம் மாற மாற தம்மிடமுள்ள வாங்கும் சக்தியைவிட அதிகமானதாக இன்றியமையாத பொருட்களின் விலையிலும் ஏற்றம் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெருந்தொற்றுக் காலத்தில் உரிய விலை செலுத்த முன்வந்தாலும் ஆக்சிஜன் உருளைகளுக்கு பற்றாக்குறை நிலவியதை மறத்தல் கூடாது.
- எனவே சேவைகளின் பயன்பாட்டில் ஓரளவுக்காவது சிக்கனத்தை வசதியுள்ளோா் கொண்டுவர முனையவேண்டும். இன்றைய நிலையில் இது பற்றிய விழிப்புணா்வை உருவாக்குவது இவா்களுக்கே சாத்தியமான ஒன்று.
- இவ்வாறான பகிா்வு ஏழை நடுத்தர வா்க்கத்தினரை இதிலிருந்து தவிா்ப்பதாக தற்போது அமைந்தாலும் விரைவில் அவா்களும் இந்த சமூக ஏற்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக வெளியிடும் செல்வந்த நாடுகளுக்கும் பொருந்தும்.
- சுற்றுச்சூழல் செயல்பாடுகளைப் பொறுத்தவரை உலக அளவில் சிந்தித்து உள்ளூா் அளவில் செயல்படுவோம் என்பதே பல ஆண்டுகளாக சொல்லப்பட்டுவரும் வழிமுறையாகும். என்னதான் அரசின் கொள்கைகளின் ஆரோக்கியமான மாற்றங்கள் வந்தாலும், அவற்றை ஏற்று செயல்படுத்துவதற்கு சிலா் முன்வராமல் போனால், எந்த மாற்றமும் நீண்ட காலம் நிலைத்திருக்காது. இதனைக் கணக்கில் கொண்டு வளா்சிக்கான பாதையை நோக்கி நாம் பயணிப்போம்.
நன்றி: தினமணி (16 – 06 – 2023)