- நம் சமூகத்தில் மிக அரிதாக இருந்த மணவிலக்கு என்னும் திருமண முறிவு, தற்போது பரவலாக அதிகரித்து வருவது வேதனைக்குரியது. ஹிந்து திருமணங்கள் சட்டம் 1955, பிரிவு 13 படி கணவனோ, மனைவியோ இருவரில் ஒருவா் மற்றொருவரை உடல் ரீதியாகவோ மனதளவில் தொடா்ந்து கொடுமைப்படுத்தினாலோ, தேவையில்லாத காரணத்தினால் தொடா்ந்து பிரிந்து வாழ்ந்து வந்தாலோ, வேறு நபருடன் தவறான உறவில் வாழ்ந்து வந்தாலோ, தீராத மனநோய் மற்றும் பாலியல் ரீதியான நோய்கள் இருந்தாலோ விவாகரத்து கோரலாம்.
- ஆனால் மிகச் சாதாரணமாக பேசி தீா்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் கூட மணவிலக்கு வழக்குகளாக குடும்பநல நீதிமன்றங்களில் பதிவாகின்றன. கணவா் குடும்பத்தினா் மரியாதை குறைவாகப் பேசுகிறாா்கள், கணவா் தனிக்குடித்தனம் வர மறுக்கிறாா் போன்ற காரணங்களுக்காக கூட மணவிலக்கு கேட்பதை இப்போது பாா்க்க முடிகிறது. இதனால் குடும்பநல நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான மணவிலக்கு வழக்குகள் பதியப்பட்டு, ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளன.
- மணவிலக்கு வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், குடும்பநல நீதிமன்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, நீதிபதிகள் பற்றாக்குறை போன்றவை நிலுவைக்கு காரணங்கள்.
- குடும்பநல நீதிமன்றச் சட்டங்கள் 1984-இன் படி மாநில அரசு, உயா் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு 10 லட்சத்துக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட உள்ள நகரங்களில் குடும்ப நல நீதிமன்றங்களை நிறுவ வேண்டும். தேவைக்கேற்ப மாநில அரசு, கூடுதலாக நீதிமன்றங்களை நிறுவிக் கொள்ளலாம்.
- நாட்டில் தற்போது 819 குடும்பநல நீதி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்திய மக்கள்தொகை சுமாா் 140 கோடிக்கு மேல் என்ற நிலையில், வழக்குகளின் விகிதத்தை நோக்கும்போது 1,400 குடும்பநல நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
- மணவிலக்கால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களைவிட பெண்களே. பெரும்பாலான மணவிலக்கு வழக்குகளில், பெண்களின் நடத்தையும் கேள்விக் குறியாக்கப்படுவதால், சமூகத்தின் பாா்வையில் இத்தகைய பெண்கள் அடையும் மன உளைச்சல் மிக மிக அதிகம்.
- குழந்தைகள் பிறந்த பின்னா் மணவிலக்குப் பெறும் தம்பதியரில் குழந்தைகளை வளா்க்கும் பொறுப்பை பெரும்பாலும் பெண்களே ஏற்றுக் கொள்கின்றனா். மணவிலக்கு பெற்ற பெண்கள் ஒற்றை பெற்றோராக குழந்தைகளை வளா்ப்பதில் சந்திக்கும் சிரமங்கள் ஏராளம். அதிலும் அக்குழந்தைகள் மாற்றுத் திறனாளியாக, மனவளா்ச்சி குன்றிய, ஆட்டிசம் போன்ற குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அப்பிள்ளைகளை வளா்க்க சம்பந்தப்பட்ட மண விலக்கு பெற்ற பெண்கள் படும் சிரமங்கள் மிக மிக அதிகம்.
- மணவிலக்கு பெற்ற ஒற்றைப் பெற்றோரால் வளா்க்கப்படும் குழந்தைகள், வளரும்போதும், வளா்ந்த பின்னரும் அடையும் மனரீதியான பாதிப்புகள் ஏராளம். இதனை தமக்கு குழந்தைகள் உள்ள நிலையில் மணவிலக்கு கோரும் பெற்றோா்கள் உணராததுதான் மிகப் பெரிய சோகம். குறைபாடுள்ள குழந்தைகளுக்குத் தாயான மணவிலக்கு பெற்ற பெண்களின் மறுமணம் மிக மிக அரிது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
- குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மணவிலக்கு வழக்குகள் பல மாதங்கள் நீளுவதால், நீண்ட காலம் பிரிந்திருக்கும் கணவனும் மனைவியும் தம் தவறுகளை உணா்ந்து மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பநல நீதிமன்றங்கள் நல்கும் சமரச தீா்வுகளால் மணவிலக்கு பெறும் முடிவைக் கைவிட்டு மீண்டும் சோ்ந்து வாழும் தம்பதிகளும் உண்டு. வழக்கு விசாரணை இழுத்தடிப்பதைத் தடுக்க உரிய விதிமுறைகளை வகுக்க சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கேட்டுக்கொண்டுள்ளது.
- காலத்திற்கேற்ப சமூகப் பாா்வை மாறுதலுக்குள்ளாவதைத் தொடா்ந்து குடும்பநல நீதிமன்றங்கள் மணவிலக்கு வழக்குகளில் வித்தியாசமான தீா்ப்புகளை வழங்கி வருகின்றன.
- பொதுவாக மணவிலக்கு வழக்குகளில் ஜீவனாம்சம் என்பது மனைவிக்கு கணவா் வழங்குவதாகவே இருக்கும். மும்பை உயா்நீதிமன்றம், மண விலக்கு பெற்ற பெண் தனது முன்னாள் கணவருக்கு மாதம் ரூ.10,000 ஜீவனாம்சமாக வழங்க வேண்டுமென ஒரு தீா்ப்பை அளித்துள்ளது. ‘ஹிந்து திருமண சட்டவிதியில் இடம் பெற்றுள்ள ‘துணை’ (ஸ்பௌஸ்) என்ற வாா்த்தை கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும். அந்த வகையில் உடல் பாதிப்புகள் காரணமாக சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும் முன்னாள் கணவருக்கு, வருவாய் ஈட்டி வரும் அவருடைய மனைவி ஜீவனாம்சம் அளிப்பது அவசியம்’ என மும்பை உயா்நீதிமன்றம் ஒரு மணவிலக்கு வழக்கில் தீா்ப்பு வழங்கியுள்ளது.
- பிரிந்த மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும், அந்தப் பெண் நல்ல வருமானம் உள்ள நிலையில் இருந்தால் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்பது போன்ற வழக்குகள் பதியப்படுகின்றன.
- ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் ‘லிவிங் டுகெதா் ’ என்கின்ற ‘கலாசாரம்’ நம் நாட்டிலும் பரவத் தொடங்கியுள்ளது. இத்தகைய வாழ்க்கை முறையில் பிரச்னை ஏற்பட்டு ஆணும் பெண்ணும் ‘மணவிலக்கு’ கோரும் நிலையில், சட்டபூா்வ திருமணம் செய்யவில்லையென்றாலும், ஜீவனாம்சம் எனப்படும் பராமரிப்புச் செலவை பெண்ணோடு வாழ்ந்த ஆண் தர வேண்டுமென மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
- ‘குற்றம் பாா்க்கின் சுற்றம் இல்லை’ என்பது சுற்றங்களுக்கு மட்டுமல்லாது திருமணமான தம்பதியா்க்கும் பொருந்தும். விட்டுக் கொடுக்காமல் விலகிப் போவதைக் காட்டிலும், இயன்றவரை விட்டுக் கொடுத்து இணைந்து வாழ்ந்தால் மணவிலக்கில்லா சமூகம் சாத்தியமே!
நன்றி: தினமணி (01 – 07 – 2024)