TNPSC Thervupettagam

மணிப்பூரை மீட்டெடுப்பதற்குச் சரியான வழி

June 28 , 2023 568 days 407 0
  • கடந்த பல வாரங்களாக மணிப்பூர் எதிர்கொண்டிருக்கும் மானுடசோகத்துக்கும் சமூகக் கொந்தளிப்புக்கும் பிரிவினைவாத அரசியலே காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இனவரைவியல் சொற்கள் சார்ந்து ஏற்பட்ட குழப்பம், வெவ்வேறு சமூகங்களின் தோற்றம் குறித்த தரவுகளின் போதாமை, அறிவியல்பூர்வமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இல்லாதது ஆகிய பிரச்சினைகளும் இந்த நெருக்கடிக்குப் பங்களித்துள்ளன.
  • பட்டியல் பழங்குடியினர் என்று அங்கீகரிக்கப்படுவதற்கான மெய்தேய் (Meitei) சமூகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவு, மணிப்பூரில் வன்முறை மோதல்களுக்கும் ரத்தம் சிந்துதலுக்கும் வித்திட்டுள்ளது.
  • மெய்தேய் சமூகத்தினரின் கோரிக்கையும், ஏற்கெனவே பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்கப் பட்டுவிட்ட சமூகத்தினர் அதற்கு வெளிப்படுத்திவரும் கடுமையான எதிர்ப்பும் மணிப்பூர் மாநிலத்தின் மலைப் பகுதிக்கும் பள்ளத்தாக்குப் பகுதிக்கும் இடையிலான பிளவு, மெய்தேய் சமூகத்தினர் யார் என்பதில் நிலவும் குழப்பம் ஆகியவற்றுடன் வலுவான தொடர்புடையவை.

பல சமூகங்களின் நிலம்:

  • மெய்தேய் அல்லது மெய்தேயி (Meiteyi) என்பது மணிப்பூர்வாசிகளைக் குறிக்க பரவலாகப் பயன்படுத்தப் படும் சொல். இந்த மாநிலத்தில் அதிக மக்களால் பேசப்படும் மொழி மணிப்புரி. இதுவே மாநில அரசின் அதிகாரபூர்வ மொழி; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் அட்டவணை மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழியும்கூட.
  • ஆனால், இம்மொழி மணிப்பூருக்கு வெளியேயும் அதாவது அசாம், திரிபுரா உள்ளிட்ட பிற வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் மயன்மார், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளிலும் பேசப்படுகிறது. இதனால் விளையும் பொருள் குழப்பம், மணிப்புரி மொழி பேசும் சமூகங்கள் அனைத்தும் மெய்தேய் என்னும் பிம்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.
  • இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு அமைப்பின் ‘மணிப்பூரின் மொழிகள்: ஓர் அறிமுகம்’ என்னும் வெளியீட்டின்படி, மணிப்பூர் அதன் இயல்பிலேயே பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகளை உள்ளடக்கியது. விஷ்ணுபூர், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தெளபல் ஆகிய நான்கு நிர்வாக மாவட்டங்களாகப் பள்ளத்தாக்குப் பகுதி பிரிக்கப்பட்டுள்ளது.
  • சந்தேல், சுரசந்த்பூர், சேனாபதி, தமெங்லாங், உக்ருல் ஆகிய ஐந்து நிர்வாக மாவட்டங்களாக மலைப் பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. 22,327 சதுர கி.மீ. நிலப்பரப்பைக் கொண்ட இந்த மாநிலத்தில், வெவ்வேறு மொழிகளைப் பேசும், வெவ்வேறு பண்பாடுகளைப் பின்பற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட சமூகங்கள் வாழ்கின்றன.
  • மாநிலத்தில் முதன்மையாக மெய்தேய்கள், குகிகள், நாகாக்கள் ஆகியோர் வசிக்கின்றனர். இம்மூன்று பிரிவினரும் திபெத்திய-பர்மிய மொழிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், இன்னும் உற்றுநோக்கினால் இம்பால் மாவட்டத்தின் துணைப் பிரிவான ஜிரிபம் பகுதியில், ஆஸ்த்ரோ - ஆசிய மொழிகளைப் பேசுவோரும் சந்தேல் மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள மோரே என்னும் ஊரில் திராவிட மொழிகளைப் பேசுவோரும் தலைநகர் இம்பாலில் முதன்மையாகவும் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் இந்தோ - ஆரிய மொழிகளைப் பேசுவோரும் வசிப்பதைக் காண முடியும்.
  • மணிப்பூருக்கு உள்ளேயே மக்கள் வாழும் பிராந்தியத்துக்கு ஏற்ப வெவ்வேறு வழக்குகளில் மணிப்புரி மொழி பேசப்படுகிறது. பேச்சுவழக்கில் உள்ள இந்த வேறுபாடு அனைவருக்கும் புரியும்.
  • மாநிலத்தின் அலுவல் சார்ந்த பரிமாற்றங்களில் வங்காள வரிவடிவம், மெய்தேய்-மயெக் வரிவடிவம்,ரோமானிய வரிவடிவம் ஆகிய மூன்று வரிவடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மெய்தேய் சமூகத்தினர் எழுதுவதற்கு வங்காள வரிவடிவத்தை ஏற்பதற்கு முன் மெய்தேய்-மயெக் வரிவடிவத்தைப் பயன்படுத்திவந்தனர்.
  • இன்று உள்ளூர் வரிவடிவமாகக் கருதப்படும் மெய்தேய்-மயெக் அலுவல்பூர்வமாக, அலுவல் பூர்வம் அல்லாத வகை என இரண்டிலும் அதிக முக்கியத்துவம் பெற்றுவருகிறது. சில மெய்தேய் சமூகங்கள் (மெய்தேய் என்பது ஒற்றைக் குழு அல்ல) ஏற்கெனவே பட்டியல் சாதி அல்லது இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டன.
  • மோதல்களின் பின்னணி: மணிப்பூரின் நிலையைப் பிற மாநிலத்தவர்கள் புரிந்துகொள்ள மகாராஷ்டிரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது உதவிகரமாக இருக்கும். மராத்தா என்பது பல உள்-சாதிகளையும் இனக் குழுக்களையும் உள்ளடக்கிய பொதுவான சமூகம்.
  • இது தவிர, பண்பாடு சார்ந்த எழுத்துப் பிரதிகளில் குறிப்பாக, காலனி ஆதிக்கக் காலத்தில் ‘மராத்தா’வும் ‘மகாராஷ்டிர’மும் ஒன்றே என்று பொருள்படும் வகையில் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஆனால், மகாராஷ்டிரர்கள் அனைவரும் மராத்தாக்கள் அல்ல, மராத்தி பேசும் மக்கள் அனைவரும் மராத்தா சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்ற புரிதல் அனைவருக்கும் உள்ளது.
  • மெய்தேய் சமூகத்தினர் பட்டியல் பழங்குடிகளாக அங்கீகரிக்கப்படுவதற்கான கோரிக்கை மகாராஷ்டிரத்தில் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு கோரிய மராத்தா ஆரக்‌ஷண் மோர்ச்சா அல்லது ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரிய இயக்கத்துடன் ஒப்பிடத் தக்கது.
  • மணிப்பூரின் அனைத்துப் பழங்குடி மாணவர்கள் சங்கம் இந்தக் கோரிக்கைக்கு எதிராகக் கண்டனப் பேரணி நடத்தியது; அப்போதே மோதல்கள் வெடித்தன. அதைக் கட்டுப்படுத்தவோ நிலைமையைச் சீரமைக்கவோ அரசு அதிகாரிகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு:

  • பெரும்பான்மைச் சமூகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அரசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் நீண்ட காலமாகக் கிடப்பில் கிடக்கும் நடவடிக்கையான - மாநில அளவிலான சமூகங்களின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை - நடத்தியிருக்கும். ஒழுங்கான கணக்கெடுப்பு இல்லாத காரணத்தால் மணிப்பூர் மக்களின் கனவுகள், நம்பிக்கைகள், உணர்வுகள், மொழி மரபுகள், சமூக அடையாளங்கள் ஆகியவற்றை அரசியல்வாதிகள் தமது லாபத்துக்காகத் தவறாகப் பயன்படுத்திவருகிறார்கள்.
  • மணிப்பூர் நீண்ட காலமாகக் கடுமையான ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப் பகுதியாக இருந்துவந்துள்ளது. தீவிரமான சுதந்திர மனநிலையுடன் தமது பண்பாட்டு மரபுகளின் மீது பெருமிதம் கொண்ட இந்த மக்கள் மத்திய அரசின் விருப்பங்கள் தம்மீது திணிக்கப் படுவதற்கு எதிரான நீண்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். அறிவியல்பூர்வமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, மணிப்பூரின் பல்வேறு இன-மொழிசார் சமூகங்களின் தேவைகளைச் சரியாக மதிப்பிடுவதற்கு வருங்கால மாநில அரசு நிர்வாகத்துக்கு உதவிகரமாக இருக்கும்.
  • இந்த நொடியில் மணிப்பூர் மிகப் பெரிய மானுடப் பேரிடரை எதிர்கொண்டுள்ளது. இனம், மொழி, மதம் எதுவென்றாலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இப்போது தேவைப்படுவது ஆறுதலும் அக்கறையும் கவனிப்பும்தான். ஆனால், நீண்ட கால நோக்கில் மணிப்பூரில் காவல், ராணுவக் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டியதில்லை.
  • முறையான சமூகவியல் புரிதலும், அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிசெய்வதே ஒவ்வொரு அரசுக்கும் அரசமைப்பு விதித்துள்ள கடமை என்பதைப் புரிந்துகொண்ட அரசும் தான் தேவை. மாறாக, பிரிவினை அரசியல் அந்த அழகான மாநிலத்தை மேலும் துன்பத்துக்கும் வேதனைக்கும் மோதல்களுக்கும்தான் இட்டுச் செல்லும்.

நன்றி: தி இந்து (28  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories