- மணிப்பூரில் காவல் துறையினராலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடக்கும் கலவரங்களால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
- மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிப்பதற்கு ஆதரவாக அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அம்மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தினர் எதிர்க்கின்றனர். ஓபியம் பயிரிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி-ஜோமி பழங்குடியினர்மீது பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பழங்குடியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதைத் தவிர, இனக்குழுக்கள் சார்ந்த பிற பிணக்குகளும் இந்தப் பிரச்சினையின் அடிநாதங்கள்.
- மே 3 அன்று வெடித்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருக்கிறார்கள். கலவரம் தொடர்ந்ததை அடுத்து, மே 29 அன்று மணிப்பூர் சென்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு சில நாள்கள் தங்கியிருந்து, பல்வேறு இனக் குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
- ஒருபுறம் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களைச் சந்தித்து அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். மணிப்பூரில் இத்தகைய வன்முறைக்கு வித்திட்ட காரணிகளை ஆராய குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையிலான மூன்று நபர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்திருக்கிறது. ஆனாலும் அங்கு இன்னும் அமைதி திரும்பியபாடில்லை.
- குகி பழங்குடியினர் தங்கியிருக்கும் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவத்தில் காயமடைந்த ஏழு வயதுச் சிறுவன் ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்டபோது அவன், அவனது தாய், அண்டை வீட்டுப் பெண் என மூவரும் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த கலவரக்காரர்களால் எரித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
- இந்தச் சம்பவத்தின்போது, ஆம்புலன்ஸுக்குப் பாதுகாப்பாகச் சென்ற காவல் துறைக் கண்காணிப்பாளர் உயிருக்குப் பயந்து, வேறொரு வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கிறார். குகி பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ உங்ஸாகின் வால்ட்டே தாக்குதலுக்கு உள்ளாகிப் பல நாள்களாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.
- கலவரக்காரர்கள், காவல் துறையினரிடமிருந்தே ஆயுதங்களைப் பறித்துச் சென்றிருப்பது இந்தக் கலவரங்கள் சமூக விரோதிகளால் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது. மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவரான முதல்வர் பிரேன் சிங், கலவரத்தைக் கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்னும் விமர்சனங்களும் கவனிக்கத்தக்கவை.
- இவற்றுக்கிடையே, பழங்குடிகளுக்கு எனத் தனியாக நிர்வாக அமைப்பு வேண்டும் என்று ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்த ஏழு பேர் உள்பட 10 எம்எல்ஏ-க்கள் கோரிக்கை விடுத்தது சர்ச்சையாகியிருக்கிறது. இப்படியான சூழலில், உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் டெல்லி இல்லத்துக்கு எதிரே திரண்ட குகி பழங்குடியினர் அமைதியை மீட்க வேண்டிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
- இப்பிரச்சினை தொடர்வதில் மாநில அரசின் செயலற்ற தன்மைக்குப் பங்குள்ளது என்றாலும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது. பல்வேறு சிடுக்குகள் நிறைந்த இப்பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வை எட்ட மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.
நன்றி: தி இந்து (11 – 06 – 2023)