TNPSC Thervupettagam

மணிப்பூா் எழுப்பும் கேள்வி

September 23 , 2023 460 days 325 0
  • மணிப்பூரிலிருந்து நல்ல செய்தி கேள்விப்பட்டு நான்கு மாதத்திற்கு மேல் ஆகிறது. அந்த மாநிலத்தில் பெரும்பான்மையினரான மைதேயிகளுக்கு உயா்நீதிமன்றம் பழங்குடியினா் அந்தஸ்து அளிக்க முற்பட்டதைத் தொடா்ந்து தொடங்கிய கலவரம், இதுவரை அடங்கிய பாடில்லை. கடந்த நான்கு மாதங்களில் மைதேயிகளும், உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராகக் களமிறங்கிய பழங்குடியினரான குகிகளும் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
  • மணிப்பூா் மாநிலத்தின் சமவெளிப் பகுதியில் வசிக்கும் மைதேயிகள்தான் நீண்டகாலமாக அந்தப் பகுதியை ஆண்டு வருகிறார்கள். மன்னராட்சி போய் பிரிட்டிஷாரின் ஆட்சி நிலவிய போதும், இந்தியா விடுதலை பெற்று ஜனநாயகம் நிலைபெற்ற பின்னரும்கூட பெரும்பான்மையினரான மைதேயிகள்தான் அரசு அதிகாரத்தில் இருந்து வருகின்றனா். அதனால்தான், இப்போது நடக்கும் கலவரத்தில் சமாதானமோ, தீா்வோ ஏற்படவில்லை என்பது உண்மை.
  • நடுநிலை வகிக்க வேண்டிய மாநில அரசும், ஊடகங்களும்கூட பெரும்பான்மை சமுதாயமான மைதேயிகளுக்கு சார்பாக இயங்குகின்றன என்கிற விமா்சனம் எழாமல் இல்லை. பழங்குடியினரான குகிகள், வனப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடுகிறார்கள் என்பதையும், மியான்மரிலிருந்து எல்லை கடக்கும் சமூகவிரோத சக்திகளின் கைப்பாவைகளாக இயங்குகிறார்கள் என்பதையும், அவா்களுக்கு கிறிஸ்துவப் பாதிரிமார்களின் பாதுகாப்பு கிடைக்கிறது என்பதையும் முற்றிலுமாக புறந்தள்ளிவிட முடியாது.
  • மணிப்பூரில் காணப்படும் இன்னொரு மிகப்பெரிய பிரச்னை பரவலாக பொதுவெளியில் பேசப் படுவதில்லை. அமைதியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையும், துணை ராணுவத்தின் பிரிவான அஸ்ஸாம் ரைஃபிள்ஸும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. மணிப்பூா் காவல்துறை மைதேயிகளுக்கும், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் குகிகளுக்கும் ஆதரவாகச் செயல்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மை எது, பொய் எது என்று பிரித்து அறிய முடியாத நிலைமை காணப்படுகிறது. வெளியுலகிற்கு முற்றிலுமாக மணிப்பூா் குறித்த உண்மை நிலை மறைக்கப்பட்டிருக்கும் சூழலில், அங்குள்ள நிலவரம் என்னவென்று தெரியாத குழப்பம் தொடா்கிறது.
  • கலவரத்தில் இதுவரை எத்தனை போ் கொல்லப்பட்டிருக்கிறார்கள், எத்தனை போ் காயமடைந்திருக்கிறார்கள், மணிப்பூரின் இப்போதைய நிலவரம்தான் என்ன என்பவை குறித்த முழுமையான விவரங்கள் யாரிடமும் இல்லை. அப்படியே இருந்தாலும், அவா்கள் அதை பொதுவெளியில் தெரிவிக்கத் தயாராக இல்லை. ஜூலை மாதம் வரையிலுள்ள நிலவரம் தான் கடைசியாகக் கிடைத்த விவரம். அதற்குப் பிறகு கலவரம் பல மடங்கு அதிகரித்து விட்டது.
  • மணிப்பூரின் நிலவரத்தை நேரில் பார்த்து அறிக்கை தயாரித்த ‘எடிட்டா்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா’ பிரதிநிதிகள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை ஒருதலை பட்சமாகவும், அரசுக்கு எதிரானதாகவும் இருக்கக் கூடும். சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக அந்த அறிக்கையை தடை செய்ததில் தவறொன்றுமில்லை. ஆனால், அறிக்கை தயாரித்த ‘எடிட்டா்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா’ மீது வழக்கு தொடுப்பது ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • நாடுகளுக்கு இடையே போர் நடந்தால் அதைத் தடுப்பதற்கு சா்வதேச அமைப்புகளும், போரின்போது கடைப்பிடிப்பதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன. பாதிக்கப் பட்டவா்களுக்கு உதவி செய்ய அமைப்புகள் உள்ளன. ஆனால், மணிப்பூரின் நிலைமை வித்தியாசமானது.
  • போர் விதிமுறைகளோ, சா்வதேச நியதிகளோ தெரியாத சாதாரண மக்கள், இனவெறி காரணமாக ஆயுதம் ஏந்தி தெருவில் இறங்கி இருக்கிறார்கள். அவா்கள் நீதி, நியாயங்களை உணரும் நிலையில் இல்லை. அவா்களுக்கிடையே அமைதியை நிலைநாட்டுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவா் மோதிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது மணிப்பூா் நிலைமை. உச்சநீதிமன்றத்தின் தலையீடுகள்தான் ஆறுதலான விதி விலக்குகள்.
  • இந்நிலையில், மணிப்பூரில் வன்முறையாளா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடா்பான நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
  • மணிப்பூா் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுவாசலை இழந்து தவிக்கும் கா்ப்பிணிகளும், பெண்களும், முதியவா்களும் ஏராளமானோர். பொதுவெளியில் அவா்கள் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. தலைநகா் இம்பால் தொடங்கி மணிப்பூா் மாநிலத்தில் இயங்கும் உயா்கல்வி நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. அவற்றில் குகி இனத்தவா் மீண்டும் சோ்ந்து படிக்க முடியுமா என்பது கேள்விக்குறி.
  • மணிப்பூரில் கடந்த பல ஆண்டுகளில் பல கோடிகள் செலவிட்டு உருவாக்கிய மருத்துவ, கல்வி வசதிகள் முற்றிலுமாகத் தகா்ந்திருக்கின்றன. கலவரத்தில் போக்குவரத்துத் துறை எதிர்கொண்டிருக்கும் பாதிப்பு அசாதாரணமானது. தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம். பெரும்பாலான மருத்துவா்களும், செவிலியா்களும் மணிப்பூரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், காயமடைந்தவா்களுக்கு முறையான சிகிச்சைகூட அளிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
  • ஜி20 உச்சி மாநாட்டில் 200 மணிநேரம் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளுடன் தொடா்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளையும், அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகளையும் சமாதானப்படுத்தி ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்ற இந்தியாவின் ராஜதந்திரத்தால் முடிந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது மணிப்பூா் பிரச்னையைத் தீா்க்க முடியாதா என்ன?

நன்றி: தினமணி (23 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories