TNPSC Thervupettagam

மண்ணைக் காப்போம்... மக்களைக் காப்போம்!

June 17 , 2019 2048 days 1310 0
  • நாடு என்பது எது? அதன் முன்னேற்றம் என்பது என்ன? அதன் வாழ்வும் தாழ்வும் எங்கே? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தால்தான் நாட்டுப்பற்று என்பதன் பொருள் புரியும்.
சங்க காலத்தில்
  • அது நாடாக இருக்கலாம்; காடாக இருக்கலாம். பள்ளமாக இருக்கலாம்; மேடாக இருக்கலாம். அதனால் அது நல்ல நிலமாகி விடாது. எங்கு நல்ல மனிதர்கள் இருக்கிறார்களோ, அந்த நிலப் பகுதியே நல்ல நாடாகும் என்று நாட்டுக்கு இலக்கணம் கூறிய ஒüவையின் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. ஒன்றாக வாழ்வோம், நன்றாக வாழ்வோம் என்று யார் நினைக்கிறார்களோ, அவர்களே நல்லவர்கள்; அவர்களால்தான் நாடும் இருக்கிறது; நாமும் இருக்கிறோம். அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருப்பதால் நாட்டில் பிரச்னைகளும் பிணக்குகளும் கூடிக் கொண்டிருக்கின்றன.
  • மத்திய அரசின் சில திட்டங்கள் தமிழ்நாட்டின் இயற்கைச் சூழலுக்கும், அதனைச் சார்ந்த விவசாயிகளின் வாழ்வுக்கும் எதிராக அமைந்துள்ளது. நமது பூமியின் எல்லையாக விளங்கும் கடல் பகுதிக்கும், அதனைச் சார்ந்து வாழும் மீனவர்களின் வாழ்வுக்கும் பேரழிவை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது.
  • தமிழகத்தில் பேரழிவை உருவாக்கும் ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், எரிவாயு குழாய் பதித்தல், உயர் அழுத்த கோபுரம், அணு உலை, எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களால் விவசாயப் பெருங்குடி மக்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டனர்.
தமிழ்நாடு
  • மக்கள் நலனையும், எதிர்காலத் தலைமுறைகளையும் கவனிக்க வேண்டிய அரசுகள் மக்களைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? ஒரு சிலரின் நலனுக்காக பெரும்பாலான மக்கள் பலியாவதா? மக்கள் ஏற்காத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு கூறிக்கொண்டேமக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கே காவல் துறையை ஏவி வருகிறது.
  • மக்களுக்கு வாழ்வா, சாவா போராட்டமாகி விட்டது. போராடுவதே வாழ்க்கையாகி விட்டால் வாழ்வது எப்போது? ஹைட்ரோ கார்பன் என்பது பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, நாப்தா ஆகியவற்றின் கூட்டு எரிசக்தியை உள்ளடக்கியதாகும். இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டதில் தமிழகத்தில் மட்டும் 31 இடங்களில் எடுக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2006 முதலே இதற்கான பணிகள் தொடங்கி விட்டன.
  • வேளாண் விளைநிலங்களில் சுமார் 6,000 அடி ஆழத்துக்குத் துளையிட்டு எடுக்கப்படும் எரிவாயு, எண்ணெய்க் கசிவுகள் மற்றும் கழிவுகளால் விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். வனங்களும், உயிரினங்களும் அழிந்து போகும்.
  • அது மட்டுமின்றி, தொலைதூரத்துக்குத் துளையிட்டுப் பணிகளை மேற்கொள்ளும்போது, வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் ரசாயனங்களால் மனித உயிர்கள், பசுமை நிலங்கள் நீர் இல்லாமல் அழிந்து போகும்.
  • இவ்வாறு விளைநிலங்களை அழிப்பதற்கு ஒரு திட்டம் தேவையா? இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 55 மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு 8.2018 அன்று முதல் அனுமதி வழங்கியுள்ளது. ஹைட்ரோ கார்பன் என்பது கச்சா எண்ணெய், மீத்தேன், இயற்கை எரிவாயு, ஷெல் கேஸ் ஆகியவற்றின் பிறப்பிடமாகும்.
மண்டலங்கள்
  • இந்த 55 மண்டலங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 14 மண்டலங்களும், மீதி 41 மண்டலங்கள் வேதாந்தா நிறுவனத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் கடலூர் முதல் இராமநாதபுரம் வரை உள்ள 3 மண்டலங்களில் சுமார் 2,069 கி.மீ. அளவுக்கு விவசாய நிலங்களையும், கடல் வளங்களையும் அழித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த வேகம் காட்டப்படுகிறது. இதனால் மண் வளம், மலை வளம், நீர் வளம், நில வளம், கடல் வளம் எனக் கட்டிக் காத்த இயற்கை வளங்கள் பாழாவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
  • சில ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நிலக்கரி படுகையில் மீத்தேன் எடுப்பதற்கு "கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.
  • இதனால், இந்தத் திட்டம் பற்றி ஆய்வு செய்ய வல்லுநர் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கத் தடை விதித்து 10.2015 அன்று ஆணை பிறப்பித்தது. அந்த அரசாணை எண் 186. இந்தத் தடை உத்தரவு இப்போதும் உள்ளது. இந்த நிலையில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் மீத்தேன் உள்ளிட்ட அனைத்து வகையான பெட்ரோலிய ரசாயனப் பொருள்களை எடுப்பதற்கும், அது தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளவும் ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • இது விவசாயிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் இறுதிவரை போராடுவது என்ற உறுதியோடு போராட்டக் களத்தில் உள்ளனர்.
காவிரி டெல்டா
  • காவிரி டெல்டா என்பது ஆண்டுதோறும் பல லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யும் பகுதியாகும். பல கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இதனை மத்திய அரசு பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பறித்துவிடும் என்பதில் விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். அத்துடன் தண்ணீருக்காகத் தவிக்கும் இந்நாளில் நிலத்தடி நீர்வளம் பாதிக்கப்படுவதுடன் விவசாயத்துக்குத் தகுதியற்றதாக  நில வளம் மாறிவிடும்; சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கும் என்று வல்லுநர்களும்எச்சரித்துள்ளனர்.
  • அரசாணையின் மூலம் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் அதைப் பொருட்படுத்தாமல் மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்படுகிறது. கிணறுகளைத் தோண்டுவதற்கான இடங்களை அடையாளம் காண்பது, அளவிடுவது, ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது ஆகிய செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
  • தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மண்ணையும், மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்வதுடன் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் அனுமதியை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசையும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. மக்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து விட்டு ஏற்படும் வளர்ச்சி யாருக்கானது என்பதையும் அவர்கள் கூறவேண்டும்.
  • மத்திய அரசு இப்போது சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை 100 ஆண்டுகள் மட்டும் செயல்படுத்த முடியும். அந்த அளவுக்குத்தான் இந்தப் பகுதியில் உள்ள நிலத்தடியில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் உள்ளன என்று ஆய்வு கூறுகிறது. இந்த நூறு ஆண்டுகளுக்குள் இந்தப் பகுதியில் நிலம், நீர், காற்று அனைத்தும் மாசுபடுத்தப்பட்டுவிடும்;
வரலாற்றுப் பிழை
  • மக்கள் வாழ முடியாத பூமியாகிவிடும். இந்தப் பேரழிவைப் பார்க்க நாம் இருக்க மாட்டோம். தீராத பழி மட்டுமே எஞ்சி நிற்கும். ஒரு தலைமுறையை நாசம் செய்த பழி மட்டுமே எஞ்சி நிற்கும். இந்த வரலாற்றுப் பிழையைத் தவிர்க்க வேண்டும் என்றே அறிவாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். பெட்ரோலிய எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. அதனால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்போதுதான் எரிபொருள் தேவைக்கான மாற்றை நோக்கிய ஆய்வும், நடவடிக்கையும் தேவைப்படுகிறது. இன்று உலகில் கிடைக்கும் தோரியத்தில் 50 சதவீதம் இந்தியாவில் கிடைக்கிறது.
  • குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரம், ஒடிஸா கடற்கரைகளில் மணலாகக் கொட்டிக் கிடக்கின்றன. காரில் இப்போது பயன்படுத்தப்படும் பெட்ரோலிய எரிபொருளுக்குப் பதிலாக தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் ஆராய்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது.
  • இதனால் சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும். இத்தகைய கார் பயன்பாட்டுக்கு வந்தால் உலகின்முக்கிய எரிபொருள் தரும் நாடாக இந்தியா மாறும். இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அரசு செயல்படுவது நல்லது.
  • ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் வசதியின்றி உயிரிழந்து வருகின்றனர் என்று நீதி ஆயோக் அமைப்பு 2018-இல் எச்சரித்தது. இன்று மக்கள் தண்ணீருக்கு அலையும் அவலம் அதனை நிரூபிக்கிறது. இந்த நிலை நீடித்தால் இனி உணவுப் பஞ்சமும் தலைவிரித்தாடும் என்று வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர். நெற்களஞ்சியத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதை வாழ வைப்பதன் மூலமாகவே நாட்டையும், வீட்டையும் காப்பாற்ற முடியும். மண்ணைக் காப்பதன் மூலம் மக்களைக் காப்போம்.

நன்றி: தினமணி (17-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories