முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களை பண்டைத் தமிழர்கள் வகுத்து அவற்றுக்குரிய தெய்வ வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வாழ்ந்தனர்.
இவ்வாறு வாழ்ந்த நம் முன்னோர் ஆண்டில் இரண்டிரண்டு மாதங்களை ஒரு காலக் கணக்காக்கி முறையே கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று பருவகாலத்தினை வகுத்தும் வாழ்ந்தனர். கோடை மற்றும் கடுங்கோடைக் காலத்தையும் பிற பருவகாலங்களைப் போலவே அவர்கள் நேசித்தும் அப்பருவத்திற்கென வகைப்படுத்திய கோடைக் காலத் திருவிழாக்களைக் கொண்டாடியும் மகிழ்ந்தனர்.
இன்றைய கடும் கோடையில் குடிதண்ணீருக்காக கரங்களில் காலிக்குடங்கள் தவழ தண்ணீர் லாரி எப்போது வரும் என்ற ஏக்கத்தை மனதில் சுமந்து கொண்டு வீதிகளில் பொது மக்கள் அலைகின்றனர். கிராமங்களில் வாழ்வோரும்கூடத் தண்ணீருக்காகப் பரிதவிக்கும் நிலைக்குத்தான் ஆட்பட்டுள்ளனர்.
சூழல் சீர்கேடு
நாம் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளும் இத்தகைய அவலத்தில் சிக்கித் தவிப்பதற்குச் சூழல் சீர்கேடுதான் காரணம். மனித இனம் இயற்கையோடு இயைந்து தன் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து கொண்டிருந்த ஆதி காலத்தில் சூழல் பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் மனிதர்களை இயற்கை வஞ்சிக்கவில்லை.
ஆனால், காலப்போக்கில் பெருகிய மக்கள்தொகை, மனித வாழ்வின் பயன்பாட்டுத் தேவைகளின் அதிகரிப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் வளர்ச்சி, பொருளாதாரக் கொள்கை போன்ற பல காரணங்கள் இயற்கைச் சூழலை நலிவடையச் செய்து விட்டன.
தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள், வாகனங்கள், பெட்ரோலியப் பொருள்கள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை வெளிப்படுத்தும் சாம்பல், புகை, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, ஈயம் போன்ற பல நச்சுப் பொருள்கள் காற்றை மாசடையச் செய்கின்றன.
அரசின் விதிமுறை
அரசின் விதிமுறைகளைப் புறந்தள்ளியும் சமூகப் பொறுப்பற்றும் இயங்கும் பல தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், சாயத் தொழிற்சாலைகளும் கழிவு நீரைச் சுத்திகரிப்புச் செய்யாமல் நச்சு கலந்த நீரை நிலத்திலும் நீர் நிலைகளிலும் விடுவதால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு நல்ல நீரும் மாசடைந்து குடிநீர்ப் பிரச்னையை உருவாக்குகின்றன. மேலும், தொழிற்சாலைகள் அனைத்துமே தங்களது பயன்பாட்டிற்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால் நீராதாரம் குறைந்து தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இவ்வாறு ஆகாயம், நிலம், நீர் என்பதோடு மட்டுமல்லாமல் வன வளங்களையும் மனிதப் பயன்பாட்டிற்காக நாம் அழித்து வருகிறோம். இது ஒருபுறமிருக்க வனங்களில் உள்ள சந்தனம், தேக்கு, செம்மரம் போன்ற மரங்களை சமூக விரோதிகள் வெட்டி, கடத்தப்படுகின்றன.
எனவே, இயற்கையின் வரமாகக் காற்றைச் சுத்திகரிக்கும் ஆலையாகச் செயல்படும் மரங்கள் அடர்ந்த வனங்களைப் பாதுகாப்பது இந்தப் பூவுலகில் வாழும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
காடுகளையும் மரங்களையும்
மழை பொழிவதற்குக் காரணமாக விளங்கும் காடுகளையும், மரங்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை உணர்வும், கான்கிரீட் காடுகளாகிவிட்ட வாழ்விடங்களில் புதிதாக மரங்களை நடவேண்டும் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வும் நம்மிடையே உருவானால்தான் தண்ணீர்த் தட்டுப்பாடின்றி நம்மால் வாழமுடியும். மரங்கள் இல்லையேல் மனித வாழ்வு இல்லை என்பதன் அவசியத்தையும், சூழல் பாதுகாப்பின் அவசரத்தையும் நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய நேரமிது.
இத்தகைய உணர்வினைப் பெற, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உலகளவில் நம் நாடுதான் முன்னோடியாகத் திகழ்ந்தது என்ற வரலாற்றுச் செய்தியை நாம் நினைவுகூர்தல் வேண்டும்.
1731-ஆம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மார்வார் மன்னர் அபய்சிங் ஆடம்பர மாளிகை ஒன்றைக் கட்ட விரும்பினார். அவர் தன் படை வீரர்களிடம் ஜோத்பூர் அருகே பிஷ்னோய் பழங்குடி மக்கள் வாழும் கேஜர்லி கிராமத்தில் இருந்து மாளிகையைக் கட்டத் தேவையான மரங்களை வெட்டிவர ஆணையிட்டார். படை வீரர்கள் அந்தக் கிராமத்திற்குச் சென்று மன்னரின் ஆணையை விளக்கி மரங்களை வெட்ட முற்பட்டனர். இயற்கையை நேசிக்கும் அந்த மக்கள் வீரர்களின் செயல்கண்டு அதிர்ந்தனர்.
"அமிர்தாதேவி' என்ற பெண்மணி மரம் ஒன்றைக் கட்டித் தழுவியபடி "உயிர்போனாலும் மரத்தை வெட்ட அனுமதிக்க முடியாது' என்று வீரர்களை எதிர்த்துப் போராடினார். ஆனால், அமிர்தாதேவியின் தலையைக் கோடாரியால் வீரர்கள் வெட்டிச் சாய்த்துவிட்டு தங்கள் பணியை மேற்கொள்ளத் துடிக்க, அம்ரிதாவின் மூன்று மகள்களும் மரங்களைக் கட்டித் தழுவி வீரர்களின் ஆயுதங்களுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து 363 மரங்களைக் கட்டியணைத்துப் போராடிய ஆண், பெண், குழந்தைகள் உள்ளிட்டோர் அனைவரும் வீரர்களால் கொல்லப்பட்டனர். "மண் சிவந்தது; மரங்கள் பிழைத்தன!'
செய்தியறிந்த மன்னர் மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு, அந்த கிராமத்திற்கு வருகை தந்து, எஞ்சியிருந்த மக்களிடையே மன்னிப்புக் கோரியதோடு இனி மரங்கள் வெட்டப்படுவது தடை செய்யப்படும் என்ற உறுதியினையும் வழங்கினார். இயற்கை பாதுகாப்புக்காக உலகளவில் முதன்முதலில் குரல்கொடுத்துத் தன் இன்னுயிரை ஈந்த தியாகப் பெண்மணி "அமிர்தாதேவி' மரங்களின் வேர்களாக, வேரடி மண்ணாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறான தியாக வரலாற்று நிகழ்வுகளை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி மரம் நடுதல், வனங்களைப் போற்றிப் பாதுகாத்தல் போன்றவற்றை சமூகப் பொறுப்புடன் மேற்கொண்டால் தண்ணீருக்காகக் கண்ணீர் சிந்தும் அவலம் ஏற்படாது; மழை வளமும் பெருகும்.