TNPSC Thervupettagam

மதம் பிடித்த மனிதம்

August 5 , 2023 396 days 291 0
  • மே மாதம் தொடங்கிய மணிப்பூர் இனக் கலவரத்துக்கே இன்னும் முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையில், தலைநகர் தில்லி அருகிலுள்ள ஹரியாணா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மதக் கலவரம், மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
  • ஹரியாணா மாநிலத்தின் நூ மாவட்டம் மத வன்முறைகள், குற்றச் செயல்களால் பல்லாண்டுகளாகவே கண்காணிப்பு வளையத்தில் உள்ளது. இணையவழிக் குற்றங்கள் அதிக அளவில் நடக்கும் பகுதி இது. இம்மாவட்டத்தின் மையப்பகுதியான நூவில், மகாபாரதத்துடன் தொடர்புடைய நல்ஹார் மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள சிவ லிங்கத்துக்கு ஜலாபிஷேகம் செய்ய ஆண்டுதோறும் ஆஷாட (ஆடி) மாதத்தில் ஹிந்து பக்தர்கள் யாத்திரையாக வருவது வழக்கம்.
  • ஹிந்துக்கள் ஒரு காலத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த இந்த நகரத்தின் மையப் பகுதியிலுள்ள கோயிலைச் சுற்றிலும் இப்போது அதிக அளவில் வாழ்பவர்கள் இஸ்லாமியர்கள். நூ மாவட்டம் இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் பகுதியாக மாறியிருந்தாலும், அண்மைக் காலம் வரை இக்கோயிலின் வழிபாடுகளில் சிக்கல் நேரிடவில்லை. அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டாலும், காவல் துறையின் தலையீட்டில் இரு தரப்பினரும் அமைதியாகி விடுவது வழக்கம்.
  • இந்த ஆண்டு வழக்கத்துக்கு விரோதமாக, கோயிலுக்கு வந்த பக்தர்கள் வன்முறைக் கும்பலால்  திட்டமிட்ட ரீதியில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள். இரு இஸ்லாமியர்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளியான பசுப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் மோனு மானேசர் ஜலாபிஷேக யாத்திரையில் தான் பங்கேற்க இருப்பதாக சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொலி தான் இந்தக் கலவரத்துக்குக் காரணம்.
  • மோனு மானேசரின் காணொலி காரணமாக, யாத்திரைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சமூக ஊடகங்களில் அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதனால் அவரை இந்த யாத்திரையில் பங்கேற்க விடாமல் காவல்துறை தடுத்துவிட்டது.
  • அப்படியிருந்தும், ஜூலை 31-இல் நடைபெற்ற ஜலாபிஷேக யாத்திரை நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கல்வீச்சும் நடத்தப்பட்டது. மகாதேவர் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்ற 2,500-க்கும் மேற்பட்ட பக்தர்களும், அவர்களுடன் சென்ற விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். மகாதேவர் கோயிலைச் சூழ்ந்துகொண்ட வன்முறையாளர்களால் பெரும் அசம்பாவிதச் சூழல் உருவானது.
  • இதனை முன்கூட்டியே கணித்து காவலை அதிகப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த குறைந்த எண்ணிக்கையிலான காவல் துறையினரால் எதுவும் செய்ய
  • முடியாத நிலை. குருகிராமிலிருந்து துணை ராணுவம் வந்த பிறகே கோயிலில் இருந்த பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது.
  • இந்த மோதலில் இரு ஊர்க்காவல் படையினரும் யாத்ரீகர்கள் மூவரும் கொல்லப்பட்டனர். பக்தர்கள் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; சுமார் 70 பேர் காயமடைந்தனர்; சைபர் காவல் நிலையம் சூறையாடப்பட்டது; காவல் பணியிலிருந்த துணை கண்காணிப்பாளர் துப்பாக்கியால் சுடப்பட்டதால், அபாய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • வன்முறையாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கிகள், வீடுகளில் குவிக்கப்பட்டிருந்த கற்கள் ஆகியவை, இது திட்டமிட்ட தாக்குதல் என்பதை உறுதிப்படுத்துகின்றன. சிறுபான்மை சமுதாயத்தினரை வழிநடத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகளான நூ எம்எல்ஏ அஃதாப் அகமதுவும், பெரோஸ்பூர் ஜிர்கா எம்எல்ஏ மம்மன் கானும் பொறுப்புடன் செயல்படவில்லை என்பதை அவர்களது சமூக ஊடகப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.
  • நூவில் நிகழ்ந்த இந்த வன்முறைக்கு எதிர்வினையாக, அண்டை நகரங்களான சோனாவிலும் குருகிராமிலும் மதக்கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. குருகிராமில் ஒரு மசூதி எரிக்கப்பட்டு, அதன் இமாம் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் சில வழிபாட்டுத் தலங்களும் தாக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்களும் பல இடங்களில் தாக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் கணினி தொழில்நுட்பம், மென்பொருள் நிறுவனங்கள் கொண்ட ஹரியாணாவின் தொழில்நகரமான குருகிராம் கலவர பூமியாக மாறியதால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.
  • மனிதர்களுக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்தக் கலவரங்கள் உதாரணம். இதில் பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பேதமில்லை. இந்தக் கலவரம் தொடர்பாக இப்போதைக்கு 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இரு தரப்பிலும் 176 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நூ மாவட்டத்தில் இணையசேவை முடக்கப்பட்டு 144 தடையுத்தரவு அமலில் இருக்கிறது.
  • இந்தியாவில் நடந்திருக்கும் பெரும்பான்மையான மதக் கலவரங்கள் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில்தான் தொடங்குவது வழக்கம். கலவரங்களின் இறுதியில் பெருமளவில் பாதிக்கப்படுவதும் சிறுபான்மையினர்தான். அதேபோல மதக் கலவரங்களைத் தொடர்ந்து இரு மதத்தினரும் எப்போதும் இணக்கமாக வாழ வழியே இல்லாமல் சமூக ஒற்றுமை குலைவதும் வரலாறு உணர்த்தும் உண்மை.
  • பிரதமர் மோடி வளர்ச்சி அரசியலை நோக்கி தனது அரசை நடத்துவதாகக் கூறும் நிலையில், அவரது கட்சியை ஆதரிப்போரின் அத்துமீறல்கள் அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும். அதேபோல, பாஜகவை எதிர்ப்பதற்காக சிறுபான்மையினரின் வன்முறையைக் கண்டிக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் நம்பகத்தன்மையை பாதிக்கும். இவ்விரண்டுமே நாட்டிற்கு நல்லதல்ல.
  • சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டிய அரசியல்வாதிகள், மதக் கலவரங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்படுவதுதான் இதுபோன்ற பிரச்னைகளுக்குக் காரணம்!

நன்றி: தினமணி (05 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories