- மதிப்புமிக்க நிறுவனங்கள் என்பது ஒரு தேசத்தின் திறமை மற்றும் கடின உழைப்புக்கு கட்டியம் கூறுகின்றன. அந்த வகையில், சர்வதேச அளவில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக அமெரிக்கா வின் ஆப்பிள் உருவெடுத்துள்ளது.
- முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-ல் ஆப்பிளின் மதிப்பு 73.6 சதவீதம் அதிகரித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆப்பிள்பிராண்ட் மதிப்பு 517 பில்லியன் டாலரைத் தொட்டு உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது, இந்திய மதிப்பில் ரூ.43 லட்சம் கோடி அளவுக்கு சமம்.
- பிராண்ட் தரவரிசையில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது ஆப்பிள் மட்டுமல்ல. மதிப்புமிக்க பிராண்ட் நிறுவனங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். அதேபோன்று, உலகளவில் முதல் 100 மதிப்புமிக்க பிராண்டுகளில் 51 இடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
- இந்தக் கடினமான போட்டிக்கிடையிலும் ஆசிய நாடுகளின் பிராண்டுகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி நாங்களும் “ராஜா” தான் என்பதை நிரூபித்து வருகின்றன. இப்பட்டியலில் அமெரிக்காவுக்கு வெளியே இரண்டாவது இடத்தைப்பிடித்த ஒரு நிறுவனம் என்றால் அது ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த தென்கொரியாவின் சாம்சங் தான். இதன் பிராண்ட் மதிப்பு 99 பில்லியன் டாலர்.
- அதேபோன்று சீனாவின் டிக்டாக் 84 பில்லியன் டாலர் மதிப்புடன் இடம்பெற்றுள்ளது. ஜெர்மனியின் டாய்ச் டெலிகாம் 73 பில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் அடுத்த இடத்தை பிடித்துள்ளது.ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா 53 பில்லியன் டாலருடனும், சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெட்ரோலிய நிறுவனமான அராம்கோ 42 பில்லியன் டாலருடனும், அயர்லாந்தைச் சேர்ந்த அக்ஸென்சர் 41 பில்லியன் டாலருடனும் மதிப்புமிக்க பிராண்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
- இங்கிலாந்தின் ஷெல் பிராண்ட் மதிப்பு 50 பில்லியன் டாலருடனும், பிரான்ஸின் லூயிஸ் வுட்டான் பிராண்ட் மதிப்பு 32 பில்லியன் டாலருடனும் ஐரோப்பா இந்த பட்டியலில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளது.
- இந்தியாவைப் பொருத்தவரையில் டாடா குழுமம் 29 பில்லியன் டாலர் மதிப்புடன் தனது பிராண்ட் அடையாளத்தை தக்கவைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் நெஸ்லே 21 பில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஒட்டுமொத்தப் பார்வையில் சமீபத்திய ஆண்டுகளில் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் ஆசிய பிராண்டுகளின் எழுச்சி அபரிமிதமாக உள்ளது.
- சீனாவின் டிக்டாக், ஜப்பானின் டொயோட்டா, தென் கொரியாவின் சாம்சங் உள்ளிட்டவை அதற்கு சிறந்த உதாரணங்களாகும். ஆசிய பிராந்தியத்தின் வலிமை கூடி வருவதையும், நிதிச் செயல்திறன் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 04 – 2024)