TNPSC Thervupettagam

மதுரையில் இன்னொரு கண்ணகி

September 29 , 2024 6 hrs 0 min 10 0

மதுரையில் இன்னொரு கண்ணகி

  • எழுத்தாளர் சு.வேணுகோபால் ‘பூமாரியின் இன்றைய பொழுது’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் பூமாரி. காலி பாட்டில்களைப் பொறுக்கிப் பிழைத்து வருபவன். மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறுவதாகக் கதையை எழுதியிருக்கிறார். பாட்டில் பொறுக்கி விற்பவரின் துயரங்களும் சாதிய வன்முறையும் அரசின் மதுபான நிறுவனமான டாஸ்மாக் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் சீரழிவையும் இந்தப் புனைவு ஒருசேரப் பேசியிருக்கிறது.
  • புனைவின் இறுதிப் பகுதி​யில்தான் கண்ணகியின் தொன்மத்தை சு.வேணுகோபால் பயன்படுத்திக் கொண்டிருக்​கிறார். பூமாரிக்கு ஒரு அக்கா உண்டு. இரண்டு குழந்தை​களைப் பெற்றவர். ஒருநாள் பூமாரியின் அக்கா இரண்டாவது கைக்குழந்​தையோடு ஓடைக்கரை வழியாக வருகிறார். இருபுறமும் நாணல் புதர்போல வளர்ந்​திருக்​கிறது. புதரில் மறைந்​திருந்த ஒருவன் அவரைக் குழந்​தையோடு எத்து​கிறான். குழந்தை பெருங்​குரலெடுத்துக் கத்து​கிறது. மற்றொருவன் குழந்​தையின் வாயைப் பொத்தி மூச்சை நிறுத்து​கிறான். நான்கு பேர் பூமாரியின் அக்காவைக் குதறி எடுக்​கிறார்கள். உடலெல்லாம் குருதி கசிய இறந்துபோன குழந்தையை மடியில் கிடத்​திக்​கொண்டு ஓலமிடு​கிறார். மதுரை​யில்தான் இது நடைபெறுகிறது.
  • டாஸ்மாக் வந்த பிறகு எந்நேரமும் மது கிடைக்​கிறது. வயது வேறுபாடு இல்லாமல் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே குடித்துக் கொண்டிருக்​கிறார்கள். பூமாரியின் அக்காவைக் கொடூரமாக வல்லுறவு செய்த அந்நால்​வரும் அங்கே மது குடித்துக் கொண்டிருந்​தவர்களாக இருக்க வாய்ப்​பிருக்​கிறது. அந்த ஓடை கணபதியா பிள்ளையின் தோப்பை ஒட்டி​யுள்ளது. உயர் சாதியினரே அங்கே இருந்​திருக்க வேண்டும். புனைவு அந்த நால்வரை நோக்கி மட்டும் அறம் பேசவில்லை என்று இங்கு குறிப்​பிடுவது அவசியம். கோவலனின் கொலைக்குக் காரணமான பாண்டிய நெடுஞ்​செழியனும் கோப்பெருந்​தே​வியும் இறந்த பிறகுதான் கண்ணகி மதுரையை எரித்​தார். ஏனெனில், அவர்கள் இருவர் மட்டுமே கோவலன் கொலைக்குக் காரணம் என்று கண்ணகி கருதவில்லை. ‘கோவலனைக் கள்வன் என்று கூறிய இம்மதுரையைத் தீ உண்ணும்’ என்று அசரீரியும் கதிரவனும் கூறுகிறார்கள். இந்தப் பின்புலத்தில் பூமாரியின் அக்கா துயரத்​திற்கு அந்த நால்வர் மட்டும்தான் காரணமா என்ற கேள்வியையும் இவ்விடத்தில் எழுப்ப வேண்டி​யிருக்​கிறது.
  • மனநிலை பிறழ்ந்த அக்காவைச் சில வருடங்கள் கழித்து மதுரை வீதியில் பார்க்​கிறார் பூமாரி. சிக்குப் பிடித்த பரட்டைத் தலையோடு திட்டுத்​திட்டாக அழுக்கு கறுத்​தேறிக் கிடக்க... மேலாடை இல்லாமல் பூமாரியின் அக்கா மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போகும் பாதையில் செல்கிறார். வலது மார்பு இல்லாமல் கனத்த இடது மார்புடன் அவர் வருகிறார். வலது மார்பு அறுத்​தெடுத்த தடம் தெரிகிறது. கடைக்​காரர்கள் அவளைக் குச்சியைக் கொண்டு விரட்டு​கிறார்கள். “ஒரு முலைய அறுத்​திட்டா விட்டுரு​வேனா. திருகி எறிஞ்​சேன்னா ஊரே சாம்பலாகிரும். இப்ப எறியவா.. பத்தினிடா நான். அந்த மீனாட்​சிக்குத் தெரியும்டா நான் யாருன்னு” என்று பூமாரியின் அக்கா தன் அடிநிலை மனதிலிருந்து பேசுகிறார்.
  • மேல்நிலை மனம் பொய்மூட்​டைகளின் குவியல்; அடிநிலை மனம்தான் உண்மை​களின் இருப்பிடம் என்று உளவியல் கூறுகிறது. பூமாரியின் அக்கா​வுக்கு நேர்ந்த துயரத்​தை​விடவா கண்ணகிக்கு நேர்ந்​து​விட்டது? இவர் பத்தினி இல்லையா? இவருக்காக மதுரை மீண்டும் ஒருமுறை எரியாதா? இவருக்கு நேர்ந்த துயரங்​களில் பங்கெடுத்துக் கொள்ளாமல் வேடிக்கை பார்த்​துக்​கொண்​டிருக்கும் மக்களைத் தீயுண்​ணுவதில் என்ன தவறிருக்கப் போகிறது?
  • மீனாட்​சியின் துணையுடன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த அர்ஜுனனின் காதலியான அல்லிக்கு ஒற்றை மார்புதான் இருந்​ததென்று நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.
  • பூமாரியின் அக்கா ஒற்றை மார்பு இழப்புக்குப் பின்புள்ள காரணங்களை சு.வேணுகோபால் மறைத்தே வைத்திருக்​கிறார். இதற்குக் காரணம் தேடினால், அது எங்கெங்கோ போகிறது. வலது மார்பைப் பயன்படுத்தி எந்த ஊரை எரித்தாள் என்று தெரிய​வில்லை. மார்பை ஆயுதமாகப் பயன்படுத்​தித்தான் மதுரையை எரித்தார் கண்ணகி. தோள்சீலைப் போராட்​டத்தில் மார்பை அரிந்து கொடுத்​துத்தான் ஈழவப் பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்​படுத்தினார்கள்.
  • நான்மாட வீதியில் அக்காவைப் பார்த்த பூமாரி, ‘ஐயோ அக்கா’ என்று அவளை நோக்கி ஓடுகிறார். அக்கா இன்னும் வேகமாக ஓடுகிறார். அவரைச் சிலர் வேடிக்கை​யாகப் பார்க்​கிறார்கள்; சிலர் விரசமாகப் பார்க்​கிறார்கள்; சிலர் குச்சி எடுத்து விரட்டு​கிறார்கள்; சிலர் தலையைக் கவிழ்ந்​து​கொண்டு நழுவு​கிறார்கள். எல்லா இடத்திலும் மனிதர்கள் இருக்​கிறார்கள். அக்காவால் எங்கே ஓடித் தப்பித்துவிட முடியும்? அவர் கண்ணகியைப் போன்று பத்தினி; கற்புக்​கரசி. பூமாரியின் அக்கா​விடமும் கண்ணகிக்கே உண்டான கோபம் இருக்கிறது. அதுபோக அக்காளிடம் இன்னொரு மார்பும் மிச்சமிருக்​கிறது. அதுவும் கண்ணகி திருகி எறிந்த இடதுமார்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories