- மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதில் கவனிக்கத்தக்க 10 திட்டங்களை பார்க்கலாம்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு
- நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிசேவை கிடைக்க வேண்டும் என்றநோக்கத்தில் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் 2014-ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை. இதுவரை 51.32 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் ரூ.2,11,290 கோடி இருப்பு உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி
- இந்திய நகரங்களை நவீன தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2015-ஜூன் மாதம்அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 100 நகரங்கள் நவீனப்படுத்தப்படு வருகின்றன.
ஸ்டார்ட்அப் இந்தியா
- ஸ்டார்ட்அப்நிறுவனங்களை ஊக்குவிக்க ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது. 2016-ம் ஆண்டில் நாட்டில் 450 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தொட்டுள்ளது.
திவால் சட்டம்
- நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் திவால்நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பானவிரிவான கட்டமைப்பை வழங்குவதற்காக 2016-ம் ஆண்டு திவால் சட்டம் இயற்றப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 7,058 புகார்கள் பெறப்பட்டு 5,057 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு
- 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனபிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணப்புழக்கத்தை ஒழிக்கவும் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு குறிப்பிட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி
- 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும்சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது.பல்முனை வரி கட்டமைப்பை ஒருமுனை வரியாக மாற்ற ஜிஎஸ்டி அறிமுகம்செய்யப்பட்டது. இப்போது மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.66 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு
- ஏழை மக்களுக்காக பிரதமரின் ஜன்ஆரோக்ய யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டம் 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலிடப்பட்டமருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரையில் பணம் இல்லாமல் சிகிச்சை பெற முடியும். இதில் இதுவரை 4.13 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை
- 2019-ம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாய் ஆதரவு அளிக்கும் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதில் சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர்.
புதிய வருமான வரி நடைமுறை
- கடந்த 2020-ம் ஆண்டு புதிய வருமானவரி நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு ரூ.7 லட்சம் வரை வரி விலக்கு உள்ளது. ஆனால் எவ்வித வரிவிலக்கும் கோர முடியாது.
சுயசார்பு பயணம்
- சுயசார்பை இலக்கை அடைவதற்காக உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க முடிவு செய்த மத்திய அரசு 2020 மார்ச் மாதம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ)திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் குறிப்பிட்ட சில துறைகளுக்கு உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 02 – 2024)