TNPSC Thervupettagam

மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி

March 23 , 2024 301 days 323 0
  • போபால் முன்னேறிவிட்டால் இந்தியா முழுமையும் முன்னேறிவிடும்!
  • ராம்தாஸ் கண்களில் விரக்தி வெளிப்பட சிரித்தார். “மத்திய இந்தியாவில் எந்த மாற்றமும் உருவாவது அவ்வளவு சுலபம் இல்லை. சமூக அமைப்பு அப்படிஎன்றார் அவர். கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார். உயர்கல்விக்கு குடும்பச் சூழல் அனுமதிக்கவில்லை. கிடைத்த வேலைகளைச் செய்தபடி அடுத்த கட்ட படிப்புக்கு முயற்சிக்கிறார்.
  • இந்தியாவைத் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு இப்படி பிரிப்பது போன்றுமத்திஎன்று தனியாகப் பிரித்துப் பார்க்க முடியுமா என்று பலருக்கு ஆச்சரியம் இருக்கலாம். அப்படி பிரித்துப் பார்ப்பது முக்கியம். இன்றைய சூழலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் இரு மாநிலங்களையும் கொண்டதாக நாம் பகுத்துக்கொள்ளும்மத்திய இந்தியாவானது, பண்பாட்டு அடிப்படையில் ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், ஒடிஷா என்று அதை ஒட்டியுள்ள ஆறு மாநிலங்களின் பிராந்தியங்களோடும் ஆழமான பிணைப்பைக் கொண்டது.
  • சுதந்திர இந்தியாவில் 565 சமஸ்தானங்கள் இணைந்தன என்றால், அவற்றில் நாம் பேசும் மத்திய இந்தியாவில் மட்டும் 70 சமஸ்தானங்கள் இருந்தன. அதைச் சுற்றியுள்ள மாநிலங்களிலும் பல இடங்களில் 1947 வரை மன்னராட்சி நீடித்தது; சுதந்திரத்துக்குப் பிறகு இந்த ராஜ்ஜியங்களில் எல்லாம் முன்னுரிமை பெற்றிருந்த முற்பட்ட சாதிகளுடைய செல்வாக்கு ஜனநாயகத்திலும் தொடர்ந்தது.
  • குவாலியர் அரசக் குடும்பக் கதையை எடுத்துக்கொள்வோம். சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்ட சமஸ்தானங்களில் பெரிய, செல்வம் மிக்க சமஸ்தானங்களில் ஒன்று இது. அதன் கடைசி மன்னர் ஜீவாஜிராவ் சிந்தியா வாரிசுகள் இன்னமும் அரசியலில் கோலோச்சுகிறார்கள். மனைவி விஜய ராஜே சிந்தியா தனித்து நின்றபோதும் வென்றார்; காங்கிரஸில் நின்றபோதும் வென்றார்; சுதந்திரா கட்சியில் நின்றபோதும் வென்றார்; பாஜகவில் நின்றபோதும் வென்றார். எப்போதுமே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஊர்குவாலியர் ராஜ மாதாஎன்றது. மகன் மாதவராவ் சிந்தியா காங்கிரஸின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர்; மகள் வசுந்தரா பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவர்; ராஜஸ்தான் மாநிலத்தில் இருமுறை முதல்வராக இருந்தவர். இருவருடைய மகன்களும் பாஜகவில் இளந்தலைவர்கள்.
  • உத்தர பிரதேசம், பிஹாரில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுத்த மண்டல் அரசியலுக்குப் பின்னரும்கூட மத்திய இந்தியாவில் பெரிய மாற்றங்கள் இல்லை. முற்பட்ட சமூகமான ராஜபுத்திரப் பின்னணி கொண்ட திக்விஜய் சிங் கைகளிலேயே மாநில காங்கிரஸ் இருந்தது. பத்தாண்டுகள் (1993-2003) முதல்வராக அவர் கோலோச்சிய காலகட்டத்தில், மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளில் பாதிக்கும் மேல் முற்பட்ட சாதியினராக இருந்தார்கள் என்கிறார்கள். காங்கிரஸ் நிலையே இப்படி என்றால், ‘பிராமணபனியா கட்சிஎன்றழைக்கப்பட்ட பாஜகவின் நிலையை விவரிக்க வேண்டியது இல்லை. இத்தனைக்கும் மத்திய இந்தியாவின் மக்கள்தொகையில் 83% பேர் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடிகள்.
  • நாங்கள் இதற்குப் பழகிவிட்டிருக்கிறோம் என்று சொன்னார் ராம்தாஸ். அரசாட்சியின் எச்சம், நிலவுடைமைத்தனம், சாதிய ஆதிக்கம் எல்லாமும் இணைந்து இங்கே சமூகத்தை இருக்கி வைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
  • வேளாண்மையைத்தான் பெரும் பகுதி மக்கள் நம்பியிருக்கிறார்கள். பிராந்தியத்தில் எங்கே சென்றாலும் வறுமை ஒட்டிக்கொண்டிருக்கிறது. பழங்குடிகள் நிலைமை இன்னும் மோசம்.
  • இந்தி மாநிலங்கள் என்றாலும்கூட உத்தர பிரதேசம், பிஹாருடன் இந்த பிராந்தியத்தை ஒப்பிட முடியாது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் இப்படி மாநிலக் கட்சிகள் எதுவும் இங்கே முளைக்காததும் இதற்கு ஒரு காரணம்.
  • மக்களிடம் ஓர் அழுத்தம் உருவாகிவந்ததை பாஜக உணர்ந்தது. 2003இல் பாஜக ஆட்சி வந்த பிறகு அது முதல்வராகத் தேர்ந்தெடுத்த உமா பாரதி, பாபு லால் கௌர், சிவராஜ் சிங் சௌகான் மூவரும் பிற்படுத்தப்பட்டோர். 2000இல் மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டது. அங்கே மூவரில் ஒருவர் பழங்குடி. ஆனாலும், 2023இல்தான் ஒரு பழங்குடி முதல்வர் ஆகியிருக்கிறார். “இதெல்லாமும்கூட புரட்டிப்போடும் மாற்றங்களை உண்டாக்கவில்லை. இன்னமும் சிந்தியாவை ராஜா என்றுதான் அழைக்க வேண்டும்.”
  • பரந்து விரிந்த பிராந்தியம் இது. இந்தியாவிலேயே பெரிய மாநிலமாக மத்திய பிரதேசம்தான் இருந்தது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வனம். கனிம வளங்களும் அதிகம். கேடுகெட்ட நிர்வாகம்தான் முதன்மைப் பிரச்சினை. எவ்வளவு அலட்சியமாக இதை நம் அரசுகள் நிர்வகித்தன என்பதற்கு இன்று மாவோயிஸ்ட்டுகளுடன் அடையாளம் காணப்படும் பஸ்தர் பிராந்தியத்தை ஓர் உதாரணமாகக் கூறலாம். வரலாற்றுரீதியாகவே தீவிரமான படையெடுப்புகளுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளான பிராந்தியம் இது.
  • இப்போது பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் பஸ்தர், இந்திய அரசால் ஒருகாலத்தில் ஒரே மாவட்டமாக நிர்வகிக்கப்பட்டபோது அதன் பரப்பளவு 39,114 .கி.மீ. அதாவது, கேரளத்தைக் காட்டிலும்நாடுகளோடு ஒப்பிட வேண்டும் என்றால் பெல்ஜியம், இஸ்ரேலைக் காட்டிலும்பெரியதாக இருந்தது. பழங்குடி மக்கள் அங்கே பத்துக் குடும்பங்கள், இங்கே இருபது குடும்பங்கள் என்று சிதறியிருப்பார்கள். என்ன லட்சணத்தில் நிர்வாகம் நடந்திருக்கும் என்று பாருங்கள். கொள்ளையர்கள், துப்பாக்கிச் சூடுகளோடு சம்பல் பிராந்தியம் அடையாளப்படுத்தப்படவும் மாவோயிஸ்ட்டுகளுடன் பஸ்தர் அடையாளப்படுத்தப்படவும் முக்கியமான காரணம் வறுமை.
  • பாஜக மிகத் தீவிரமான அடித்தளக் கட்டமைப்பைக் கொண்டுள்ள பிராந்தியம்; சுதந்திரத்துக்கு முன்பே இங்கே இந்துத்துவத்தின் வீச்சு அதிகம். இன்று மஹாராஷ்டிர எல்லைக்குள் உள்ள - ஆர்எஸ்எஸ் தொடக்கப் புள்ளியான - நாக்பூருக்கும் மத்திய பிரதேச தலைநகரான போபாலுக்கும் இடையே 352 கி.மீ. தொலைவுதான். அதாவது, மஹாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு நாக்பூரிலிருந்து செல்ல இதுபோல இரண்டு மடங்கு தூரம் பயணிக்க வேண்டும். தவிர, வெவ்வேறு மன்னராட்சிகளில் இந்தப் பிராந்தியத்தின் ஓர் அங்கமாக நாக்பூரும் நாக்பூரின் ஓர் அங்கமாகவும் இருந்தன.
  • மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங் நடத்தியது மோசமான ஆட்சி. அதேபோல சத்தீஸ்கரில் அஜித் ஜோகி. பாஜக இதைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தது. உத்தர பிரதேசம், குஜராத் போல அல்லாமல் இங்கே நலத்திட்ட உதவிகளைக் கொடுக்கும் முதல்வர்களாக சிவராஜ் சௌகானும், ரமண் சிங்கும் செயல்பட்டார்கள். இருவரும் உண்டாக்கிய அரசியல் ஸ்திரத்தன்மை இரு மாநிலங்களிலுமே சின்ன முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது. இருவருமே பெண்கள் ஆதரவைப் பெற்றார்கள். தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால் மக்களிடம் அதிருப்தி உருவானதால் சௌகான், சிங் இருவரையுமே பாஜக ஓரங்கட்டிவிட்டது.
  • பாஜக சென்ற 20 ஆண்டுகளில் இரு மாநிலங்களிலுமே தன்னுடைய கட்டமைப்பை மேலும் வலிமையாக்கிக்கொண்டிருக்கிறது. ஆட்சி மாறினாலும்கூட இங்கே இந்துத்துவ வீச்சை மாற்றிவிடுவது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை இடையில் காங்கிரஸ் அரசுகள் வந்தபோது நிரூபித்தன. பாஜகவின் ராமர் கோயிலுக்குப் போட்டியாக மத்திய பிரதேச முதல்வரான கமல்நாத் அனுமனுக்குக் கோயில் கட்டினார்; சத்தீஸ்கர் முதல்வரான புபேஷ் பெகல் யசோதைக்குக் கோயில் கட்டினார். ராகுல் காந்தியைக் கோயில் கோயிலாகத் தேர்தல் சமயத்தில் கூட்டிச் சென்றார்கள்.
  • இரு மாநிலங்களுமே மோடிக்குத் தனித்த செல்வாக்கு இருக்கிறது. 2014, 2019 இரு மக்களவைத் தேர்தல்களிலும் 38/40 தொகுதிகளை பாஜகவுக்கு அளித்தது இந்த பிராந்தியம். 2018 சட்டமன்றத் தேர்தலில் இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் வென்றும்கூட 2019இல் பாஜக பெரும் வெற்றியைக் குவித்ததற்கு மோடிக்கு இங்குள்ள செல்வாக்குதான் காரணம். “நான் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஓட்டு போட்டேன்; 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குத்தான் ஓட்டு போடுவேன்என்கிறார் டீக்கடை நடத்தும் இளைஞரான விஷ்வநாத். “மோடி உலக நாடுகளில் இந்தியாவுக்கு மதிப்பை உருவாக்கியிருக்கிறார்என்கிறார். அடுத்து வரும் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டால், இங்கே தொழிற்சாலைகளையும் வேலைகளையும் உருவாக்க வேண்டும் என்கிறார். ராகுல் காந்தி தொடர்பாக கருத்து கேட்டால், அவருக்கு விவரம் போதாது என்கிறார். அதேசமயம், புபேஷ் பெஹல் ஒரு நல்ல தலைவர் என்கிறார்.
  • தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஜான்சி ராணி, “இந்த முறை காங்கிரஸும் ஜெயிக்கும்என்கிறார். தனக்கு ராகுல் காந்தியைப் பிடிக்கும் என்று கூறும் அவர், “ராகுல் காந்தி ஜெயித்தால்தான் அரசு வேலைகள் அதிகரித்து, மக்கள் நிலை மேம்படும்என்கிறார். தள்ளுவண்டி ஓட்டும் ரஷீத்திடம் பேசினேன். மிகுந்த தயக்கத்துடன், “எதாவது பிரச்சினை இல்லாமல் இருந்தாலே நாடு நல்லாயிருக்கும்என்கிறார்.
  • ஆங்காங்கே ராமர் படம் போட்ட காவிக் கொடிகள் வீட்டில் பறக்கின்றன. சில வீடுகளில் காங்கிரஸ் கொடியும் காவிக் கொடியும் இணைந்து பறக்கின்றன!

நன்றி: அருஞ்சொல் (23 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories