- வரிகளிலும் மானியங்களிலும் மாநிலத்துக்குரிய பங்கைக் கொடுக்கவில்லை என்று தமிழக முதல்வர்கள் குற்றஞ்சாட்டுவதைத்தான் வழக்கமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால், 2017-18ம் நிதியாண்டில் மத்திய அரசு அளித்த நிதியுதவியில் ரூ.3,600 கோடியைப் பயன்படுத்தாமல் தமிழக அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது என்கிறது தலைமை கணக்குத் தணிக்கையாளர் அளித்துள்ள அறிக்கை.
- இதையொட்டி எழுந்த விமர்சனங்களுக்கு சேலத்தில் நடந்த பொருட்காட்சி விழாவில் பதிலளித்திருக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. ‘தமிழக அரசு நிதியைத் திருப்பி அளிக்கவில்லை. குறிப்பிட்ட நிதியாண்டில் மாநில அரசால் எதிர்பார்க்கப்பட்டு மத்திய அரசால் விடுவிக்கப்படாத நிதியானது சேமிப்பாகவே கருதப்படும். அடுத்த நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து அந்நிதி பெறப்படும்போது மாநில அரசால் நிதியறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்பது முதல்வரின் பதில்.
- சமூக நலத் திட்டங்களுக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை தமிழகம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அல்ல. தலைமை கணக்குத் தணிக்கையாளரின் வருடாந்திர அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரம். தமிழக அரசு தமக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் திருப்பித் தந்துவிட்டது என்று மட்டுமே அந்த அறிக்கை குறிப்பிடவில்லை. தொகை பயன்படுத்தப்படாததற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருக்கிறது.
தமிழக அரசின் அலட்சியம்
- 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5,920 கோடி. இவற்றில் தமிழக அரசு செலவழித்திருப்பது ரூ.2,243 கோடியை மட்டும்தான். எஞ்சிய தொகையை தமிழக அரசு செலவழிக்காததற்குக் காரணம், தமிழக முதல்வர் குறிப்பிடுவதுபோல மத்திய அரசு ஒதுக்கிய தொகையை உரிய நேரத்தில் வழங்காதது மட்டுமல்ல; மாநில அரசு ஆற்ற வேண்டிய பணிகளில் காட்டப்பட்ட அலட்சியமும் அநியாயமான காலதாமதமும்கூடத்தான்.
- பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினரில் ஏழை எளியவர்கள் வீடு கட்ட நிதியுதவி செய்யும் பிரதம அமைச்சரின் ‘ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசும் மாநில அரசும் முறையே 60:40 பங்களிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.3,082 கோடி. இதில் மாநில அரசு செலவிட்டிருப்பது வெறும் ரூ.728 கோடி மட்டுமே. செலவழிக்கப்படாமல் ரூ.2,354.38 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம், குறிப்பிட்ட அந்த நிதியாண்டுக்குள் திட்டத்துக்கான பயனாளிகளை அடையாளம் காண்பதில் தமிழக அரசு தவறிவிட்டதுதான். இதைத் தணிக்கை அறிக்கை மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறது.
- தமிழகத்தைப் பொறுத்தவரையில், ‘ஆவாஸ் யோஜனா’ திட்டத்துக்கான பயனாளிகளைக் கண்டறியும் பொறுப்பை உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகள், ஊரக மேம்பாட்டு அமைப்புகள், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை ஏற்றுக்கொண்டிருந்தன. இத்தனை அமைப்புகள் இருந்தும் வீடு கட்டிக்கொள்வதற்கு வழியில்லாத ஏழை எளியவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை யார்தான் நம்ப முடியும்?
கிராமப்புறங்களில் நிலவிவரும் கடும் வறட்சியிலிருந்து மக்களைப் பாதுகாத்துவரும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான தொகையிலும்கூட ரூ.247.84 கோடி செலவழிக்கப்படவில்லை. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.23.84 கோடியும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புக்கு உதவுவதற்காக உலக வங்கி ஒதுக்கீடு செய்த ரூ.100 கோடியில், ரூ.2.35 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
- தமிழக முதல்வர் அளித்திருக்கும் பதிலில், இதைப் பற்றியெல்லாம் எந்தக் குறிப்பும் இல்லை. மொத்தத்தில், வளர்ச்சித் திட்டங்களில் தமிழக அரசு காட்டுகிற அக்கறையையும் ஆர்வத்தையும் சமூக நலத் திட்டங்களில் காட்டவில்லை என்பதுதான் தணிக்கை அறிக்கையிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்தி. மத்திய அரசால் சமூக நலத் திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படவில்லை என்றால் அது சேமிப்பாகவே கருதப்படும்.
- அடுத்த நிதியாண்டில் அந்நிதி செலவழிக்கப்படும் என்பதெல்லாம் மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு ஏற்பாடுகள். அதையெல்லாம் சொல்லி தமிழக முதல்வர் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. அவரை நோக்கி எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி, திருப்பி அனுப்பப்பட்ட நிதி என்னவாகும் என்பதல்ல; நிதியைத் திருப்பி அனுப்பியது ஏன் என்பதுதான்.
மாநில ஒதுக்கீட்டுக்கும் அதே நிலைமை
- மத்திய அரசு அளித்த நிதியுதவியை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, மாநில அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்த நிதியையும்கூட முறையாகச் செலவழிக்கவில்லை என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. 2017-18 நிதியாண்டில் மட்டும் நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.28,029 கோடியைச் செலவழிக்கவில்லை. ஊரக மேம்பாட்டுத் துறை, நிதித் துறை, பள்ளிக் கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், நீர் விநியோகம், நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படவில்லை. பள்ளிக் கல்வித் துறையில் மட்டுமே சர்வ சிக்ஷன் அபியான் உள்ளிட்ட வெவ்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.1,627 கோடி செலவழிக்கப்படவில்லை.
- கடந்த ஐந்தாண்டுகளில், தமிழக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய தொகையில் செலவழிக்காத தொகை ரூ.1.22 லட்சம் கோடி. ஒவ்வொரு ஆண்டும் இப்படி நிதியறிக்கையில் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதும், அதைப் பயன்படுத்தாமல் ‘சேமிப்பதும்’ அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம், நிதி மேலாண்மையில் இருக்கிற திறனின்மைதான் என்று தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது. தொகுப்பு நிதியிலிருந்து அதிக வட்டியில் பெறுகிற தொகையைத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு அரசுத் துறையும் குறைந்த வட்டியில் சேமிப்புக் கணக்கில் பாதுகாத்துவருவது முறையா என்று விமர்சனங்கள் எழுகின்றன.
- ஒரு பள்ளிக்கூடமும் மருத்துவமனையும் கட்டுவதற்காக நிதியறிக்கையில் ஒதுக்கிய நிதியை அந்த ஆண்டே பயன்படுத்தினால் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆயிரக்கணக்கான நோயாளிகள் உடனடியாகப் பயன்பெற முடியும். அந்த நிதியை உடனடியாகச் செலவழிக்காமல் அடுத்தடுத்த ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடுவதை எப்படி சேமிப்புக் கணக்கில் சேர்க்க முடியும்? நாளுக்கு நாள் பணவீக்கம் உயர்ந்துவரும் காலம் இது. திட்டங்களைத் தள்ளிப்போடுவது வருங்காலத்தில் திட்டச் செலவுகளை மேலும் அதிகரிக்கத்தானே செய்யும்? சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடியாகப் பெருமைகொள்ளும் தமிழக அரசு, தன் நிர்வாகத் திறனின்மையை உடனடியாகச் சரிசெய்துகொள்ள வேண்டிய நேரமிது.
நன்றி: இந்து தமிழ் திசை(14-08-2019)