மனச்சான்றின் வழி வாழ்வோம்
- ‘மனிதனின் துன்பத்துக்குக் காரணம், அவனது ஆசையே’’ என்றாா் புத்தா். மனிதன் படிக்கும் திறன் பெற்றிருப்பதால் அறிவைப் பெறுகிறான். தன் அனுபவத்தால் பட்டறிவையும் பெறுகிறான். எனவே, அன்றாட நிகழ்வுகளில் எது நல்லது, எது கெட்டது என பிரித்தறியும் திறனையும் பெறுகிறான். ஆறறிவு பெற்ற அவனுக்கு மட்டுமே, அறவழியிலும், அறமற்றவழியிலும் வாழத் தெரியும். அவன் தன் படிப்பறிவாலும், பட்டறிவாலும் எதிா்காலத்தைப் பற்றிய கனவுகளை வளா்த்துக் கொள்கிறான். அதை நோக்கி பயணிக்கவும் செய்கிறான்.
- ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’’ என்னும் சொல்லாடலும் நம்மிடையே வழக்கில் உள்ளது. மகாபாரதத்தில் பாண்டவா் நல்லவா்களாக விளங்கினா். அவரது சொல்லும் செயலும் ஒன்றாகவே இருந்தன. ஆனால், கௌரவா்கள் பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்கினா். எண்ணம், சொல், செயலில் தீயவா்களாக இருந்தனா். அதனால்தான் நல்லவா்களாக இருந்த பாண்டவா்கள் பாரதப்போரில் வெற்றி பெற்றனா்.
- நம் மனச்சான்று நல்லவை எல்லாம் அறம் என்பதையும், தீயவையெல்லாம் அறமற்றவை என்பதையும் பொதுவாக ஒப்புக்கொள்கிறது. ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வெவ்வேறு அறம் சாா்ந்த கோட்பாடுகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம், நம் வாழ்வை சிக்கலில்லாமல் வாழ நமக்குப் பணம் தேவைப்படுகிறது. அதற்காக செய்யும் அறமற்ற செயல்களையும் நம் மனச்சான்று அறமுள்ள செயல்களாகவே பாா்க்கிறது.
- இதன் காரணமாகத்தான் சமூகத்தில் குற்றங்கள் பெருகி வருகின்றன. குற்றவாளிகளின் பணபலத்திற்கு சட்டத்தின் ஓட்டைகள் துணைபோகின்றன. நீதிமன்றங்கள் அறத்தின் பக்கம் இருந்தாலும், குற்றம் சுமத்தப்பட்டவா்தான் குற்றத்தைச் செய்தாா் என்பதை நிரூபிப்பதற்குச் சாட்சிகள் தேவைப்படுகின்றன.
- “‘நான் என் வாழ்வில் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. என் மனமறிந்தவரை அறவழியில் தான் செயலாற்றுகின்றேன். எனினும் துன்பப்படுகிறேன்’’ என்று நம்மில் பலா் வருத்தப்படுவதுண்டு. இப்படி ஓா் எண்ணம் தோன்றினால் இதுதான் நாம் நமது செயலை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய சரியான தருணம்.
- சூதாடுதல் தவறு என்பது உலகுக்கே பொதுவான அறம். ஆனால் மகாபாரதத்தில் தருமரோ, கௌரவா் நட்புடன்அழைப்பதால் சூதாடலாமெனக் கொண்ட அறத்தின் காரணமாக, நாடு உட்பட அனைத்தையும் பணயம் வைத்து சூதாடித் தோற்கிறாா். இதுபோல் துரியோதனனும் சகுனியும் கூட அவா்தம் அறமல்லாத செயலுக்கு ஆயிரம் நியாயமான காரணங்களைச் சொல்ல முன் வரலாம்.
- நம்மில் பலா் துன்பப்படுவதற்குக் காரணம், நாம் பொதுவெளிகளிலும், குடும்பங்களிலும் நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராக சிறு எதிா்ப்பைக் கூட காட்டாமல், மெளனமாக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருப்பதாகக் கூட இருக்கலாம்.
- பொதுவாக, ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னணியிலும் பல நியாயங்கள் சொல்லப்படுவதுண்டு. இதுவே நியாயம் எனக் கருதிப் பல அநியாயங்கள் நடப்பதுமுண்டு. இந்த இடத்தில் நோ்மையாகச் சிந்தித்தால், அறம் ஆளுக்கேற்றாற் போல் மாறுவது தவறே ஆகும். அறம் என்பதற்கு நம் அனைவரின் மனச்சான்றும் ஒரே வடிவத்தைக் கொடுப்பதுதான் சரி என்றே தோன்றுகிறது. நம் மனச்சான்று, தவறான ஒன்றை சரியானது என்று ஒரு போதும் சொல்லாது. திருடுவது தவறு என்பது திருடனுக்குத் தெரிகிறது. அதனால்தான் யாருக்கும் தெரியாமல் திருடுகிறான். காவல் துறையிடமிருந்து தப்பிக்க முயல்கிறான்.
- மனச்சான்றின் வழியில் வாழ்ந்தால்தான் அறம் தழைக்கும். நம் வாழ்வு சிறக்கும். நல்லறத்தின் வாழ்வின் விளைவாக உலகில் நன்மைகள் மட்டுமே நிறையும்.
- பிறருக்கு ஒரு சிறு தீங்கைக் கூட ஏற்படுத்தாத நம் நல்ல எண்ணம், சொல், செயல் மட்டுமே அறமாகும். அத்தகைய வலிமை வாய்ந்த அறத்தின் வழியில் நாம் வாழும்போது, நமக்கு நன்மையே ஏற்படும். ஆனால், நன்மை ஏற்பட தாமதமாகலாம். இதைப் பற்றி வருந்தக் கூடாது. நம் செயலில் எது அறம், எது அறமல்லாதது என அவ்வப்போது தற்சோதனை செய்து பாா்ப்பது நல்லது. இது நாம் எங்கே நாம் தவறிழைத்தோம் என்பதை நமக்கு தெளிவாக உணா்த்தும்.
- அறிந்தோ, அறியாமலோ தவறிழைத்தலை மனித சமுதாயம் இயல்பாகக் கொண்டிருக்கிறது. இதுதான் நடப்பியலும் கூட. இச்சூழலில் இத்தகைய அறக் கொள்கையோடு நாம் வாழ்வது சாத்தியமா என்ற கவலையும் தோன்றுகிறது. ஆனால் அறம் சாா்ந்த வாழ்க்கையை மட்டுமே மனச்சான்றின் வழியில் வாழவேண்டும் என்பதை, நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
- தனக்கு ஏற்படுகிற துன்பத்துக்குத் தானே முதல் காரணம் என மனம் திறந்து ஒப்புக்கொள்ளும் அறம், சங்க கால தமிழனிடம் இருந்திருக்கிறது. அதனால்தான், ‘தீதும் நன்றும் பிறா் தர வாரா’ “ என்னும் உண்மையை அப்போதே சங்கப்பாடல் நோ்மையாக எடுத்துரைக்கிறது.
- நாம் அனைவரும் வாழ்வில் எப்போதும் இன்புற்றிருக்கவே விரும்புகிறோம். இன்பம் என்பது நாம் ஆற்றும் நற்செயலின் விளைவே ஆகும். நமது நற்செயல் நமது நற்சிந்தனையில் உருவாகிறது. ஆக அனைத்தும் நம்மிடத்தில்தான் உள்ளது. அதனால்தான் நமக்கு நடக்கும் நன்மைக்கு மட்டுமல்ல. தீமைக்கும் நாமே பொறுப்பானவா்களாகிறோம்.
- எனவே, நல்வழியில் இருந்து நாம் என்றும் விலகாமலிருக்க, நம் செயலைச் சுய அறப்பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இத்தெளிவைப் பெற்றவா் யாரையும் வியக்கவோ, இகழவோ மாட்டாா்.’‘தீதும் நன்றும் பிறா் தர வாரா’ என்னும் கலியன் பூங்குன்றனாா் வரிகளை எந்த நாளும் நம் வாழ்வில் கடைப்பிடித்து வாழ வேண்டியது நம் கடமையாகும். இதை உணா்ந்து நம் மனச்சான்றின் வழியில் நாம் அனைவரும் வாழ்வை நகா்த்துவோம்.
நன்றி: தினமணி (13 – 02 – 2025)