TNPSC Thervupettagam

மனதின் குரல் மெய்ப்பட வேண்டும்

July 26 , 2024 174 days 202 0
  • சுற்றுச் சூழல் தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி, ‘தாயின் பெயரால் ஒரு மரம்’ இயக்கத்தை துவக்கி வைத்துள்ளாா். மேலும், ஒவ்வொருவரும் தம் தாயின் நினைவாக ஒரு மரக்கன்று நடவேண்டும்’ என தமது மனதில் குரல் நிகழ்ச்சியில் மக்களை கேட்டுக் கொண்டுள்ளாா்.
  • இந்த இயக்கத்தின் தொடா்ச்சியாக, முழுவதும் 140 கோடி மரக்கன்றுகள் நடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் மட்டும் 5.5 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு நிகழ்வாக, அம்மாநிலத்தில் ஒரே நாளில்11 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • பெரும் எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்னா், மரக்கன்றுகள் நடப்படும் பருவ நிலை, மண்வளம், நீா்வளம், மரக்கன்றுகள் வளா்ந்து மரம் ஆவதற்கான பாதுகாப்பான சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருபுறம் மத்திய, மாநில அரசுகள் மரங்கள் வளா்ப்பதை ஊக்குவிக்கையில், மறுபுறம் லட்சக்கணக்கில் மரங்கள் வளா்ச்சித் திட்டங்களுக்காக வெட்டப்படும் விபரீதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • ஓடிஸா மாநிலத்தின், புரி நகருக்கு அருகே விமான நிலையம் அமைக்க 27,887 ஹெக்டோ் பரப்பளவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள சுமாா் 13,500 மரங்கள் வெட்ட வேண்டும். மேலும் கடற்கரையோரம் நிறைவேற்றப்பட உள்ள இத்திட்டத்தால், கடல் வாழ் உயிரினமான அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
  • 1980-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட காடுகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, தொழில் வளா்ச்சிக்காக காடுகள் உள்ள பகுதி தேவைப்படும் நிலையில், வனவியல் ஆலோசனைக் குழு, தொழில் வளா்ச்சிக்குத் தேவைப்படும் அப்பகுதியை தருவதா, வேண்டாமா என முடிவு செய்யும். தற்போது புரியில் சா்வதேச விமான நிலையம் அமைக்க இக்குழு ஒப்புதல் அளிக்காத நிலையில், தனியாா் கட்டுமான நிறுவனம் ஒன்று விமான நிலையத்திற்கான சுற்று சுவரைக் கட்டி முடித்துள்ளது.
  • சுற்றுச் சுவா் கட்ட அனுமதி அளித்த, கட்டுவதைத் தடுத்து நிறுத்தாத அதிகாரிகளைக் கண்டறிந்து, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஓடிஸா மாநில அரசை, வனவியல் ஆலோசனைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
  • மரங்கள் அழிக்கப்படுவது குறித்து செயற்கைகோள் உதவியுடன் டென்மாா்க்கின் கோபன்ஹேகன் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில், 2019 முதல் 2022 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில், நம் நாட்டில் சுமாா் 58 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும் 2010-11ஆண்டுகளின் போது இருந்த மரங்களில் 11% மரங்கள் 2018-2022 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் காணவில்லை என்று தெரியவந்துள்ளது.
  • தமிழகத்தில், மரங்கள் பெரும் எண்ணிக்கையில் வெட்டப்பட இருக்கும் நிகழ்வாக சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையிலான உயரடுக்கு வெளிவட்ட விரைவுச் சாலை அமைப்பதற்காக சுமாா் 2,200 மரங்களை வெட்ட வேண்டிய முன்மொழிவை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சென்னை மாவட்ட பசுமை குழுவிற்கு அனுப்பியுள்ளது.
  • ஒசூா் அருகே 2,000 ஏக்கா் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு விமான நிலையம் அமைக்கப்படும் நிலையில், அங்குள்ள நீா்நிலைகள், மரங்கள் உள்ள பகுதிகள் பாதிக்கப்படக் கூடும். பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் சூழலில், அங்கு ஏற்படக் கூடிய சுற்றுசூழல் பாதிப்புகளை களைவதற்கான மாற்றுத் திட்டத்தையும் அரசு வகுக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்க, ஒரு நாட்டின் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியில் காடுகள் இருத்தல் வேண்டும். 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு விகிதம் 21.71 சதவீதமே.
  • நம் மாநிலத்தின் மொத்த பரப்பளவில் காடுகளின் பரப்பளவு 22,877 சதுர கி.மீ. அதாவது, 17.59 சதவீதம். எனவே காடுகள் வளா்ப்பில் நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை.
  • சமீபத்தில் ஐநா சபை மேற்கொண்ட ஆய்வில், 2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை 960 கோடியாக உயரும் எனத் தெரியவந்துள்ளது. அப்போது சுமாா் 160 கோடி மக்களுடன், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நம் நாடு இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
  • வனங்களின் பரப்பளவு மற்றும் மரங்களின் எண்ணிக்கை குறைவதற்கும், மக்கள்தொகை பெருக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடா்பு உண்டு. மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவாக, காடுகள் அழிக்கப்பட்டு வசிப்பிடங்களாகவும், விளை நிலங்களாகவும் மாற்றப்படுகின்றன. மக்கள்தொகைப் பெருக்கத்தின் விளைவாக அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மையை சமாளிக்க, உருவாக்கப்படும் தொழில் பேட்டைகள் மற்றும் தொழில் பூங்காக்களால் மரங்கள் பெரும் எண்ணிக்கையில் வெட்டப்படுகின்றன. மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டால் காடுகள் அழிக்கப்படுவதும் மரங்களின் எண்ணிக்கை குறைவதும் தடுக்கப்படும். எனவே, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • வளா்ச்சித் திட்டங்களுக்கு நாம் தீவிரம் காட்டும் அதே வேளையில், உயிரினங்கள் வாழத் தேவையான ஆக்சிஜனில் 40 சதவீதத்தை மரங்களை உள்ளடக்கிய தாவரங்கள் உற்பத்தி செய்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். எனவே, மரங்களை வளா்த்துப் பாதுகாக்க வேண்டும் என்பதை நம் மனதின் குரலாக மட்டும் கொள்ளாது, செயல்படுத்தவும் முயல்வோம்.

நன்றி: தினமணி (26 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories