மனநல வழிகாட்டிகளின் முக்கியத்துவம்
- நலவாழ்வு என்பதைப் பெரும்பாலும் உடல் உறுப்புகள் தொடர்பானது என்றே பலரும் சிந்திக்கிறார்கள். மருத்துவ அறிவியல் வளர்ச்சியின் காரணமாகக் கண்டுபிடிக்கப்படும் பல்வேறு உடல் அறிகுறிகளுக்கும் மருத்துவர்களை அணுகுபவர்களில் பலர், மனநலமும் சேர்ந்ததுதான் முழுமையான நலவாழ்வு என்பதை ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறார்கள்.
- அமைதி கிடைக்கும் என ஆன்மிகத் தலங்களுக்குச் செல்பவர்கள்கூட மனநல மருத்துவர்களிடம் செல்லத் தயங்குகிறார்கள். உளவியல் சிகிச்சையில் ஆன்மிகமும் ஓர் அலகுதான். உடலியல், உளவியல், சமூகவியல், ஆன்மிகம் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்தே குணமளிக்கும் உளவியல் சிகிச்சைகள் பல உள்ளன. எனினும், இவற்றையெல்லாம் தாண்டிப் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
- சிகிச்சையின் முறைகள் மனநலப் பிரச்சினைகளுக்கு நண்பர்களிடமும், வீட்டில் உள்ள பெரியவர்களிடமும் கலந்தாலோசிப்பதே போதுமென நினைக்கிறவர்களும் உண்டு. நண்பர்களும் குடும்பத்தினரும் அறிவுரை சொல்வார்கள். மனநல வழிகாட்டி அறிவுரை சொல்ல மாட்டார். உங்களை அழுத்தும் சிக்கல்கள், உங்களின் இலக்கு, அதை அடைவதற்குச் செய்ய வேண்டியவை என உங்களுக்கானதை நீங்களே முடிவெடுக்க வழிநடத்துவார்.
- எடுத்த முடிவை நீங்கள் செயல்படுத்தும்போது ஏற்படும் தடுமாற்றங்களில் ஊக்கப்படுத்தி நலவாழ்வுக்குத் திசை காட்டுவார். சிகிச்சைக்குச் சென்றால் மற்றவர்கள் கேலி செய்வார்களோ என்கிற அச்சம் இருந்தால், சிகிச்சைக்குச் சென்று வந்தவர்களிடம் பேசிப் பாருங்கள். மனநல வழிகாட்டி, முற்சார்பு எண்ணமின்றி அவர்களை ஏற்றுக்கொண்டதை, பேச்சை ஆழ்ந்து கவனித்ததை, உணர்வார்ந்த ஆதரவு நல்கியதை, பயன்தரும் பயிற்சிகள் கொடுத்ததைச் சொல்வார்கள்.
அரசின் கவனத்துக்கு:
- பள்ளி மாணவர்கள் கூட மனச்சோர்வுடன் நாள்களைக் கழிக்கும் இக்காலத்தில் அரசு, தனியார் கல்லூரிகள் உளவியல் துறையைத் தொடங்கித் துறைசார் வல்லுநர்களை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கல்லூரி முதல்வர் ஒருவரிடம் பேசியபோது, “உளவியல் படிக்க யாரும் விரும்பி வரப்போவதில்லை. மனநல சிகிச்சைக்கும் யாரும் செல்லப் போவதில்லை” என்றார். யதார்த்தம் என்னவென்றால், மாணவர்கள் படிக்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
- உளவியல் பாடங்களைப் படிக்க மாவட்டந்தோறும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்... நல்ல ஊதியத்துடன். உளவியல் தொடர்பான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். தமிழகத்துக்கெனத் தனியாக மனநலச் சட்டம் உருவாக்கலாம்.
- காணொளிகள், சுவரொட்டிகளைத் தயார் செய்து, ஆண்டு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். உடனே மாற்றங்கள் நிகழ்ந்துவிடாதுதான். உளவியல் சிகிச்சை குறித்த புரிதல் அதிகம் உள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளில்கூட முழுமையான புரிதல் உருவாகிவிடவில்லை. நாமெல்லாம் தொடக்கநிலையில்தான் இருக்கிறோம். தொடர்ந்து பேசுவோம், உடல் - மன நலத்தோடு மகிழ்ந்திருக்கும் சமுதாயத்தை அமைப்போம்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 11 – 2024)