TNPSC Thervupettagam

மனிதர்களை மையப்படுத்தும் போதை ஒழிப்பு

June 25 , 2023 510 days 869 0
  • உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களைப் பெரிதும் பாதித்துவரும் மிகத் தீவிரமான பிரச்சினைகளில் போதைப் பொருள் முக்கியமானது. வலுவான சட்டங்களை மீறி போதைப் பொருள் புழக்கம் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்ற வலைபின்னல்கள் வலுவடைந்துகொண்டே வருகின்றன. போதைப் பொருள்களற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்துவருகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26, போதைப் பழக்கம் - சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளாக (போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச நாள்) அனுசரிக்கப்படும் என்று 1987 டிசம்பர் 7 அன்று ஐ.நா. பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள்களால் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான பல்வேறு வகையான பிரச்சார நிகழ்ச்சிகள் ‘போதை ஒழிப்பு நாள்’ அன்று பல உலக நாடுகளில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
  • போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆட்பட்டோர் சமூக விலக்கத்துக் கும் பாகுபாட்டுக்கும் ஆளாகின்றனர். இதன் காரணமாகப் போதைப் பழக்கத்திலிருந்து மீள விரும்புவோர் அதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட உதவிகளை நாட முடிவதில்லை. எனவே, மனித உரிமைகள், சக மனிதன் மீதான அக்கறை ஆகியவற்றுடன் கூடிய மனிதர்களை மையப்படுத்தும் அணுகுமுறையுடன் போதை ஒழிப்புக் கொள்கைகளை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஐ.நா. உணர்ந்துள்ளது. இந்தப் பின்னணியில் 2023ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேச போதை ஒழிப்பு நாள்’ கருப்பொருள் - ‘மனிதர்களுக்கு முதன்மை: களங்கம் சுமத்துவதையும் பாகுபாட்டையும் நிறுத்துவோம், தடுப்பு நடவடிக்கைகளுக்கு வலுவூட்டுவோம்’ (People First: stop stigma and discrimination, strengthen prevention) என்பதாகும்.

போதைப் பழக்கம்: புரிதல் உணர்வும் கையாளுதலும்

  • பொதுவாக நாம் போதைப் பொருள் பழக்கத்தையும் அதில் ஈடுபடும் குற்றவாளிகளையும் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால், உறவுகள் சரியாக அமைந்துவிட்டால் யாருக்கும் போதைப் பொருள் போன்ற விஷயங்களின் மீது ஆர்வம் வராது.

மூன்று வகை கவனக்குவிப்புகள்

  • பதற்றம், பயம், கோபம், குற்ற உணர்வு ஆகிய உணர்வுகள் எழுச்சிபெறும்போது, அதை என்ன செய்வது என்று தெரியாத நிலையை உணர்வு ரீதியான ஒழுங்கின்மை (Emotional disregulation) என்போம். இந்த நிலையில் இருப்பவருக்குத்தான் கவனச்சிதறல் (distraction) தேவைப்படும்.
  • இந்த ஒழுங்கின்மையைக் கையாள முடியாமல் சிலர் தவறான காணொளிகளைப் பார்ப்பார்கள். நீண்ட காலமாக இந்த நிலை உள்ளே இருக்கும்போது அதை ஆற்றுப்படுத்துவதற்கு ஏதேனும் ஒரு பொருளை உள்ளே செலுத்திக்கொள்ளும் உந்துதல் ஏற்படுகிறது, பெரும்பாலானவர்கள் போதைப் பழக்கத்துக்குள் செல்வது இப்படித்தான்.
  • முதலில் ஒருவர் தன்னுடனான உறவைச் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். தனிமையில் நேரம் செலவிட முடிவது, அந்த நேரத்தை நேர்மறைச் சிந்தனைகளுடன் கடத்துவது ஆகியவற்றுக்கான திறன் இல்லாதவர்கள்தான் கவனச்சிதறல்கள் அல்லது தேவையற்ற சாகசங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே உள்ளார்ந்த கவனக்குவிப்பைப் (Inner Focus) பழக்க வேண்டும். குழந்தை தூங்கப் போகும்போது ‘நீ இன்றைக்கு என்னென்ன செய்தாய், என்ன பிடித்தது - என்ன பிடிக்கவில்லை, நாளை புதிதாக என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறாய்' என்றெல்லாம் கேட்பதுகூட, குழந்தை உள்நோக்கிப் பார்த்துக் கொள்ளக் கற்றுக்கொடுப்பதுதான். பெற்றோர் இதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.
  • இரண்டாவதாக பெற்றோரிடமிருந்து நன்மை தீமைகளைத் தெரிந்துகொள்வதற்கான சூழலைக் குழந்தைகளுக்கு உருவாக்குவது வெளிப்புற கவனக் குவிப்பு (Outer Focus). பெற்றோர் எனக்கு நன்மை தீமைகளை எடுத்துச் சொல்கிறார்கள். நான் ஏதேனும் தவறு செய்தால் எனக்குக் கடுமையான தண்டனைகளைக் கொடுக்காமல், நான் திருந்துவதற்கு உண்டான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
  • இந்த இரண்டும் சரியாக அமைந்து விட்டால் பிற உறவுகளை வாழ்வில் சரியாகக் கையாண்டு சமநிலையில் வைத்திருக்க முடியும். இது பிறர் மீதான கவனக்குவிப்பு (Other focus). இது சரியாக அமைந்தவர்கள் பிற உறவுகளில் தவறு நிகழும்போது அதைச் சரி செய்துவிட முடியும். உதாரணமாக யாரையேனும் கோபமாகப் பேசி புண்படுத்திவிட்டால் உண்மையான சரியான வளர்ச்சி இருப்பவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிடும் பக்குவம் இருக்கும்.
  • இவை மூன்றும் சரியாக அமைந்த வர்கள் எடுக்கும் முடிவுகள், அவர் களுடைய தெரிவுகள் அனைத்தும் பாதுகாப்பானவையாக இருக்கும். அவர்கள் அதில் தங்களுடைய சந்தோஷத்தை மட்டும் பார்க்க மாட்டார்கள். தன்னுடைய ஒரு பழக்கத்தால் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் சமுதாயத்துக்கும் பிரச்சினை வரும் என்று புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் ஏற்பட்டுவிடும்.

தொடக்கநிலை மீட்பு

  • என் மகனோ மகளோ போதைப் பொருள்களை எல்லாம் தேடவே மாட்டான்/ள் என்று கண் மூடித்தனமாக பெற்றோர் நம்பிக்கொண்டிருப்பது குழந்தை வளர்ப்பில் நிகழக்கூடிய மிகப் பெரிய தவறு. இது குறித்து 10-12 வயதிலேயே குழந்தைகளிடம் பேசத் தொடங்க வேண்டும். இத்தகைய பழக்கங்களின் தீய விளைவுகள் குறித்த அறிவியல்பூர்வமான உண்மைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இப்படிச் செய்வதை விடுத்து சாமி கண்ணைக் குத்திவிடும் என்று கடவுளைக் காண்பித்து பயமுறுத்துவது, குடும்பப் பெயர் கெட்டுவிடும் என்று ஒழுக்க நெறிகள் சார்ந்த அறிவுரைகளை வழங்குவது போன்ற வற்றால் எந்தப் பயனும் இல்லை. அறிவியல்பூர்வமான உண்மைகளைச் சொன்னால் குழந்தைகளால் அதைச் சிறப்பாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.
  • மகனோ மகளோ நான் சிகரெட் பிடிக்க முயன்றி ருக்கிறேன் என்று சொன்னால், அவனை/அவளை உடனடியாகக் கண்டிக்கக் கூடாது. அதே நேரம் “உன் வயதில் நானும் இதெல்லாம் செய்திருக்கிறேன். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை” என்பதுபோலவும் பேசக் கூடாது. “நீ இதிலிருந்து மீள்வது கடினம் என்பதைப் புரிந்துகொள்கிறேன். அதற்கு நான் உதவுகிறேன். ஆனால், இதுபோன்ற பழக்கங்களுக்கு என்னால் பணம் கொடுக்க முடியாது“ என்று உறுதியாகச் சொல்ல வேண்டும். இதுவே எல்லைகளை வரையறுத்தல் (Boundary Setting). அவமானப் படுத்தாமல், குற்ற உணர்வுக்கு உள்ளாக்காமல் அவர்கள் செய்வது தவறு என்பதைப் புரிய வைக்கும் அணுகுமுறை இது.

அடிமைத்தன சிகிச்சை

  • பொதுவாக பதின்பருவத்தினரும் இளைஞர் களும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவார்கள். ஆனால், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தனிமையை நாடுவார்கள். முதலில் இந்தப் பழக்கத்தைத் தொடங்கும்போது குழுவாகத்தான் நடக்கும். அந்தப் பழக்கம் அடிமைத்தனமாகும்போது, தனித்து விலகிவிடுவார்கள். அடுத்தது மிகத் தீவிரமான மனநிலை ஊசலாட்டம் (Mood swings) இருக்கும். கண்கள் சிவப்பது, உடல் எடை இழப்பு அல்லது அதிகரிப்பு, துர்நாற்றம் வருதல் உள்ளிட்ட உடல்சார்ந்த அறிகுறிகளும் தென்படும். போதை அடிமைத்தனம் அதிகமாக அதிகமாக வீட்டில் உள்ள பணம், பொருள்கள் காணாமல் போகும். வீட்டிலேயே திருடத் தொடங்கிவிடுவார்கள்.
  • பெற்றோர்கள் தமது பிள்ளைகளுட னான உறவில் ஏதேனும் மாற்றம் தென்பட்டாலே, ஏதேனும் ஒன்றுக்கு அவர் அடிமையாகியிருக்கிறாரா என்று பார்க்க வேண்டும். அது ஸ்மார்ட் ஃபோன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவியாக இருக்கலாம். சிகரெட், மது, போதைப் பொருள் உள்ளிட்ட தீயப் பழக்கங்களாக இருக்கலாம்.
  • புகை, மது, போதைப் பொருள் ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதுதான் ஒரே தீர்வு. ஏனென்றால் போதைப் பொருள்களில் வேதிப் பொருள் உள்ள டக்கம் இருக்கும். எனவே, உடனடியாக நிறுத்தினால் மீளப்பெறுவதற்கான அறிகுறிகள் (Withdrawal Symptoms) தீவிரமடையும். அடிமைத்தன மீட்பு (deaddiction) சிகிச்சைகளை மருத்துவ மனையிலோ மீட்பு மையத்திலோ தங்கவைத்துத் தான் அளிக்க முடியும். பாதிக்கப் பட்ட நபருக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்ப உறுப்பினர் களுக்கும் உளவியல் ஆலோசனை தேவைப்படும். எனவே, மருத்துவ சிகிச்சையை தள்ளிப்போடக் கூடாது.
  • இவை எல்லாம் வரும்முன்னரே காப்பதற்கான வழி, உறவுகளை நெருக்கமடையச்செய்வதுதான். ஒவ்வொருவருக்கும் தன்னுடனான உறவு, பெற்றோர் -குடும்பத்துடனான உறவு, வெளியில் இருக்கும் சமூகத்துடனான உறவு ஆகியவை சரியாக அமைந்திருக்க வேண்டும். அதுதான் போதைப் பொருளற்ற சமூகத்தை அடைவதற்கான வழி.

நன்றி: தி இந்து (25 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories