TNPSC Thervupettagam

மனிதாபிமானத் தீர்வு தேவை

June 9 , 2023 535 days 392 0
  • தற்காலிக, பகுதிநேர, ஒப்பந்தப் பணியாளர் என்போர், அரசுத் துறைகளில் தற்காலிகமாக ஏற்படும் காலி பணியிடங்களால் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படலாகாது என்ற நோக்கத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படுவோர்.
  • சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அரசுத் துறைகளில் தவிர்க்க முடியாத சூழலில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்ட இவர்கள், இன்று அரசுத் துறைகளில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவத்துறையில் சுமார் பத்தாயிரம் ஒப்பந்த செவிலியர்கள், அரசுப் பள்ளிகளில்  பன்னிரண்டாயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்குவதற்காக  இருநூற்று தொண்ணூற்றியெட்டு  தற்காலிக  ஓட்டுநர்கள் என ஒப்பந்த தொழிலாளர், பகுதிநேர பணியாளர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
  • நிரந்தரப் பணியாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் முழுமையாகப் பெறாமல் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர் பணியினை ஒழுங்குபடுத்தவும், நீக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குமுறை - நீக்கம்) சட்டம் 1970. இச்சட்டம் இயற்றப்பட்டு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளை கடந்த பின்னரும், ஒப்பந்த தொழிலாளர் முறை இன்னும் முழுமையாக ஒழிக்கப்படாதது வருந்தத்தக்கது.
  • தற்காலிக, பகுதிநேர, ஒப்பந்தப் பணியாளர்கள் தாங்கள் பணியாற்றும் துறை சார்ந்த தொழிற்சங்கத்தில் உறுப்பினராகும் தகுதி இல்லாதவர்கள் என்பதால், தொழிற்சங்கங்கள் இவர்களின்  கோரிக்கைகளை நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல இயலாது. பல்லாண்டுகளாக தற்காலிக தொழிலாளராகப் பணியாற்றுவோர், தாங்கள் பணிபுரியும் துறையில் எதிர்காலத்தில் நிரந்தரப் பணியாளராக நியமிக்கப்படுவோம் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். 
  • தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம், பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற நெருக்கடியான காலங்களில் தற்காலிக பணியாளர்களுக்கு முக்கியத்துவம் தரும்  நிர்வாகங்கள், இதர காலங்களில் இவர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை; தொழிற்சங்கங்களும் அக்கறை காட்டுவதில் சுணக்கம் காட்டுகின்றன. பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இவர்கள் நியமிக்கப்படுவதை எதிர்க்கவும் செய்கின்றன.
  • சமீபத்தில் சென்னையில் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தை எதிர்த்து நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் திடீர் வேலை நிறுத்தமே  இதற்கு சான்று. ஆக நிர்வாகம், தொழிற்சங்கங்கள் இவை இரண்டுக்கும் நடுவில் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் உள்ளனர் தற்காலிக பணியாளர்கள்.
  • இவர்களில் பலர் வேறு துறையின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பையும் கடந்து விட்டனர் என்பது சோகத்தின் உச்சம்.
  • "சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை நிரந்தரம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்கவில்லை; மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலமே சுகாதாரத் துறையில் பணியாளராக  சேர முடியும்'  என்று மாநில சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளது சரியே.  எனினும்  ஒப்பந்த செவிலியர்கள், தற்காலிக பணியாளர்கள் பிரச்னைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்.
  • காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது, தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்க முடிவெடுத்தார். அதிகாரிகள், மதிய உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்படும் என்று கூறினர். அப்போது காமராஜர், "குழந்தைகளின் பசியை போக்கி, அவர்களை கல்வி கற்க பள்ளிக்கு  வரவழைப்பதற்காக நான் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கவும் தயாராக இருக்கிறேன்' என்று கூறி மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
  • கரோனா காலகட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் சேர்ந்த செவிலியர்களுக்கும், நெருக்கடியான காலகட்டங்களில் அரசுக்கு கைகொடுக்கும் தற்காலிக பணியாளர்களுக்கும் விதிமுறைகளைக் காரணம் காட்டி நிரந்தரப் பணி மறுக்கப்படுவது நியாயமல்ல.
  • மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளிகல்வித்துறை போன்ற அத்தியாவசியத் துறைகள் உள்ளிட்ட  மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஏறத்தாழ ஆறு லட்சம் பணியிடங்களில் நிரந்தர தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு பதிலாக சில ஆயிரம் தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்துவது, மாநில அரசின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்க உதவும்.
  • ஆனால் அத்துறைகளில் மக்கள் முழுமையான சேவையை பெற முடியாத நிலைமையை இது  ஏற்படுத்தக்கூடும். காரணம், நிரந்தர  பணியாளர்களுக்கு நிகரான ஊதியமோ சலுகைகளோ இன்றி பல்லாண்டுகளாக விரத்தியுற்ற  மனநிலையில் பணியாற்றும் ஒப்பந்த, தற்காலிக, பகுதி நேர பணியாளர்கள் முழு  ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்களா என்பது ஐயத்திற்குரியதே.
  • அரசுத் துறைகளில்  நிரப்பப்படாமல் உள்ள காலி பணியிடங்களால், பணியில் உள்ளோர்க்கு கூடுதல் பணிச் சுமை என்பது ஒரு புறம் இருக்க, மக்களுக்கு சேவை அளிப்பதில் குறைபாடு ஏற்படும் என்பதையும்  அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதோடு அவ்வாறு நிரப்பும்போது தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த  பணியாளர்களுக்கு முன்னுரிமை தரவும் வேண்டும். அரசுத் துறைகளில் தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த பணியாளர்களே இல்லை என்ற நிலை விரைவில் உருவாக வேண்டும்.

நன்றி: தினமணி (09 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories