மன்னார் கடலில் இன்னொரு பேரிடர்?
- பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், புதைபடிவ எரிபொருள் தொகுதிகளின் திறந்தநிலை உரிமம் வழங்குவதற்கான பத்தாவது சுற்று ஏலத்தை (OALP-BID) பிப்ரவரி 2025இல் அறிவித்துள்ளது. இந்தச் சுற்றில், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் 9,990.96 சதுர கி.மீ. பரப்பு உள்ளிட்ட 25 ஆழ்கடல் தொகுதிகளின் (1,91,986 ச.கி.மீ. கடற்பரப்பு) ஆய்வு உரிமத்துக்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டில் காவிரிப் படுகையை ஒட்டிய 8,108 ச.கி.மீ. பரப்பிலும், இந்தியப் பெருங்கடலில் குமரிமுனையைச் சூழ்ந்து மூன்று பகுதிகளில் 27,154 ச.கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோகார்பன் வளங்களை ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஏலம் அறிவிக்கப்பட்டது.
- மாநிலம் தழுவிய எதிர்ப்பின் காரணமாக அது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்திய முற்றுரிமைக் கடற்பரப்பில் ஏறத்தாழ 10% பரப்பில் துரப்பண ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் கடலில் எண்ணெய்த் துரப்பணக் கிணறுகளை அனுமதிப்பதற்கு முன்னால், அந்தக் கடலின் சூழலியல் தன்மை, அதன் வரலாற்றுப் பயன்பாடு, அதன் அருகிலுள்ள கடல்களின் தன்மை என அனைத்தையும் புரிந்துகொள்வது அவசியம்.
மன்னார் கடலுயிர்க் கோளம்:
- கடலடியில் துரப்பணம் என்பது, ஊர்ப்புறத்தில் மனை வாங்கி வீடு கட்டிக் குடியேறுவது போன்றதல்ல. கடல் என்பது நகரும் பெருநீர்த்திரள். கடலாறுகள் என்கிற பெருங்கடல் நீரோட்டங்களும், கரைதழுவிய நெடுங்கரை நீரோட்டங்களும் கடலின் அடித்தரையிலும் கடலிலும் பெரிய மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன. 1989இல் மன்னார் கடலுயிர்க் கோளக் காப்பகத்தை மத்திய அரசு அறிவித்தது.
- மன்னார் குடா 129 மீனவக் கிராமங்களின் வாழ்வாதார நம்பிக்கை; பவளத்திட்டுகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள், காடுகள் உள்ளிட்ட அரிய சூழலியல் பகுதி. 500 வகை மீன் இனங்கள், 103 வகை பவளத்திட்டுகள், 100 வகை முட்தோலிகள் (echinoderms), 100 வகை மெல்லுடலிகள் (molluscs), 100க்கு மேற்பட்ட கடல்பாசியினங்கள் உள்ளிட்ட 3,600 உயிரின வகைகளோடு, உலகின் ஐந்தாவது பெரிய கடல்வாழ் பல்லுயிர் உய்விடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- 10,500 ச.கி.மீ. பரப்பைக் கொண்ட இந்தக் காப்பகம் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டக் கடற்கரைகளை ஒட்டிய 21 தீவுகள், பவளத்திட்டுகளை உள்ளடக்கிய 560 ச.கி.மீ. பரப்பு பல்வேறு உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான மன்னார் தேசியப் பூங்காவுக்கு உட்பட்டது. மன்னார் கடலின் செழிப்பான மீன்வளம் இதன் தனித்துவமான நிலவியல், நீரியல் கூறுகளாலும், உயிர்ப்பன்மைச் செழுமையினாலும் உருவானதாகும்.
- ஒரு காலத்தில் தூத்துக்குடி, வேம்பார், ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் முத்து, சங்குக் குளித்தல் இதன் காரணமாகவே செழித்திருந்தது. இயல்பாகவே ஆழம் குறைந்த இப்பகுதியில் 2004 சுனாமி 40 மில்லியன் டன் டைட்டானியம் உள்ளிட்ட மணல், சேறு சகதியைக் கொணர்ந்து ஆழத்தை மேலும் குறைத்திருந்தது. பவளத்திட்டுகளில் 36% பரப்பை சுனாமி சிதைத்துவிட்டது.
- ஆதம் பாலமும் பவளத்திட்டுகளும்தான் ராமநாதபுரம், தூத்துக்குடிக் கடற்கரைகளைச் சுனாமியிலிருந்து பாதுகாத்தன என்கிற பெரிய உண்மையைப் புறக்கணித்து, மன்னார் மென்சூழலியல் பரப்பின் குறுக்கே 2005இல் சேது கால்வாய்க்காகத் தோண்டப்படுவது தொடங்கியது. 2,000 கோடி ரூபாயைக் கடலில் கொட்டிய பிறகு, திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அதனால் ஏற்பட்ட சூழலியல் காயம் இன்னும் ஆறவில்லை.
ஆவுளியா காப்பகப் பகுதி:
- வடக்கே கோடியக்கரை தொடங்கி, தெற்கே தனுஷ்கோடி வரையுள்ள கடற்கரையை ஒட்டி, பாம்பன் கால்வாய் வழியாக மன்னார் குடாவுடன் இணைக்கப்பட்டிருக்கிற பாக் குடாக்கடல் மன்னார் குடாவுக்கு இணையான மீன்வள முக்கியத்துவம் கொண்டது. இக்கடல் சதுப்புகள், கடற்புல் படுகைகள், பவளத்திட்டுகள், அலையாத்திக் காடுகள் என்கிற நான்கு வகைச் சூழலியல் கட்டமைவுகளின் அற்புதமான கலவை. தஞ்சாவூர் - புதுக்கோட்டை கரைக்கடல் பகுதிகளில் 12,250 ஹெக்டேர் பரப்பில் கடற்புல் படுகைகள் உள்ளன.
- திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடற்கரைகளில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் (16 தாவர இனங்கள்), மீன்களின் இனப்பெருக்கத்துக்கும், இரை தேடலுக்குமான இடங்களாக உள்ளன. கோடியக்கரையிலும் தென் விளிம்பான தனுஷ்கோடியிலும் 20,000க்கும் மேற்பட்ட வலசை, உள்ளூர்ப் பறவைகள் வாழ்வதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
- பாக் குடா, இந்தியாவில் டுகாங் டுகான் (Dugong dugon) எனப்படும் ஆவுளியா வாழுகிற மூன்று கடல் பகுதிகளில் ஒன்று. தமிழக அரசு 2022 செப்டம்பரில் பாக் நீரிணையின் 448 ச.கி.மீ. பரப்பை ‘ஆவுளியா காப்பகப் பகுதி’யாக அறிவித்தது (Dugong Conservation Reserve in Palk Bay/GO MS.165/22).தமிழ்நாட்டில் 2021இல் பொறுப்பேற்ற திமுக அரசு ‘பசுமைக் காலநிலை’ நிறுவனத்தைத் தொடங்கி, அதன்கீழ் நெய்தல் நிலமீட்சி, காலநிலை, பசுமை, சதுப்புநில இயக்கங்களை நிறுவியது. பசுமைக் காலநிலைக் கொள்கைக்கு இசைவாக தஞ்சாவூர் - புதுக்கோட்டை கடல் பகுதிகளில் காற்றாலைகளை நிறுவத் திட்டமிட்டுள்ளது. காற்றாலைகள் ஆவுளியா காப்பகப் பகுதிக்கு நெருக்கமாக அமைவது சூழலியலுக்கு உகந்ததல்ல.
மன்னார் கடலின் மறுகரை:
- பாக் நீரிணையின் வாய்ப் பகுதிக்கு நேராகவும், பாயின்ட் பீட்ரோவுக்கு (வட இலங்கை) வடக்காகவும் ஆழ்கடலில் 3,367 ச.கி.மீ. பரப்பில் ‘பீட்ரோ பேங்க்’ என்னும் மீன்வளத் திட்டு அமைந்திருக்கிறது. இதன் வட பகுதி இந்திய முற்றுரிமைப் பகுதிக்குள் வருகிறது. இது இந்திய சுறாப்பாரைவிட அறுவடையில் 25% குறைவானது. இலங்கையின் 74% கடற்கரை, தமிழர்கள் வாழும் வட மாகாணப் பகுதியாகும். இலங்கையின் கடல் மீன்வளத்தில் 84% பீட்ரோ பேங்க் உள்ளிட்ட வட கடல் பகுதியிலிருந்து கிடைக்கிறது. வட மாகாணத்தின் 50% கரைக்கடலும் கடற்கரைகளும் பெருந்தொழில் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
- சீன நிறுவனத்தின் மரபணு மாற்று கடலட்டை (கடல் வெள்ளரி) பண்ணைகளும், பண்ணைச் சுற்றுலா விடுதிகளும் அவற்றின் பாதுகாப்புக்கு எனச் சுற்றிவளைக்கப்பட்ட காணிகளும் கடற்கரை, கரைக்கடல் பகுதிகளைப் பாரம்பரிய மீனவர்களிடமிருந்து பறித்துக்கொண்டன. கடலட்டைப் பண்ணைகள் கரைக்கடலின் கடற்புல் கட்டமைவையும் 12க்கு மேற்பட்ட உள்ளூர்க் கடலட்டை இனங்களையும் கடலாமைகளையும் அழித்துவிட்டன.
- மன்னார் தீவின் 3,000 ஏக்கர் கரைப் பகுதிகளைக் கையகப்படுத்தி, மணல்வள ஆய்வில் இறங்கிய ஆஸ்திரேலியாவின் ‘டைட்டானியம் சாண்ட்ஸ்’ நிறுவனம், தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டறிந்த 265 மில்லியன் டன் அரிய வகைத் தனிமங்களை அகழ்ந்தெடுக்க இருப்பது புதிய சிக்கல். மன்னார் தீவின் 63% நிலப் பகுதி ஏற்கெனவே மூழ்கிப்போன நிலையில், மணல் அகழ்வினால் உப்பு நீர்க் கசிவு, குடிநீர் மாசுபாடு, கரைக்கடல் மாசுபாட்டுடன் பல்லாயிரக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரமும் சீர்குலையும்.
துரப்பண வெடியதிர்வுகள்:
- ஆழ்கடல் தரைக்கு அடியில் எண்ணெய்வள இருப்புகளை அடையாளம் காணும் ‘ஷேல்’ தொழில்நுட்பமானது, அதிர்வு-ஒலி அடிப்படையில் வேலை செய்கிறது. அதன் இயக்கம் டைனமைட் வெடியதிர்வுக்கு நிகரான, (காதைச் செவிடாக்கும்) பேரொலியை எழுப்பக்கூடியது. கடலடித் தரைக்குக் கீழே, வாரக்கணக்கில், நிகழும் அந்த வெடியதிர்வைக் கடலுயிர்களால் தாங்க இயலாமல் நாளடைவில் துரப்பணப் பகுதிகளிலுள்ள கடலுயிர் உய்விடம் அழிந்துவிடும். பல்லுயிரினங்களின் சமநிலையும் உணவுச் சங்கிலியும் சீர்குலையும், அதன் தொடர்ச்சியான மீன்வள வீழ்ச்சியைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டுமா?
துரப்பண அபாயங்கள்:
- ஆழ்கடல்கள் என்பவை மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடலுயிர்களின் வலசைப் பாதையும்கூட. நிரந்தரமான கட்டுமானங்களும் தொழில் நடவடிக்கைகளும் வலசை உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சியைப் பாதிக்கின்றன. எண்ணெய்த் துரப்பணத்தால் ஏற்படும் பாதிப்பு வெறும் எண்ணெய்க் கசிவு மட்டுமல்ல; துரப்பணத் திரவங்களாலும் நங்கூரச் சங்கிலிகளாலும் கடல் சூழலியல் பாதிக்கப்படுகிறது.
- கைவிடப்பட்ட துரப்பணக் கிணறுகளிலிருந்து தொடர்ந்து வெளியேறும் பெட்ரோலியக் கழிவுகள், மீத்தேன் போன்ற பலவகை மாசுகள் கடலை நஞ்சாக்கும். உலகெங்கும் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் கடல் வழங்கும் சூழலியல் சேவையையோ கடற்குடிகளின் வாழ்வாதாரத்தையோ கிஞ்சித்தும் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை. இதுபோன்ற வளர்ச்சிப் பேரிடர்களை, காலநிலைப் பிறழ்வைத் துரிதப்படுத்தும், தீவிரப்படுத்தும் என்பது அனுபவம் சொல்லும் உண்மை.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2025)