TNPSC Thervupettagam

மன்னிப்பே கிடையாது - சண்டீகரின் மேயர் தேர்தல் குறித்த தலையங்கம்

February 20 , 2024 188 days 178 0
  • எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது மட்டுமே அரசியல் கட்சிகளின் நோக்கமாகவும், கொள்கையாகவும் மாறிவிடுவது, அதிக தாமதமில்லாமல் ஜனநாயகம் தடம்புரள்வதற்கான அறிகுறியாகும். அரசியலில் சில அடிப்படை நேர்மைகளும், தார்மிக நடைமுறைகளும் அவசியம் என்பதை உலகுக்கு உணர்த்திய மகாத்மா காந்தி பிறந்த மண்ணில், தேர்தல்கள் மட்டுமல்ல, அரசியலின் போக்கும் சமீபகாலமாகப் பதவிப் போட்டிக்கான களமாக மாறியிருப்பது வேதனை அளிக்கிறது.
  • அரசியலிலும், தேர்தல் நடைமுறைகளிலும் தார்மிக உணர்வுகள் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதன் அடையாளமாகத்தான், சமீபத்தில் சண்டீகர் மேயர் தேர்தலில் நடந்த முறைகேடுகளைப் பார்க்க முடிகிறது. பல கூட்டுறவு சங்கங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்ட இத்தகைய முறைகேடுகள் ஒன்றிய பிரதேசமான சண்டீகரின் மேயர் தேர்தல் வரை ஊடுருவியிருக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
  • கடந்த மாதம் 30-ஆம் தேதி சண்டீகரில் மேயர் தேர்தல் நடந்தது. ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் "இந்தியா' கூட்டணி உருவான பிறகு ஒன்றாக இணைந்து களம்கண்ட முதலாவது தேர்தல் இதுதான். சொல்லப்போனால், "இந்தியா' கூட்டணியின் முதல் தேர்தல். 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டீகர் மாநகராட்சியில், ஆம் ஆத்மி கட்சி 13 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. பாரதிய ஜனதா கட்சி 14 இடங்களிலும், அகாலிதளம் ஒரு இடத்திலும் வென்றிருந்தன. சண்டீகர் மக்களவைத் தொகுதி உறுப்பினருக்கும் மேயர் தேர்தலில் வாக்குரிமை உண்டு.
  • "இந்தியா' கூட்டணி சார்பில் போட்டியிடுவதால், 20 வார்டுகள் உள்ள ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் பிரச்னை இல்லாமல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், 16 வாக்குகள் மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 12 வாக்குகள் கிடைத்தன என்றும், எட்டு வாக்குகள் செல்லாதவை என்றும் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட பாஜக உறுப்பினர் அனில் மாஸி அறிவித்தபோது, தேசிய அளவில் அதிர்வு அலைகள் எழுந்தன.
  • முறைகேடான அந்தத் தேர்தல் முடிவு அறிவிப்பைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்தை அணுகியது. மூன்று வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாகக் கூறி அந்த வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகியது ஆம் ஆத்மி கட்சி.
  • 35 உறுப்பினர்களே உள்ள மாநகராட்சியில் 20 அங்கத்தினர்கள் உள்ள ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க குரல் வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலே போதுமானது. வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டபோது, அதில் முறைகேட்டுக்கு வழிகோலப் போகிறார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வாக்குச் சீட்டுகளில், தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட பாஜகவின் அனில் மாஸி, சில வாக்குகளைச் செல்லாதவையாக்க சில திருத்தங்களைச் செய்வதன் காணொலிப் பதிவு சமூக ஊடகங்களில் வெளியானபோது, முறைகேடு நடந்தது அம்பலமானது.
  • உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கொதித்துப் போய்விட்டார். சண்டீகர் மேயர் தேர்தலில் நடந்துள்ளது ஜனநாயகக் கேலிக்கூத்து என்றும், தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டவர் ஜனநாயகப் படுகொலைக்குத் துணைபோயிருக்கிறார் என்றும் வெளிப்படையாகவே விமர்சித்திருக்கிறார். இந்த முறைகேடு குறித்து உடனடியாக விசாரிக்காமல் விசாரணையை ஒத்திவைத்த பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
  • சண்டீகர் மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சிகளின் "இந்தியா' கூட்டணி வெற்றி பெறும் என்பதாலேயே, மேயர் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி போடப்பட்டது. கடந்த ஜனவரி 18-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலை, தேர்தல் அதிகாரியாகச் செயல்பட இருந்த அனில் மாஸிக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி பிப்ரவரி 6- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அனில் மாஸி நியமன உறுப்பினர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
  • பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஜனவரி 30 -ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதுதான் முறைகேடு செய்யப்பட்டு, 12 வாக்குகள் மட்டுமே பெற்ற பாஜகவின் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இப்போது தேர்தல் தொடர்பான ஆவணங்களை உயர்நீதிமன்றப் பதிவாளர் வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
  • சண்டீகரில் நடத்தப்பட்ட முறைகேடு உள்ளாட்சி, கூட்டுறவுத் தேர்தல்களில்கூட கையாளப்படுமா என்பது சந்தேகம்தான். படிப்பறிவு உள்ள, அதிக அளவில் நடுத்தர மக்கள் வாழும் இந்தியாவின் மிக முக்கியமான சண்டீகர் ஒன்றிய பிரதேசத்தில் முறைகேடு நடத்த முடியுமானால், அதுவே ஏனைய தேர்தல்களிலும் ஏன் நடக்கக்கூடாது என்கிற சந்தேகம் எழுகிறது.
  • சண்டீகர் மாநகராட்சி மேயருக்கான தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தல் நடத்துவதால் பிரச்னை முடிந்து விடக்கூடாது. முறைகேடுகள் செய்த, அனில் மாஸி மீது கிரிமினல் நடவடிக்கை தொடரப்பட வேண்டும். பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கைக்கு அடையாளமாக, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும். இல்லையென்றால் பாஜக தலைமையும் இதற்கு உடந்தை என்றுதான் மக்கள் மன்றம் பொருள்கொள்ள நேரிடும்.

நன்றி: தினமணி (20 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories