TNPSC Thervupettagam

மன்மோகன் சிங்: இந்தியாவின் மீட்பர்

December 30 , 2024 9 days 70 0

மன்மோகன் சிங்: இந்தியாவின் மீட்பர்

  • “ஒரு கருத்தாக்கத்துக்கான காலம் அமைந்துவிட்ட பிறகு, பூமியில் உள்ள எந்தச் சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது” - 1991இல் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டைத்தாக்கல் செய்து ஆற்றிய உரையை இப்படித்தான் தொடங்கினார் மன்மோகன் சிங். பணவீக்கம், பொருளாதார நெருக்கடி என நாடே தள்ளாடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், அன்றைய பிரதமர் நரசிம்ம ராவின் அவசர அழைப்பின் பேரில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற மன்மோகன், இந்தியாவை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைத்தார்.
  • கிழக்​கிந்திய கம்பெனி என்ற பெயரில் வந்து இந்தியாவை நீண்ட காலம் ஆண்ட பிரிட்​டிஷார், நாட்​டின் வளங்​களைச் சுரண்டியதை மறக்காத இந்திய ஆட்சி​யாளர்​கள், அந்நிய முதலீடுகளை அனும​திப்​ப​தைத் தவிர்த்தே வந்தனர். இத்தகைய பின்னணி​யில் நிதி​யமைச்​சரான மன்மோகன், மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப​வும், இந்தியா​வின் பொருளா​தாரச் சிக்​கல்களை மனதில் கொண்​டும் பல்வேறு சீர்​திருத்த நடவடிக்கைகளைத் துணிச்​சலுடன் முன்னெடுத்​தார். 50 கோடிக்​கும் அதிகமான இந்தி​யர்களை வறுமையி​லிருந்து மீட்​டெடுத்த பெருமை மன்மோகனையே சாரும்.

கரைசேர்த்த தன்மானம்:

  • தனது தந்தை​யின் வற்புறுத்​தலுக்கு இணங்கி மருத்​துவப் படிப்​பில் சேர்ந்​தவர் மன்மோகன் சிங். ஆனால், அவருக்கு அதில் விருப்பமே இல்லை. சில மாதங்​களி​லேயே படிப்பை நிறுத்​தி​விட்டு, தந்தை​யின் உலர் பழங்கள் கடையில் வேலைசெய்ய ஆரம்​பித்​தார். ஆனால், குடிக்கத் தண்ணீர் எடுத்​துத் தரவும், தேநீர் வாங்​கிவர​வும் தன்னைப் பணித்​ததைத் தன்மானம் மிக்க மன்மோகனால் தாங்க முடிய​வில்லை.
  • 1948 செப்​டம்​பரில் அமிர்​தசரஸ் இந்துக் கல்லூரி​யில் சேர்ந்​தார். இளம் வயதிலேயே, மக்களின் ஏழ்மை குறித்த சிந்​தனை​யில் ஆழ்ந்த மன்மோகன், பல நாடுகள் ஏழ்மை​யில் உழல, சில நாடு​களில் மட்டும் செல்வம் கொழிப்பது எப்படி என்றும் சிந்​தித்​தார். பொருளா​தாரம் பயின்​றால் இதற்​கெல்​லாம் விடை கிடைக்​கும் என்று யாரோ சொல்ல, பொருளா​தாரப் படிப்​பைத் தேர்ந்​தெடுத்​தார். அந்தப் படிப்பு அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா​வையே கரைசேர்த்​தது.
  • தனது கல்வித் திறனைக் கொண்டே கல்வி உதவித்​தொகை பெற்று ஆக்ஸ்​போர்டு, கேம்ப்​ரிட்ஜ் பல்கலைக்​கழகங்​களில் பயின்றார். கேம்ப்​ரிட்ஜ் பல்கலைக்​கழகத்​தில் பயின்​ற​போது, ஆடம் ஸ்மித் பரிசை வென்றது ஓர் இந்தி​யராக மன்மோக​னின் அரிய சாதனை. பொருளா​தாரப் பேராசிரியர், இந்திய நிதித் துறை​யின் பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர், திட்​டக்​குழுத் துணைத் தலைவர் எனப் பல உயர் பதவிகளை வகித்த பின்னர், நிதி​யமைச்சர் பொறுப்பு அவரைத் தேடி வந்தது வரலாறு. பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்கள் அந்தப் பதவிக்கு வரத் திட்​ட​மிட்ட நிலை​யில், மன்மோகனை நரசிம்ம ராவ் தேர்ந்​தெடுக்கக் காரணம், அவர் துறை​சார் வல்லுநர் என்பது மட்டுமல்ல, கறைபடாத கரங்​களுக்​குச் சொந்​தக்​காரர் என்பதும்​தான்.

மக்கள் நலத் திட்​டங்கள்:

  • 2004 தேர்தல் வெற்றிக்​குப் பின்னர் அமைக்​கப்​பட்ட ஐக்கிய முற்​போக்​குக் கூட்​ட​ணி​யின் பிரதமராக மன்மோகன் சிங்​கைத் தேர்ந்​தெடுத்த சோனியா காந்தி, “மன்​மோக​னின் கரங்​களில் இந்தியா பாது​காப்பாக இருக்​கும்” என்று சொன்​னார். அந்த வார்த்​தைகள் அப்படியே பலித்தன.
  • நிதி​யமைச்​சராக இருந்த​போது பொருளாதார வளர்ச்சி சார்ந்த திட்​டங்​களில் கவனம் செலுத்திய மன்மோகன், பிரதமரான பின்னர் மக்கள் நலத் திட்​டங்​களில் மிகுந்த அக்கறை காட்​டி​னார். ஏழைப் பெண்​களும் ஒடுக்​கப்​பட்ட மக்களும் உள்ளூர் ஆதிக்கச் சாதி​யினரையே சார்ந்து வாழ வேண்​டும் என்று இருந்த நிலையை 2006இல் மன்மோகன் அரசு அமல்படுத்திய ‘100 நாள் வேலைத் திட்​டம்’ அடியோடு மாற்றியது. உலகின் மிகப் பெரிய சமூகப் பாது​காப்புத் திட்டம் என்று போற்​றப்​படும் திட்டம் இது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005), கல்வி உரிமைச் சட்டம் (2009), உணவுப் பாது​காப்புச் சட்டம் (2013) போன்ற சிறப்பான திட்​டங்​களைக் கொண்டு​வந்​தார். நலத்​திட்​டங்கள் சரியாகச் சென்று சேர ஆதார் அட்டை விநி​யோகத்தை அமல்​படுத்​தி​னார். வரிவி​திப்​பில் அவர் கொண்டு​வந்த மாற்றம் நடுத்தர மக்களுக்​குப் பலன் அளித்​தது. 2008இல் அமெரிக்கா பொருளாதார மந்தநிலை​யில் தள்ளாடிய காலத்​தில் இந்தியா​வுக்​குச் சில பாதிப்புகள் ஏற்பட்​டாலும் இந்தியா​வுக்​குப் பெரிய பாதிப்புகள் நேர்ந்​து ​வி​டாமல் மன்மோகன் காப்​பாற்றி​னார்.
  • அவரது இரண்​டாவது ஆட்சிக் காலத்​தின் இறுதி​யில் இந்தியா 2 ட்ரில்​லியன் டாலர் பொருளா​தாரம் கொண்ட நாடு​களின் பட்டியலில் இடம்​பெற்​றது. 2005-06 மற்றும் 2007-08 காலக்​கட்​டங்​களில் இந்தியா​வின் வளர்ச்சி விகிதம் 9%க்​கும் அதிகமாக இருந்​தது. அறிவியல், தொழில்​நுட்​பம், கல்வி ஆகிய​வற்​றைச் சார்ந்த ஏறத்தாழ 50 நிறுவனங்களைத் தொடங்கியவர் மன்மோகன் என அறிவியலாளர்கள் பலர் நினைவு கூர்கின்றனர்.
  • 2006இல் அமெரிக்கா​வுடன் அணுசக்தி ஒப்பந்​தத்​தில் கையெழுத்​திடுவதை எதிர்த்த இடது​சா​ரித் தலைவர்​களைத் தார்​மிகச் சீற்​றத்​துடன் எதிர்​கொண்​டார். 1991ஆம் ஆண்டின் சீர்​திருத்​தங்கள் இந்தியப் பொருளாதார வளர்ச்​சிக்கு வித்​திட்டது போல், அணு ஒப்பந்தம் இந்தியத் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு உறுதுணையாக இருக்​கும் என்று உறுதியாக நம்பி​னார்.
  • அணுசக்​தித் திட்​டங்​களைத் தாண்டி, அமெரிக்கா​வுடனான வர்த்​தகம், முதலீடு எனப் பல வகைகளில் அந்த ஒப்பந்​தத்​தால் இந்தியா​வுக்கு அனுகூலங்கள் ஏற்பட்டன. இடது​சா​ரிக் கட்சிகள் கூட்​ட​ணியி​லிருந்து வெளி​யேறியதும் சமாஜ்​வா​திக் கட்சி​யின் துணை​யுடன் ஆட்சி​யைத் தக்க​வைத்​துக்​கொண்​டார். மக்களைச் சந்தித்​துத் தேர்தல் வெற்றி பெறாத பிரதமர் என்று விமர்​சிக்​கப்​பட்​டாலும் அனைத்​துத் தரப்பு மக்களுக்​குமான திட்​டங்​களைக் கொண்டு​வந்​த​தால் போற்​றப்​பட்​டார். நீண்ட காலமாக அசாமிலிருந்தே மாநிலங்​களவைக்​குத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மன்மோகன், வடகிழக்கு மாநிலங்​களின் வளர்ச்​சிக்கான திட்​டங்​களை​யும் முன்னெடுத்​தார்.

நடைமுறை சார்ந்த அணுகு​முறை:

  • வெளியுறவு விவகாரங்களிலும் நடைமுறைச் சாத்​தியம் கொண்ட அணுகு​முறையைக் கைக்​கொண்​டார். பிரிக்ஸ் அமைப்​பில் இந்தியாவை இடம்​பெற​வைத்​தது, ஜி20 அமைப்​பில் இந்தியா​வின் முக்​கி​யத்து​வத்தை அதிகரித்​தது, அண்டை நாடு​களு​டனான பிணக்கைத் தீர்க்கத் திட்டம் வகுத்​தது, காலநிலை மாற்றம் தொடர்பான இந்தியா​வின் குரலை வலுவாக ஒலிக்கச் செய்தது என மன்மோக​னின் பங்களிப்புகள் முக்​கிய​மானவை. அதிர்ந்து பேசாத தன்மை​யும், ஜனநாயக விழு​மி​யங்​களும் கொண்​டிருந்த மன்மோகன் சிங்கை அவற்​றைக் காரணமாக முன்​வைத்தே பலவீனமான பிரதமர் என்கிற பிம்பம் கட்டமைக்​கப்​பட்​டது.
  • ஆனால், துணிச்சல் மிக்​கவர் அவர். 2008இல் மும்​பை​யில் நடத்​தப்​பட்ட பயங்​கர​வாதத் தாக்​குதலுக்​குப் பின்னர், 2009இல் ரஷ்யா​வில் நடந்த ஷாங்​காய் ஒத்துழைப்பு அமைப்​பின் உச்சி மாநாட்​டில் பாகிஸ்​தான் அதிபர் ஆசிப் அலி சர்தா​ரியைச் சந்தித்த மன்மோகன், “இந்திய எல்லை​யைப் பயங்​கர​வாதச் செயல்​களுக்​குப் பாகிஸ்​தான் பயன்​படுத்தக் கூடாது” என்று வெளிப்​படை​யாகவே எச்சரித்​தார்.
  • “சமகால ஊடகங்​களும் எதிர்க்​கட்​சிகளும் என்னை விமர்​சித்தா​லும் வரலாறு என்னைக் கருணை​யோடு அணுகும்” என்று பேசி​யவர் மன்மோகன். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்​தி​யிருக்​கும் பல தலைவர்​கள், ஒரு காலத்​தில் மன்மோகனை மிகக் கடுமையாக விமர்​சித்தவர்​கள். ஊடகங்​களால் மிகக் கடுமையாக விமர்​சிக்​கப்​பட்​ட​போதும் ஒரு போதும் ஊடகங்களை முடக்​கும் நடவடிக்கை​களில் மன்மோகன் இறங்​கிய​தில்லை.

விட்டுச் சென்ற செய்தி:

  • நாட்​டின் உயர் பதவிகளை வகித்​திருந்​தா​லும் எளிமைப் பண்பை இறுதிவரை மன்மோகன் கடைப்​பிடித்​தார். ஏழ்மையான அவரது பெற்​றோருக்கு, பள்ளி​யில் அவரைச் சேர்த்த​போது அவரது பிறந்த தேதி​கூடச் சரியாக நினை​வில்லை. நினை​வுக்கு வந்த தேதி​யைச் சொல்​லித்​தான் பள்ளி​யில் சேர்த்​தனர். தனது உண்மையான பிறந்த தினம் தெரி​யாது என்ப​தால், தனது பிறந்​த​நாளைக் கொண்​டாடு​வ​தில் அவர் ஆர்வம் செலுத்​தியதே இல்லை.
  • “இந்தியா​வில் ஒருமைப்​பாடு நீடித்​தால், உலக அள​வில் நிகழ்ந்​து​வரும் அரசி​யல், பொருளாதாரச் சிக்​கல்​களுக்கு ​முகங்​கொடுத்து நிச்​சயமாக ​முன்னேற ​முடி​யும்” என்று 2023இல் ஒரு பேட்​டி​யில் மன்​மோகன் குறிப்​பிட்​டிருக்​கிறார். இன்றைய சூழலில், இந்தியா​வுக்கு அவர் ​விட்​டுச்​ சென்​றிருக்​கும்​ மகத்​தான செய்​தி அது​தான்​!

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories