TNPSC Thervupettagam

மயன்மார் உள்நாட்டுப் போர் மாறுமா இந்தியாவின் நிலைப்பாடு?

September 9 , 2024 130 days 212 0

மயன்மார் உள்நாட்டுப் போர் மாறுமா இந்தியாவின் நிலைப்பாடு?

  • இந்தியா தனது எல்லையை ஏழு நாடுகளோடு பகிர்ந்​து​கொள்​கிறது. வடக்கே சீனா, பூடான், நேபாளம்; வடமேற்கே ஆப்கானிஸ்​தான், பாகிஸ்​தான்; கிழக்கே வங்கதேசம், மயன்மார். இவை தவிர கடல் எல்லையைத் தாண்டி, தெற்கே இலங்கையும் மாலத்​தீவும். இந்த ஒன்பது நாடுகளிலும் ஆகக் குறைந்த ஊடக கவனம் பெறுவது மயன்மார்.
  • இவ்வளவுக்கும் ஒரு காலத்தில் இந்தி​யர்கள், குறிப்​பாகத் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த நாடு அது. அந்நாளில் அதன் பெயர் பர்மா. இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் ‘பர்மா காலனிகள்’ இருக்​கின்றன. இப்போதும் சுமார் 10 லட்சம் தமிழர்கள் மயன்மாரில் வாழ்கின்​றனர்.
  • அங்கே மூன்றாண்​டு​களுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று​வரு​கிறது. இதுகாறும் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்​பட்​டிருக்​கின்​றனர்; சுமார் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்​திருக்​கின்​றனர். என்றாலும் மயன்மார் மக்களின் துயரம் பல இந்திய ஊடகங்​களில் பேசுபொருளாக இல்லை. நமது அரசு மயன்மாருக்கு வழங்கும் முக்கி​யத்து​வமும் குறைவு.
  • மயன்மாரில் ராணுவ ஆட்சி நடைபெறு​வதில் எந்தப் புதுமையும் இல்லை. ஆனால், ராணுவ ஆட்சிக்கு எதிராக இப்போது உள்நாட்டுப் போர் நடைபெற்று​வரு​கிறது. அது புதிது. அதுவே கரிசனம் ​மிக்க ஓர் அண்டை நாடாக இந்தியாவின் கவனத்தைக் கோருகிறது. அது ஒரு வரலாற்றுத் தேவையாகவும் மாறிவரு​கிறது.

எழுதிச் செல்லும் ராணுவத்தின் கை:

  • மயன்மார் ராணுவம், தனது அரை நூற்றாண்டு கால ஆட்சியை 2012இல் சற்றே இளக்கியது. பல காலம் சிறையி​லிருந்த தலைவர் அவுங் சான் சுகி விடுதலை​யானார். அவரது தலைமையிலான என்.எல்.டி. எதிர்க்​கட்சி ஆனது. 2015இல் அதுவே ஆளுங்​கட்​சியும் ஆனது.
  • என்றாலும் ராணுவத்தின் மேலாதிக்கம் தொடர்ந்தது. என்.எல்​.டி.யும் ராணுவத்​துக்கு இசைவாகத்தான் ஆட்சி நடத்தியது. வெகுமக்​களின் ஒரே பற்றுக்​கோடாக இருந்த என்.எல்.டி, 2020 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. மக்களிடம் என்.எல்​.டி.க்கு இருந்த செல்வாக்கு ராணுவத்​துக்கு உவப்பாக இல்லை. ஆகவே, அது பிப்ரவரி 2021இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
  • ராணுவ நுகத்​தடிக்குப் பழக்கமான மயன்மார் மக்களை அடக்கி ஆண்டு​விடலாம் என்று ராணுவம் கருதியது. ஆனால், அந்தக் கணக்கு பிசகி​விட்டது. பத்தாண்​டு​களுக்கும் மேலாக மயன்மாரில் வீசிய அரசியல் - பொருளா​தாரச் சுதந்​திரக் காற்றை, அது எவ்வளவு குறைவாக இருந்​தா​லும், இழப்ப​தற்கு மக்கள் சித்தமாக இல்லை. அவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி​னார்கள். தோட்டாக்​களையும் தடிகளையும் ஏவியது அரசு. மக்களின் அகிம்சைப் போராட்டங்கள் ஆட்சி​யாளர்​களிடம் எந்தச் சலனத்​தையும் உண்டாக்க​வில்லை.

விடுதலைக் குழுக்கள்:

  • இந்தச் சூழலில்தான் ஒரு புதிய கூட்டணி உருவானது. மயன்மார் பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு. ‘பாமா’ எனப்படும் பெரும்​பான்மை பர்மிய சமூகத்​தினர் ஐராவதி நதி பாயும் வளமான மையப் பகுதி​களிலும் தென் பகுதி​களிலும் வசிக்​கிறார்கள். இவர்கள் பௌத்த மதத்தினர். மயன்மாரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுபான்மை தேசிய இனத்தவர் உள்ளனர். இவர்களில் ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின், கைன், மான் ஆகிய ஏழு பிரிவினர் முதன்மையானவர்கள்.
  • இவர்களில் பிரிவினை கோரும் பல ஆயுதக் குழுக்​களும் உண்டு. தேர்தல் ஜனநாயகத்தைப் பின்பற்றும் கட்சிகளும் உண்டு. பெரும்​பான்மை பாமா இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் எப்போதும் இணக்கம் இருந்​த​தில்லை. எனில், இப்போது முதல் முறையாகப் பொது எதிரியான ராணுவ ஆட்சிக்கு எதிராக இரு சாராரின் அமைப்பு​களும் இணைந்திருக்கின்றன. இந்தக் கூட்ட​ணிதான் தேசிய ஐக்கிய முன்னணி (National United Government-NUG). இது மயன்மாருக்கு வெளியே ஓர் அரசாங்​கத்​தையும் நிறுவி​யிருக்​கிறது. இதன் பல்வேறு விடுதலைப் படைகள் கூட்டாக மக்கள் பாதுகாப்புப் படை (People’s Defense Forces-PDF) என்று அறியப்​படு​கிறது.
  • பி.டி.எஃப்-இன் அங்கமான சிறுபான்மை இனத்தவரின் மூன்று விடுதலைக் குழுக்கள் ஒன்றிணைந்து 2023 அக்டோபர் 27 அன்று அரசப் படைகளை எதிர்​கொண்டன. வெற்றியும் பெற்றன. பல ராணுவத் தளங்களையும் ஆயுதங்​களையும் கைப்பற்றின. இந்தத் ‘தாக்​குதல் 1027’ உள்நாட்டுப் போரின் போக்கையே மாற்றி​விட்டது. தொடர்ந்து சிறுபான்​மை​யினர் வசிக்கும் எல்லைப்புற மாநிலங்​களில் வெற்றி ஈட்டிய பி.டி.எஃப், இப்போது மையப் பகுதி​களிலும் முன்னேறி வருகிறது. சமீபத்​தியத் தரவுகளின்படி நாட்டின் 60% நிலப்​பரப்பை பி.டி.எஃப். கைப்பற்றி​யிருக்​கிறது.
  • இதன் பொருள் ராணுவ ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்து​விடும் என்பதல்ல. இப்போதும் அரசப் படைகளுக்​குத்தான் ஆயுத பலம் அதிகம். அதன் விமானப் படையும் வலியது. ராணுவத்​துக்குக் கட்டாயமாக ஆளெடுப்பும் நடக்கிறது. கூடவே இந்தியா, சீனா போன்ற நாடுகள் மயன்மார் அரசுக்குத் தாராளமாக ஆயுதங்களை வழங்கிவரு​கின்றன. சொந்த நாட்டின் மக்களைக் கொல்லவே இந்த ஆயுதங்கள் பயன்படுத்​தப்​படு​கின்றன.

கூடா நட்பு:

  • மயன்மார் அரசோடு இந்தியா​வுக்கு நல்லுறவு இருக்​கிறது. ஆனால், மக்களின் ஆதரவை இழந்து​வரும் ஆட்சி​யாளர்​களோடு மட்டும் உறவைப் பேணுவது, ஆட்சி மாற்றம் ஏற்படும்போது எதிர் விளைவுகளை உண்டாக்​கும். சமீபத்திய எடுத்​துக்​காட்டுகள் மாலத்​தீவும் வங்கதேச​மும்.
  • நவம்பர் 2023இல் மாலத்தீவில் தேர்தல் நடந்தது. இந்தியாவோடு இணக்கமாக இருந்த இப்ராகிம் சோலி தோல்வியடைந்​தார். இந்தியா​வுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்ட முகமது முய்சு மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். உடன், மாலத்​தீவில் நிறுத்​தப்​பட்​டிருந்த இந்தியத் துருப்புகள் வெளியேறு​வதற்குக் கெடு விதித்​தார். அவரது அமைச்​சர்கள் இந்தியா​வுக்கு எதிராகப் பேசினர். இப்போது இந்திய அரசின் வெளியுறவுத் துறை நிலைமையைச் சீராக்கப் பெருமுயற்சி எடுத்து​வரு​கிறது.
  • போலவே, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவை ஆதரித்தது இந்திய அரசு. அவரது எதேச்​ச​தி​காரம் இந்தியா வழங்கிவந்த ஆதரவுக்குத் தடையாக இல்லை. இப்போது ஹசீனா பதவி இழந்து​விட்​டார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்​திருக்​கிறது. அதில் பொறுப்பு வகிக்கும் சிலரே இந்தியா​வுக்கு எதிராகப் பேசுகிறார்கள். இனி, புதிய ஆட்சி​யாளர்​களுடன் நல்லுறவை வளர்த்​துக்​கொள்ள இந்தியா மெனக்கெட வேண்டும்.
  • அதாவது, மாலத்​தீ​விலும் வங்கதேசத்​திலும் செல்வாக்கை இழந்து​கொண்​டிருந்த ஆளும் வர்க்​கத்​துடன் இந்திய அரசு நெருக்கமான உறவைப் பேணியது. அதே வேளையில், பிற கட்சிகளுடனும் இயக்கங்​களு​டனும் உறவை வளர்த்​துக்​கொள்ள​வில்லை. இதனால், ஆளும் கட்சி மாறிய​வுடன் அதற்கு எதிரான மனப்போக்கு, இந்தியா​வுக்கு எதிரான மனப்போக்காக மாறுகிறது. இதே சிக்கல் வருங்​காலத்தில் மயன்மாரிலும் வரலாம். அதை எப்படித் தவிர்க்​கலாம்?

நான்கு கட்டளைகள்:

  • முதலா​வதாக, மயன்மாரின் ராணுவ அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்​தலாம். அடுத்து, இந்த உள்நாட்டுப் போரில் பாதிக்​கப்​படுவோர் அண்டை மாநிலங்களான மணிப்​பூருக்கும் மிசோர​முக்கும் தஞ்சம் நாடி வருகிறார்கள். இந்த அகதிகளிடத்தில் இந்திய அரசு கரிசனத்​துடன் நடந்து​கொள்​ளலாம். இவை இரண்டும் இந்தியாவின் தார்மிக மதிப்பை உயர்த்​தும்.
  • மூன்றாவதாக, என்.யூ.ஜி. அமைப்புடன் இந்தியா தொடர்பை ஏற்படுத்​திக்​கொள்​ளலாம். இந்த விஷயத்தில் சீனா கவனமாக இருக்​கிறது. மயன்மாரின் ராணுவ ஆட்சிக்குப் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும் ராணுவத் தளவாடங்​களையும் சீனா வாரி வழங்கி​யிருக்​கிறது. அதே வேளையில், என்.யூ.ஜி.​யுடனும் தொடர்பில் இருக்​கிறது. சமீபத்தில் ஒரு தற்காலிகப் போர் நிறுத்​தத்​துக்காக இரண்டு தரப்பு​களுக்கும் இடையே சீனாதான் பேச்சு​வார்த்தை நடத்தியது. வருங்​காலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் புதிய ஆட்சி​யாளர்​களுடன் இணங்கிப்​போவது சீனாவுக்கு எளிதாக இருக்​கும். இந்தியா​வுக்குக் கடினமாக இருக்​கும்.
  • நான்காவதாக, சீனாவால் செய்ய முடியாத ஒன்றை இந்தியாவால் செய்ய முடியும். தற்போதைய மயன்மார் அரசமைப்பில் பெரும்​பான்மை பாமா இனத்தவரிடம்தான் அதிகாரம் குவிந்​திருக்​கிறது. என்.யூ.ஜி. ஆட்சிக்கு வந்தால் எல்லாச் சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டிவரும். கூட்டாட்சித் தத்து​வத்தை அரசமைப்பின் ஆதாரக் கூறுகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இந்தியா​வால், புதிய மயன்மாருக்கு ஒரு வழிகாட்​டியாக இருக்க முடியும்.
  • இந்த நான்கு கட்டளைகளை இந்திய அரசு பரிசீலித்து, அவற்றைப் படிப்​படியாக நடைமுறைப்​படுத்​தினால், இந்தியாவின் மதிப்பு மயன்மார் மக்களிடத்தில் மட்டுமல்ல, பிற அண்டை நாடுகளிடத்​திலும் உயரும். பன்னாட்​டள​விலும் இந்தியா கவனம் பெறும். இவை ராஜீயரீ​தி​யிலும் பயன் தரும்; அறம் சார்ந்த நடவடிக்​கைகளாகவும் அமையும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories