- சமீப காலமாக, மரண தண்டனை குறித்த விவாதங்கள் அதிக அளவில் நிகழ்ந்துவருகின்றன. கொடிய குற்றங்களை ஒழிப்பதற்கு மரண தண்டனை அவசியம் என ஒரு தரப்பினரும், இத்தகைய தண்டனை கொடூரமானது, மனிதாபிமானமற்றது என மற்றொரு தரப்பினரும் வாதிடுகின்றனர். இன்றைய நாகரிகச் சமூகத்தில் மரண தண்டனைக்கு இடமில்லை என்பது அதற்கு எதிரானவர்களுடைய வாதத்தின் அடிப்படை சாரம்.
- இந்தச் சூழலில்தான், கடந்த மார்ச் மாதம் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக, வலி குறைவான, கண்ணியமான, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று முறைகள் குறித்த தரவுகளை வழங்குமாறு மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
- கேள்விக்கு உள்ளாகும் செயல்முறை: தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது அரசமைப்புக்கு உள்பட்டது என்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 21 அன்று விசாரணைக்கு வந்தது. மரண தண்டனை என்பது அரசமைப்புக் கொள்கை சார்ந்தது என்றும், அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுவதாகவும் அரசு வாதிட்டது. மரண தண்டனையை வலியுறுத்தும் அரசமைப்பை இந்த வழக்கு கேள்விக்கு உள்படுத்தவில்லை; மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறை மட்டுமே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
- தூக்குத் தண்டனைக்கு மாற்றாக மனிதாபிமானம் கொண்ட, விரைவான, கண்ணியமான மாற்று முறையைக் கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது; மரணத்தைத் துரிதப்படுத்தும் விஷ ஊசி போன்ற பிற முறைகளுடன் ஒப்பிடும்போது தூக்கிலிடுவது கொடூரமானது, கண்ணியமற்றது என்றும் வாதிடப்பட்டது.
- தூக்குத் தண்டனையை ஆதரித்து மத்திய அரசு 2018இல் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் துப்பாக்கிச் சூடு, விஷ ஊசி மருந்துகளுடன் ஒப்பிடும்போது தூக்கிலிடுவது மனிதாபிமானமற்றதோ, கொடூரமானதோ அல்ல என்று தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
- இருப்பினும், தற்போதைய வழக்கில் தூக்குத் தண்டனைக்குப் பதிலான மாற்று முறைகள் குறித்த தரவுகளை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அரசிடம் கேட்டுள்ளது. முக்கியமாக, தூக்கிலிடும் முறையை மறுபரிசீலனை செய்ய நிபுணர் குழுவை அமைக்கவும் அது பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் மரண தண்டனை:
- இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சில குற்றங்களுக்கு மரண தண்டனை ஒரு சட்டபூர்வத் தண்டனையாகவே இன்றும் உள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 354 (5), மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை அவர் இறக்கும்வரை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
- எந்தக் குற்றகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பது இந்திய தண்டனைச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. கொலை (பிரிவு 302), கொலையுடன் கொள்ளையடித்தல் (பிரிவு 396), கிரிமினல் சதி (பிரிவு 120 பி), இந்திய அரசுக்கு எதிராகப் போரிடுதல் அல்லது அவ்வாறு செய்ய முயற்சித்தல் (பிரிவு 121), கலகத்தை உருவாக்குதல் (பிரிவு 132) உள்ளிட்ட குற்றங்கள் அதில் அடங்கும்.
- ஆனால், நடைமுறையில் குற்றத்தின் அளவு கடுமையான உச்சபட்சத் தண்டனைக்கு உகந்தது என்று நீதிபதி சந்தேகத்துக்கு இடமின்றிக் கருதும் வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது. குற்றத்தின் தன்மை, தீவிரம் உள்ளிட்ட பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு மரண தண்டனை வழங்குவதற்கான முடிவை நீதிபதி எடுக்கிறார்.
- இருப்பினும், இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுவது எல்லா தருணங்களிலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சில சந்தர்ப்பங்களில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படலாம் அல்லது அரசமைப்பின் 72ஆவது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் குற்றவாளிக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படலாம்.
அகற்றியுள்ள நாடுகள்
- 2021 நிலவரப்படி, உலகின் பல நாடுகளில் மரண தண்டனை இன்னமும் நடைமுறையில் இருக்கிறது என்று அம்னஸ்டி இண்டர்நேஷனல் தெரிவிக்கிறது. ஆசியாவில் சீனா, இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் மரண தண்டனை மிகவும் பரவலாக உள்ளது.
- ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மரண தண்டனை என்பது அரிதானது. பெரும்பாலான நாடுகள் அதை ஒழித்துவிட்டன. இருப்பினும் பெலாரஸ், கானா, கியூபா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மரண தண்டனை இன்றும் நடைமுறையில் உள்ளது.
- சில நாடுகள் மரண தண்டனையைத் தொடர்ந்து அமல்படுத்தியபோதிலும், சமீப ஆண்டுகளில் மரண தண்டனையை முற்றிலும் நீக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகெங்கிலும் உள்ள 110 நாடுகள் மரண தண்டனையை அகற்றியுள்ளன. சியரா லியோன், பபுவா நியூகினி, ஈக்வடோரியல் கினி ஆகியவை இந்தப் பட்டியலில் மிகச் சமீபத்தில் சேர்ந்துள்ளன.
நன்றி: தி இந்து (12 – 04 – 2023)