TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்ட அரிசி: ஆய்வுக் களங்களிலும் கண்காணிப்பு தேவை

October 26 , 2021 1124 days 618 0
  • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குக் கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியில் 500 டன் மரபணு மாற்றப்பட்ட அரிசி என்று தெரியவந்திருப்பதை அடுத்து, அதற்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது இந்திய வேளாண் சந்தைக்குப் பெரும் சவாலைத் தோற்றுவித்துள்ளது.
  • ஏற்கெனவே 2012-ல் இதேபோல் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி, மரபணு மாற்றம் செய்யப்பட்டது எனக் கண்டறியப்பட்டது. மீண்டும் அதே குற்றச்சாட்டை இந்தியா எதிர்கொண்டுள்ளது.
  • இந்தியாவில் பருத்தி தவிர்த்து, மற்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வணிக நோக்கில் பயிரிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, உலகச் சந்தையில் இந்திய அரிசியின் மதிப்பைக் குலைப்பதற்கான முயற்சி இது என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது நடைமுறையில் உள்ள அனுமதியும்கூட ஆய்வுகள் செய்வதற்கு மட்டுமே. அவ்வாறு ஆய்வுக் களங்களில் விளைவிக்கப்பட்ட பயிர்கள், ஒருவேளை சந்தைக்கும் அனுப்பப்படுகின்றன என்றால், உணவுச் சங்கிலியில் அவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
  • உணவுப் பயிர்களில் அவற்றின் சத்துகளை அதிகப்படுத்தும் வகையில், மரபணு மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து, சுற்றுச்சூழலியர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
  • நீண்ட கால அளவில் மனித உடலில் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இன்னும் தெளிவில்லாத நிலையில், அவற்றை உணவாகப் பரிந்துரைப்பது ஆபத்தானது என அவர்கள் வாதிடுகின்றனர்.
  • இந்தியாவில் தற்போது மரபணு மாற்றப்பட்ட (பிடி) பருத்தி மட்டுமே பயிரிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது என்பதாலேயே அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஆனால், இன்னும் பயிரிடுவதற்கு அனுமதிக்கப்படாத களைக்கொல்லிகளைத் தாங்கும் மரபணு மாற்றப்பட்ட (ஹெச்டி பிடி) பருத்தியையும்கூட மஹாராஷ்டிர விவசாயிகள் பெருமளவில் பயிரிட்டுவருகின்றனர். அதுபோலவே, மரபணு மாற்றப்பட்ட கத்திரி, சோயா பீன்ஸ் ஆகியவையும் அங்கு பயிரிடப்படுகின்றன.
  • சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விநியோகம் தடுக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு விதை நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன.
  • சட்டவிரோத விதைகள் விநியோகத்தைத் தடுப்பதில் மாநில அரசுகளுக்கும் பெரும் பங்கு உள்ளது என்றபோதும் அவை போதிய கவனம் செலுத்தவில்லை. மேலும், வேளாண் தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகளும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விரும்பத் தொடங்கியுள்ளனர்.
  • எனினும், பருத்திச் சாகுபடியில் மட்டுமே மரபணு மாற்றப் பயிர்கள் பயன்பாட்டில் உள்ளதாக எண்ணப்பட்டுவந்த நிலையில், அத்தொழில்நுட்பம் இந்தியர்களின் பிரதான உணவுப் பொருட்களில் ஒன்றான அரிசியிலும் கலப்பதற்கு வாய்ப்புள்ளதையும் உணர முடிகிறது.
  • மரபணு மாற்றப்பட்ட அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதை மட்டுமல்ல, இந்திய வேளாண் சந்தையில் விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • ஒருவேளை, ஆய்வுக் களங்களில் பரிசோதிக்கப்படும் பயிர்களால் அவற்றின் அருகிலுள்ள விவசாய நிலங்களின் பயிர்களின் மரபணுக்களும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது எனும் பட்சத்தில், மரபணு ஆய்வுகளுக்கான அனுமதியையும்கூட மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories