TNPSC Thervupettagam

மருத்துவத்துக்கு வலு சேர்க்கிறதா பட்ஜெட்?

August 1 , 2024 120 days 142 0
  • இந்​தியாவின் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நாடாளுமன்​றத்தில் தாக்கல் செய்யப்​பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவிப்பு​களும், அரசின் செலவைக் குறைக்கும் முன்னெடுப்பு​களும் இந்த பட்ஜெட்டில் அதிகம் தெரிகின்றன. அதே வேளையில், மிகவும் எதிர்​பார்க்​கப்பட்ட பொதுச்​சமூகத்தின் ஆரோக்​கியம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் ஓரங்கட்டப்​பட்டுள்ளன.
  • பொதுவாக, நாட்டில் பொதுச் சுகாதார வளர்ச்சி இல்லாமல் பொருளாதார வளர்ச்​சியைக் காண்பது கடினம். இந்த ஆண்டின் பட்ஜெட், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்​துவதற்கும் பாதுகாப்​பதற்கும் மக்களின் ஆரோக்​கியத்தை ஒரு முக்கிய முதலீடாக அங்கீகரிக்கும் என்றும், நாட்டின் சுகாதார அமைப்புகளை வலுப்​படுத்​துவதற்கு மேம்பட்ட அளவில் நிதியைக் கொடுக்கும் என்றும் பெரிதும் எதிர்​பார்க்​கப்​பட்டது.
  • ஆனால், பொருளாதார வளர்ச்​சிக்கு நெம்புகோலாக இருக்கும் மருத்​துவத் துறையைக் கட்டி எழுப்​புவதற்கான பெரிய திட்டங்கள் எதுவும் இதில் இல்லை என்பது ஏமாற்​றமளிக்​கிறது. ஏற்கெனவே, கோவிட்-19 தொற்றுநோய், இந்தியப் பொதுச் சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்​களையும், பொதுச் சுகாதார நெருக்​கடிகளை எதிர்​கொள்​வதில் உள்ள பலவீனத்​தையும் தெளிவாகக் காண்பித்​துள்ளது. இதிலிருந்து இந்தியா இன்னும் பாடம் கற்றுக்​கொள்​ளவில்லை என்பதையே இந்த பட்ஜெட் சுட்டிக்கா​ட்டுகிறது.

விரிவான அறிவிப்புகள் இல்லை!

  • 2024 இடைக்கால பட்ஜெட்டில், கர்ப்​பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்​பதற்காக 9-14 வயதுக்​குள்பட்ட சிறுமிகளுக்கு ‘ஹெச்​பிவி’ (HPV) தடுப்பூசி போடுவதை அரசு ஊக்கு​விக்கும் என்று அறிவிக்​கப்​பட்டது. வழக்கமான தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்தைப் பரவலாக்க ‘யூ-வின்’ (U-WIN) தளத்தை உருவாக்​கவும், ஆஷா (ASHA) பணியாளர்​களையும் அங்கன்​வாடிப் பணியாளர்​களையும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாகச் சேர்க்​கவும் அதில் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், புதிய பட்ஜெட்டில் இவை குறித்து விவரிக்​கப்​படவில்லை. இவற்றுக்கான நிதி ஒதுக்​கப்​பட்டதாகவும் தெரியவில்லை.
  • நாட்டில் புதிய மருத்​துவக் கல்லூரிகள் அதிகம் திறக்​கப்​படும் என்று பொதுவாக அறிவிக்​கப்​பட்டிருந்​தாலும், அவற்றின் உள்கட்டமைப்பை வலுப்​படுத்​தவும், அங்கு பல அடுக்கு சார்ந்த திறமையுள்ள மருத்துவ மனித வளத்தைப் பெருக்​கவும், ஆய்வுக்கூட வசதிகளைக் கூட்டவும் வழிமுறைகள் சொல்லப்​படவில்லை.

சுகாதாரப் பணிக்கான நிதியில் சரிவு:

  • நாட்டில், பொதுச் சுகாதாரப் பலன்களை மேம்படுத்த ஆரம்பச் சுகாதாரத்தில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது. மார்ச் 2022இல், சுகாதாரம் - குடும்ப நலன் தொடர்பான நிலைக்​குழு, தேசியச் சுகாதாரப் பணிகள் கழகத்தின் (National Health Mission) அதிக அளவிலான பயன்பாட்டைக் கருத்​தில்​கொண்டு, ஆரம்பச் சுகாதாரத்து​க்கான நிதி ஒதுக்​கீட்டை அதிகரிப்​பதற்குப் பரிந்துரைத்தது.
  • காரணம், பலதரப்பட்ட தேசியச் சுகாதாரத் திட்டங்கள் தேசியச் சுகாதாரப் பணிகள் கழகத்தின் கீழ்தான் செயல்​படுத்​தப்​படுகின்றன. உதாரணமாக, 2025க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்​கவும், குழந்தை இறப்பு விகிதம் (IMR), ரத்தசோகையின் பாதிப்பு போன்றவற்றைக் கட்டுப்​படுத்​தவும் இக்கழகம் குறிப்​பிட்ட இலக்கை நிர்ணயித்​துள்ளது. அவற்றின் எல்லைகளைத் தொட இன்னும் சில ஆண்டுகளே இருக்கும் நிலையில், இந்த இலக்குகள் இன்னும் எட்டப்​படவில்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.
  • இக்கழகம் 1,000 உயிருள்ள பிறப்பு​களுக்கு 25க்கும் குறைவான இறப்புகளே இருக்க வேண்டும் என்னும் இலக்கை நிர்ணயித்​துள்ள நிலையில், சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 1,000 உயிருள்ள பிறப்பு​களுக்கு 28 இறப்புகள் ஏற்படுவதாக மதிப்​பிடப்​பட்டுள்ளது. 5ஆவது தேசியக் குடும்பநல ஆய்வின்படி (NFHS-5) 2019-21இல் மட்டும் 15 முதல் 49 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 53% பேர் ரத்தசோகையால் பாதிக்​கப்​பட்டுள்​ளனர்.
  • பெண்களிடம் காணப்​படும் ரத்தசோகையும், ஊட்டச்​சத்துக் குறைவும் பொது ஆரோக்​கியத்தின் முக்கியக் குறியீடுகளாகும். ஏனெனில், இவை பெண்கள் மட்டுமல்​லாமல், அவர்கள் குழந்தை​களின் ஆரோக்​கியமும் பாதிக்​கப்​படுவதைக் குறிக்​கின்றன. இந்தப் பாதிப்புகளை ஆரம்பச் சுகாதார நிலையங்​களில், முதன்மைப் பராமரிப்​பிலேயே கவனித்துக் களைந்துவிட முடியும். போதுமான நிதியும் மருத்துவ வளமும் மட்டுமே தேவை!
  • இந்த நிலையில், சுகாதாரம் - குடும்ப நலன் தொடர்பான நிலைக்​குழுவின் பரிந்துரையைப் பரிசீலிக்காமல், இந்த பட்ஜெட்டில் ஒட்டுமொத்தச் சுகாதாரத் துறை அமைச்​சகத்து​க்குக் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்​கியதைவிட 1.98 சதவீதமும், தேசியச் சுகாதாரப் பணிகள் கழகத்துக்கு 1.16 சதவீதமும், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்துக்கு 1.4 சதவீதமும்தான் அதிகமாக நிதி ஒதுக்​கப்​பட்டுள்ளது.
  • உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்றும், PMJAYயின் நோக்கத்​தின்படி, ஒவ்வொரு இந்தியரும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மூலம் பாதுகாக்​கப்பட வேண்டும் என்ற இலக்கை அடைய முடியாது என்றும் மருத்​துவத் துறைத் திட்டப் பணி ஆளுமைகள் கருத்துத் தெரிவித்​துள்​ளனர்.

என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன?

  • இந்த பட்ஜெட்டில் வரவேற்​கப்பட வேண்டிய அம்சம், டிரஸ்டுஜுமாப் (Trastuzumab), துர்வாலுமாப் (Durvalumab), ஒசிமெர்​டினிப் (Osimertinib) ஆகிய மூன்று முக்கியப் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்​கப்​பட்டிருப்​பதுதான். டிரஸ்டுஜுமாப் மருந்தின் ஆண்டு வருவாய் ரூ.276 கோடி.
  • துர்வாலுமாபின் ஆண்டு வருவாய் ரூ.28.8 கோடி. ஒசிமெர்​டினிபின் ஆண்டு வருவாய் ரூ.52.26 கோடி. இந்த அளவுக்கு அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்​திருப்பது ஓர் ஆக்கபூர்வமான முன்னெடுப்​பாகக் கருதப்​படுகிறது. இந்தியாவில் புற்றுநோய்ச் சிகிச்​சைக்கான மருந்துச் செலவு பல லட்சங்​களைத் தாண்டுகிறது. ஆண்டுக்குச் சுமார் ஒரு லட்சம் நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் தேவைப்​படுகின்றன.
  • இந்தச் சூழலில் ஒரு மருந்துக் குப்பிக்கு ரூ.16,000 வரை விலை குறைகிறது என்பது பயனாளிகளுக்குப் பொருளாதாரச் சுமையைக் கொஞ்சமாவது குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. புற்றுநோய்க்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்து​க்​கொள்ள அவர்களுக்கு இது உதவக்​கூடும்.
  • மேலும், மருந்துத் தொழிலுக்கு ரூ.2,143 கோடி மதிப்​பீட்டில் உற்பத்தி - இணைக்​கப்பட்ட ஊக்கத்​தொகைத் திட்டமும் (Production Linked Incentive Scheme – PLI) அறிவிக்​கப்​பட்டுள்ளது. இது உள்நாட்டு மருந்து உற்பத்தித் திறன்களை மேம்படுத்த உதவலாம் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.
  • அடுத்​ததாக, எக்ஸ்ரே குழாய்கள், அவற்றின் பாகங்கள் மீதான தனிப் பயன் வரி விகிதங்​களும் இந்த பட்ஜெட்டில் குறைக்​கப்​பட்டுள்ளன. இந்தத் திருத்​தப்பட்ட வரி விகிதங்கள், மலிவு விலையில் எக்ஸ்ரே குழாய்ப் பாகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய சாத்தியம் உண்டு. இது எக்ஸ்ரே இயந்திரத் தொழிலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்​தும்.
  • மேலும், இந்த மாற்றம் உள்நாட்டு மருத்​துவச் சாதனங்​களின் உற்பத்தித் துறையை மேம்படுத்​துவதற்​கும், பயனாளியின் சுகாதாரச் செலவுகளைக் குறைப்​பதற்கும் உதவலாம். இது போன்ற விலைக் குறைப்பு நடவடிக்​கைகள் இன்னும் பலதரப்பட்ட உயிர் காக்கும் மருந்துகளுக்கும் நவீன மருத்​துவச் சாதனங்​களுக்கும் தேவைப்​படுகின்றன என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

என்ன செய்யலாம்?

  • பொதுச் சுகாதாரத்து​க்கான அரசின் ஒட்டுமொத்த செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது 2.5% ஆக இருக்க வேண்டும் என்று தேசியச் சுகாதாரக் கொள்கை - 2017 முன்மொழிந்தது.
  • இது இன்னும் எட்டப்​படவில்லை என்பது பெருங்​குறை. ‘லான்​செட்’ அறிவிப்​பின்படி, அமெரிக்கா (22.4%), இங்கிலாந்து (19.7%), ஜெர்மனி (20.1%), ரஷ்யா (10.2%), பிரேசில் (10.5%), தென்னாப்​ரிக்கா (15.3%), மலேசியா (8.5%) போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும்​போது, இந்தியாவின் சுகாதாரத்து​க்கான ஒதுக்கீடு (1.2%) மிகமிகக் குறைவு.
  • பசித்து அழும் குழந்தை​க்குச் சோறு தர வேண்டுமே தவிர, சோளப்பொரி கொடுத்தால் பிரச்சினை தீராது. மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்​தில்​கொண்டு, பட்ஜெட்டில் அரசின் மருத்​துவச் செலவினத்தை உயர்த்​துவது, முதன்மைச் சுகாதாரப் பராமரிப்புக்கு முக்கியத்​துவம் கொடுப்பது உள்​ளிட்ட சீர்​திருத்​தங்களை மருத்​துவத் துறையினர் உடனடியாக எதிர்​பார்க்​கின்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories