TNPSC Thervupettagam

மருத்துவத் தலைநகரம்

August 17 , 2024 103 days 161 0

மருத்துவத் தலைநகரம்

  • உணவு, பண்பாடு சார்ந்து சென்னைக்குப் பல சிறப்புகள் இருந்தாலும் மருத்துவத் துறையில் இந்நகரம் பெற்றிருக்கும் அங்கீகாரம் பிரம்மாண்டமானது. இந்தியாவின் பிற நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையின் மருத்துவ வரலாறு நெடிய பாரம்பரியத்தையும் நவீன அணுகுமுறையையும் ஒருங்கே கொண்டிருக்கிறது.
  • இதனால்தான் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவச் சிகிச்சைக்காகப் பலரும் சென்னைக்குப் பயணப்படுகின்றனர். மருத்துவச் சேவையில் சென்னை செழித்திருப்பதில் அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பு முக்கியமானது.

பழமையான கண் மருத்துவமனை:

  • உலகின் முதல் கண் மருத்துவமனையான ‘மூர்ஃபீல்ட்ஸ்’ 1809ஆம் ஆண்டு லண்டனில் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இதே போன்றதொரு கண் மருத்துவமனையை மதராஸ் மாகாணத்திலும் உருவாக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். அதன்படி, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த மருத்துவர் ராபர்ட் ரிச்சர்ட்சன் ராயப்பேட்டையில் மெட்ராஸ் கண் மருத்துவனையை 1819 இல் நிறுவினார்.
  • அந்த வகையில் உலகின் இரண்டாவது பழமையான கண் மருத்துவமனை இது. பின்னர் இட நெருக்கடி காரணமாக எழும்பூர் பகுதிக்கு இம்மருத்துவமனை மாற்றப்பட்டது. இந்தியாவில் முதல் கண் வங்கி, 1948இல் இங்கேதான் உருவாக்கப்பட்டது. ‘Madras Eye ’ பாதிப்பு எழும்பூர் கண் மருத்துவமனையில்தான் முதல் முதலாகக் கண்டறியப்பட்டது.

பெண்களுக்காக...

  • பெண்களுக்காகப் பெண்களே மருத்துவச் சேவை அளிக்க தொடங்கப்பட்ட மருத்துவமனை ‘அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை’. சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை உருவாக்கப் பட்டதற்கு ஆங்கிலப் பெண் ஒருவரே ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார். அவர், மேரி ஆன்.
  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய மதராஸில் இயங்கிவந்த பெரும்பாலான மருத்துவமனைகளில், ஆண்களே மருத்துவர்களாக இருந்தனர். அவர்களிடம் சிகிச்சை பெற இந்தியப் பெண்களிடம் தயக்கம் இருந்தது. இதன் காரணமாக நிறைய பிரசவ மரணங்கள் நிகழ்ந்தன.
  • இதைக் கேள்விப்பட்ட மேரி ஆன், பெண் மருத்துவர்கள் பணிபுரியும் மருத்துவமனையை உருவாக்க நினைத்தார். மருத்துவம் பயின்று இந்தியா திரும்பிய அவரது முயற்சியால் 1885இல் கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை நிறுவப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்னர்வரை விக்டோரியா மருத்துவமனை என்றே இது அழைக்கப்பட்டது.
  • நூறாண்டுகளாகச் சிறப்பான மகப்பேறு சிகிச்சையை அளிக்கும் இம்மருத்துவமனையில் மகப்பேறு, மகளிர் நோயியல் மட்டுமன்றி, மகளிர் சிறப்பு சறுநீரியல், குழந்தை நலம், பொது மருத்துவம், அறுவைசிகிச்சை, பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை சிகிச்சை போன்ற பல பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம், தாய் சேய் நல மையம், தாய்ப்பால் வங்கி போன்றவையும் இம்மருத்துவமனையில் செயல்பட்டுவருகின்றன.

முதல் நவீன மருத்துவமனை:

  • ஸ்டான்லி மருத்துவமனை 200 ஆண்டுகள் பழமை யானது என்றாலும், இம்மருத்துவமனை 1938ஆம் ஆண்டில் தான் முறைப்படி நிறுவப்பட்டது. 1781இல் மதராஸில் கொடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் உணவில்லாமல் மடிந்துகொண்டிருந்தனர்.
  • அந்தத் துயர நிலையைப் போக்க ஸ்டான்லி மருத்துவமனை அமைந்துள்ள இடத்தில்தான் ஏழை எளிய மக்களுக்குக் கஞ்சித் தொட்டி அமைத்து உணவு வழங்கப்பட்டது. நோய்வாய்ப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பின்னாளில் அதே இடத்தில் சிறிய அளவிலான மருத்துவமனையை ஆங்கிலயர்கள் தொடங்கினர். அந்த வகையில் சென்னை மாநகரின் முதல் நவீன மருத்துவமனை இதுவே
  • கஞ்சித் தொட்டி இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட மருத்துவமனை என்பதால் சாமானிய மக்கள் ‘கஞ்சித் தொட்டி மருத்துவமனை’ என்றே அந்தக் காலத்தில் அழைத்தனர். 1938இல் இம்மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டது.
  • இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை உருவாக்கிய பெருமை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உண்டு. நாட்டின் முதல் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை உள்படப் பல்வேறு சிறப்புமிக்க அறுவை சிகிச்சைகளை ஸ்டான்லி மருத்துவமனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

தெற்காசியாவின் பெத்லகேம்:

  • உடல் நல ஆரோக்கியம் மட்டுமல்ல, மக்களின் மன நல ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் சென்னை முன்னோடியாக இருந்து வருகிறது. மனநலத்தைப் பற்றிக் கடந்த சில ஆண்டுகளாகத்தான் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், 200 ஆண்டுகளுக்கு முன்னரே மன நலத்திற்கெனக் கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ மனை அமைக்கப்பட்டது.
  • 1871இல் நிறுவப்பட்ட இம்மருத்துவமனையில் மொழிவாரி மாநிலங்களுக்கு முன்னர்வரை தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து நோயாளிகள் சிகிச்சைபெற்று வந்தனர். தற்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மன நலப் பாதிப்பு, மூளை வளர்ச்சி பாதிப்புக்காக மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர்.
  • லண்டனில் அமைந்துள்ள பெத்லகேம் ராயல் மருத்துவமனை மனநல சிகிச்சையில் உலகளவில் பிரசித்தி பெற்றது. பெத்லகேம் அளவு தரமான சிகிச்சையை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையும் வழங்குவதால், இம்மருத்துவமனை ‘தெற்காசியாவின் பெத்லகேம்’ என்று மருத்துவ நிபுணர்களால் அழைக்கப்படுகிறது. நோயாளிகளின் மனநலனைக் காக்கப் பல்வேறு பயிற்சிகள் (யோகா, மூச்சுப்பயிற்சி) வழங்கப்படுகின்றன.
  • மனநலனை மீட்டெடுக்கும் பயிற்சிகளுடன் கைத்தொழில் (தோட்டக் கலை, பேக்கிங், கூடை பின்னுதல்) பயிற்சிகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. சிகிச்சைக்குப் பிறகு குணமடையும் நோயாளிகள் வெளியுலகில் பணம் ஈட்டி, பொருளாதாரத் தன்னிறைவு பெறும் வாய்ப்பையும் இம்மருத்துவமனை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்திய உயர் சிகிச்சைகளின் மையம்:

  • கிழக்கிந்திய கம்பெனியால் 1664இல், ஆங்கிலேயப் படை வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் சிறிய மருத்துவமனை ஒன்று தொடங்கப்பட்டது. மருத்துவ விரிவாக் கங்களுக்கு உள்ளான இம்மருத்துவமனை, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சென்ட்ரலுக்கு மாற்றப்பட்டது. இதுவே ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையாகத் தற்போது மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி இம்மருத்துவமனையின் மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவப் பட்டம் பெற்றார்.
  • இந்தியாவில் உயர் சிகிச்சை மருத்துவத்தின் மையமாக உள்ள இந்த மருத்துவமனைக்கு வங்கதேசம், கானா, இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். தரமான சிகிச்சைகளை வழங்குவதில் பெயர் பெற்ற ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒரே நாளில் 130 அறுவைசிகிச்சைகளும், 113 டயாலிசிஸ் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

நவீன சென்னையின் அடையாளம்:

  • திமுக அரசின் ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலகமாகக் கட்டப்பட்ட கட்டிடம், 2011இல் நடந்த ஆட்சி மாற்றத்தில் அதிமுக அரசால் மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. நவீன சென்னையின் மருத்துவ அடையாளமாக மாறியிருக்கும் ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவ மனையில் இதயம், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
  • கடந்த பத்து ஆண்டுகளில் இதயம் தொடர்பான 24,000 சிகிச்சைகளை இம்மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. புதிய மருத்துவத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்திப் பார்ப்பதில் ஓமந்தூரார் மருத்துவமனை தவறுவதில்லை. அந்தவகையில் 2023இல் புற்றுநோய்க்கு ரோபாட்டிக் சிகிச்சை முறை தொடங்கிவைக்கப்பட்டது. 2018இல் இம்மருத்துவமனையில் தொடங்கப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
  • சென்னையின் மருத்துவ வரலாற்றில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளுக்கும் முக்கிய இடமுண்டு. அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மையுடன் ஓய்வறியாமல் இயங்கிவரும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் எந்நாளும் போற்றுதலுக் குரியவர்களே.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories