TNPSC Thervupettagam

மருத்துவர் - நோயாளி உறவு மனக்கசப்புகளைத் தவிர்ப்பது எப்படி?

December 13 , 2024 36 days 62 0

மருத்துவர் - நோயாளி உறவு மனக்கசப்புகளைத் தவிர்ப்பது எப்படி?

  • சமீபத்தில் இதய அறுவைசிகிச்சைக்குத் தேதி குறிக்கப்பட்ட ஓர் இளைஞரை மனநலப் பரிசோதனைக்கு அழைத்து வந்திருந்தனர். ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்பு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட இதய வால்வை மாற்றுவதற்காக, தற்போது அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
  • அறுவைசிகிச்சையின் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி சம்பந்தப்பட்ட துறை மருத்துவர் அந்த இளைஞரிடம் விளக்கியிருந்தார். கூடவே, பின்விளைவுகள் பற்றியும் சொல்லியிருந்தார். அதைக் கேட்டவுடன் அந்த இளைஞர் பதற்றத்துக்கு உள்ளானார். மரண பயத்தினால் சாப்பிடாமல், பேசாமல் இருந்துவந்தார். அதனால்தான் மனநல ஆலோசனைக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

மருத்​துவர்​-நோ​யாளி உறவுச்​ சிக்​கல்கள்:

  • இன்றைக்கு மருத்​துவர் – நோயாளி இடையேயான உறவு ஊசலாடும் நிலையில் இருப்​ப​தற்குப் பல காரணங்கள் இருந்​தா​லும், நோயாளி​களுக்கும் அவர்களின் உறவினர்​களுக்கும் மருத்​துவர்கள் மேல் உள்ள நம்பிக்கையற்ற தன்மை​யும், மருத்​துவர்​களுக்கு நோயாளிகள் தரப்பின் மேல் உள்ள பயமும் சந்தேக மனநிலை​யும்தான் அடிப்படைக் காரணம்.
  • உயிரைக் காப்பாற்றிக்​கொள்ள அறுவைசிகிச்​சைக்கு வந்தால், மரணபயத்தை ஏற்படுத்து​கிறார்கள் என்று நோயாளிகள் தரப்பும், அறுவைசிகிச்சை குறித்து விளக்கி ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து வாங்குவது தங்கள் சட்டம் சார்ந்த மருத்​துவக் கடமை என்று மருத்​துவர்​களும் நியாயப்​படுத்​தக்​கூடும்.
  • மருத்​துவமனை என்றாலே பயமுறுத்து​கிறார்கள் என்று நம்பிக்கையற்ற பார்வை​யுடன் நோயாளி​களும், அறுவைசிகிச்​சையில் ஏதேனும் எதிர்​பாராத பின்விளைவுகள் ஏற்பட்டால் நோயாளிகள் தரப்பினர் பிரச்சினை செய்து​விடு​வார்களோ என்ற சந்தேகத்​துடன் மருத்துவர்களும் இருப்​பதால் சிக்கல்கள் அதிகரித்து​வரு​கின்றன.

தவறு யாரிடம்?

  • இன்றைக்கு மருத்​துவத் துறை பல்வேறு சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளாக வளர்ச்சி அடைந்தது முதற்​கொண்டு, மேம்பட்ட பரிசோதனை முறைகள், நோய்கள் / சிகிச்​சைகள் குறித்த அதிக விழிப்பு​ணர்வு, புதிய நோய்வகைகள், மேம்பட்ட சிகிச்​சையின் தேவைகள், மருத்​துவச் சிகிச்​சைக்கு ஆகும் செலவு எனப் பல காரணங்​களினால் நோயாளி - மருத்​துவர் உறவில் சிக்கல்கள் அதிகரிக்​கின்றன. சிறிய பிரச்​சினை​களுக்குப் பெரிய பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுவது நோயாளி​களுக்கு அதிருப்தியை ஏற்படுத்து​கிறது.
  • அப்படிச் செய்யாமல்​போவதால் சில நோய்களைக் கண்டறியத் தவறி, பாதிக்​கப்பட்ட நோயாளி​களின் அதிருப்​தியைச் சம்பா​தித்து​விடுவோமோ என்று மருத்​துவர்கள் அஞ்சுகிறார்கள். இவை இருதரப்பு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்து​கின்றன. மருத்​துவர் கூறிய விளக்​கத்தை நம்பாமல் வலைதளங்​களில் படித்துத் தவறாகப் புரிந்​து​கொண்டு, சிகிச்சையை நம்பிக்கையற்ற தன்மையோடு அணுகும் நிலையும் ஒரு காரணம்.

சமூகத்தின் பங்கு:

  • எல்லா சிகிச்சைத் தோல்வி​களையும் மருத்​துவர்​களின் அலட்சி​ய​மாக​வும், நோயாளி​களின் அறியாமை​யினால் எழும் சில சந்தேகங்களை மருத்​துவரின் மீதான நம்பிக்கையற்ற தன்மை​யாகவும் சித்திரிப்​பதில் சமூக ஊடகங்கள், காட்சி / அச்சு ஊடகங்கள் முக்கியப் பங்கு​வகிக்​கின்றன.
  • சிகிச்சைக் குறைபாடுகள் அல்லது மருத்​துவர்கள் மீதான தாக்குதல் குறித்த காணொளி​களின் கீழ் பதிவிடப்​படும் பின்னூட்​டங்​களில் 90% க்கும் அதிகமாக வன்மத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. சமூகப் பொறுப்பு​ணர்​வுடன் செயல்​ப​டாமல் காழ்ப்பு​ணர்வை அள்ளித்​தெளிப்​ப​தனால் மருத்​துவர் – நோயாளி உறவில் ஏற்படும் விரிசல், நமது தலைமுறை​களுக்​குத்தான் பாதிப்பு என்பதைப் புரிந்​து​கொண்டு செயல்பட வேண்டும்.

சமநிலை தேவை:

  • மருத்துவச் சிகிச்​சையில் மனிதத் தவறுகள் வேறு, சிகிச்சைத் தோல்விகள் வேறு, அலட்சியம் வேறு என்பதை முதலில் புரிந்​து​கொள்ள வேண்டும். அலட்சி​ய​மாகச் செயல்பட்ட மருத்​துவர்கள் தண்டிக்​கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்​கருத்து இல்லை. மனிதத்​தவறுகளால் ஏற்படும் பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் இருப்​ப​தற்குச் சிகிச்சை முறைகள் ஆய்வின் மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டியதும் அவசியம். எல்லா சிகிச்சை முறைகளின் பலன்களும் சில வரம்பு​களுக்கு உள்பட்டவை; சிகிச்சைத் தோல்விகள் குறிப்​பிட்ட அளவில் இருக்​கத்தான் செய்யும் என்பது உலகளாவிய அளவில் ஏற்றுக்​கொள்​ளப்​பட்​டது​தான்.
  • இந்த அணுகு​முறையில் சமநிலை மாறும்போது அதிகாரி​களால் நடத்தப்​படும் தணிக்கை / ஆய்வுக்​கூட்​டங்கள் மருத்​துவர்​களைக் குற்றஞ்​சாட்டிப் பாதிக்​கப்பட்ட நபர்களிடம் காட்டிக்​கொடுக்கும் பஞ்சா​யத்​துபோல் மாறிவிடு​கின்றன. தவறாகச் சித்திரிக்​கப்பட்ட அல்லது புரிந்​து​கொள்​ளப்பட்ட சிகிச்சைத் தோல்விகள் மருத்​துவர்கள் மீதான வன்முறையாக மாறியுள்ளன. இப்படி நடந்த சில சம்பவங்​கள்தான் சமீபத்தில் மருத்​துவர்​களைப் போராட்​டக்​களத்தில் தள்ளின.
  • ‘நம்மைக் கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்துதான் நோயாளிகள் சிகிச்​சைக்கு வருகின்​றனர்; நாம் தனிப்பட்ட ஒரு நபருக்கு மட்டும் சிகிச்சை அளிக்க​வில்லை, அவரது உணர்வு, எதிர்​பார்ப்பு, அவரைச் சார்ந்​திருக்கும் குடும்பம் எனப் பல பரிமாணங்களை அணுகு​கிறோம்’ என்பதை மருத்​துவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல, கடவுளுக்கு அடுத்த இடத்தில் மருத்​துவரை வைத்திருக்​கிறோம் என்பதைப் பேச்சில் மட்டுமல்​லாது, செயலிலும் வெளிப்​படுத்துவது நோயாளிகள் தரப்பினரின் கடமை.

பணிப் பாதுகாப்பு:

  • சிறிய தனியார் மருத்​துவ​மனை​களிலும் அரசு மருத்​துவ​மனை​களிலும் மருத்​துவர்கள் சட்டச் சிக்கல்​களுடன் வன்முறை​களையும் எதிர்​கொள்​கின்​றனர். குறிப்பாக அவசரப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, பிரசவப் பிரிவு​களில் இது அதிகம். மருத்​துவக் கல்லூரிகள், மாவட்டத் தலைமை மருத்​துவ​மனைகள் தவிர மற்ற எல்லா மருத்​துவ​மனை​களிலும் இரவுப் பணியில் ஒரு மருத்​துவரும், ஒரு செவிலியரும் மட்டுமே பணியாற்றி வருகின்​றனர். மதுபோதையில் அத்து​மீறும் நோயாளிகள் / உறவினர்​களால் தினமும் பாதிக்​கப்​படும் இரவுப் பணி மருத்​துவர்கள் குறிப்​பாகப் பெண் மருத்​துவர்கள் / செவிலியர்​களின் நிலை சொல்லி மாளாதது.

நிர்வாகச் சீர்திருத்​தங்கள்:

  • சிகிச்சை / சிகிச்சை சார்ந்த சந்தேகங்​களுக்கு மட்டுமே மருத்​துவரை அணுகும் நிலை இருக்க வேண்டும். பல தொழில்முறை சாராத பிரச்​சினை​களில் மருத்​துவர்கள் தலையிடும் நிலை ஏற்படும்​போது, அவர்கள் மன உளைச்​சலுக்கு ஆளாகின்​றனர். அது நோயாளி​களுக்கு அளிக்​கப்​படும் சிகிச்​சை​யிலும் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.
  • தேவையற்ற நிர்வாகச் சுமைகள், மருத்​துவ​மனைக் கட்டிட மேலாண்மை, அரசியல் அழுத்​தங்கள், பணிச்​சுமை, கீழ்நிலை ஊழியர்கள் பற்றாக்​குறை, அடிப்படை வசதிகளற்ற நிலை, ஊதிய முரண்​பாடுகள் போன்றவை நோயாளிகள் மீதான மருத்​துவரின் அணுகு​முறையை ஆரோக்​கியமற்றதாக மாற்றி​விடக்​கூடும்.
  • மருந்​துகள் நோயை மட்டுமே குணப்​படுத்​தும்; ஆனால் மருத்​துவர்கள் மட்டுமே நோயாளி​களையும் குணப்​படுத்த முடியும். இந்த உறவின் மூலம் நோய் அறிகுறிகளில் முன்னேற்றம் ஏற்படும் ‘பிளசிபோ’ (Placebo) என்கிற விளைவு நிரூபிக்​கப்பட்ட ஒன்று. இந்த உறவின் இடைவெளியைக் குறைக்க, மருத்​துவ​மனை​களில் சிகிச்சை சாராத சந்தேகங்கள், நடைமுறைகள், சம்பிர​தா​யங்​களில் நோயாளி​களுக்கு உதவ ஆலோசகர்கள், வழிகாட்​டிகள் நியமிக்​கப்பட வேண்டும்.
  • இதேபோல் ஆய்வறிக்கைகள், புள்ளி​யியல் விவரங்கள் உள்படப் பல ஆவணப்​படுத்தும் வேலைகளுக்கு மருத்​துவர்கள் பயன்படுத்​தப்​படு​வதைக் குறைக்கும் வகையில் தனி ஊழியர்கள் நியமிக்​கப்பட வேண்டும். செயல்​திறன் குறித்த அறிக்கை​களின் (Performance report) மீதான ஆய்வுக்​கூட்​டங்கள், மருத்​துவச் சேவையின் தரத்தை அளவிடும் அளவுகோலாக இருக்க வேண்டுமே தவிர, வழங்கப்​படும் சேவை எண்ணிக்கையின் அளவை அதிகப்​படுத்திக் காட்ட வேண்டும் என்று அரசு மருத்​துவர்களை நிர்ப்​பந்​திக்கும் கருவியாக மாறிவிடக் கூடாது.
  • அரசு மருத்​துவர்​களின் வேலைத் திறனைப் பாதிக்கும் வகையிலான நடைமுறைச் சாத்தி​யமற்ற புள்ளி​யியல் இலக்குகளை அடைய நடத்தப்​படும் உயர்மட்ட ஆய்வுக்​கூட்​டங்கள் தவிர்க்​கப்பட வேண்டும். மருத்​துவச் சேவைகளின் குறைகள் களையப்பட வேண்டும். அதேவேளை​யில், மருத்​துவச் சேவைகளின் நிறைகளைப் பிரச்​சா​ரத்தின் மூலம் மக்​களிடம் எடுத்​துச்​செல்வதே தனிநபர் ​முதல் அர​சாங்கம் வரை செய்ய வேண்டிய ஆரோக்​கியமான அணுகுமுறையாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories