TNPSC Thervupettagam

மருத்துவ வளர்ச்சியும் சவால்களும்!

December 16 , 2024 25 days 98 0

மருத்துவ வளர்ச்சியும் சவால்களும்!

  • நவீன மருத்துவம் நகரும் தடங்கள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டே வருகின்றன. 2023இல் மரபணு மாற்றுச் சிகிச்சை முறைகள் மகத்துவம் பெற்றன என்றால், 2024இல் ஸ்டெம் செல் சிகிச்சைகள் வீறுகொண்டு எழுந்துள்ளன.
  • இதுவரை விலங்கினங்களில் மட்டுமே பெரிதும் மேற்கொள்ளப்பட்டு வந்த இவ்வகை சிகிச்சை முறைகளை, மனிதரிடமும் மேற்கொள்ள ஆய்வாளர்கள் முனைந்தனர். அதன் முக்கிய வெற்றியாக, சீனாவில் முதலாம் வகைச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது நிரம்பிய பெண்ணுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் நிரந்தரத் தீர்வைக் கொடுத்தனர்.

செயற்கை நுண்ணறிவு:

  • செயற்கை நுண்ணறிவும் இயந்திரக் கற்றலும் மருத்​துவத் துறையை மறுவடிவ​மைப்பு செய்யக்​கூடிய அளவுக்கு வளர்ந்​திருக்​கின்றன. இவை மனித நோய்க்​கணிப்பை எளிதாக்கு​கின்றன; விரைவான, துல்லியமான முடிவுகளை வழங்கு​கின்றன; சிகிச்​சையைத் துல்லிய​மாகத் தேர்ந்​தெடுப்​ப​திலும் மருத்​துவர்​களுக்கு உதவுகின்றன. சிகிச்​சைக்கான காத்திருப்புக் காலமும், மருத்துவ மனித வளமும் இவற்றால் குறைந்​து ​வரு​கின்றன. மொத்தத்​தில், நோயாளி​களின் உடல்நலப் பாதுகாப்பை இவை குறுகிய காலத்தில் பெரிதும் மேம்படுத்து​கின்றன.

புதுமை புகுத்தும் 3-டி அச்சு:

  • இப்போது ‘முப்​பரிமாண அச்சுத் தொழில்​நுட்பம்’ (3D printing technology) மருத்​துவத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்​திவரு​கிறது. பயனாளிக்குத் தேவையான உள்பதி​யங்கள் (Implants), செயற்கை உறுப்புகள் (Prosthetics), உயிரி உறுப்புகள் (Bionic Organs) ஆகியவற்றை உருவாக்குவதை இது சாத்தி​ய​மாக்கி​யுள்ளது. உயிர்​காக்கும் சிகிச்​சைகள் தேவைப்​படும் நோயாளி​களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்​கிறது.
  • தனிப்​பட்​ட​வரின் தேவைகளுக்கு ஏற்றவாறு உறுப்பு​களைச் செயற்​கையாக வடிவமைக்​கவும் இது உதவுகிறது. உதாரணமாக, தீக்கா​யத்தால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட தோல் விரைவாகவும் முழுதாகவும் தீர்வு தருகிறது. பட்டாசு விபத்துகள் மலிந்​துள்ள நாட்டினருக்கு இது பெரிதும் பலனளிக்​கும்; உறுப்பு மாற்று அறுவைச்​சிகிச்​சையையும் அதற்கான காத்திருப்புக் காலத்​தையும் குறைத்து​விடும்.

ரோபாட் அறுவைச்​சிகிச்சை:

  • அறுவைச்​சிகிச்​சையின் துல்லி​யத்தை மேம்படுத்துவதன் மூலம் பயனாளிக்கு வலி மேலாண்மை சிகிச்​சைகளும் அவற்றுக்கான தேவைகளும் குறைகின்றன. அந்த வகையில் மருத்​துவத் துறையில் புகுந்​துள்ள ரோபாட் அறுவைசிகிச்சை முறை மிக முக்கிய​மானது.
  • குறிப்பாக, பொது அறுவைசிகிச்​சை​யின்போது மேற்கொள்​ளப்​படும் உடல் கீறல்களை ரோபாட்கள் பெரிதும் குறைத்து​விடு​கின்றன; சிகிச்சைச் செயல்​பாடு​களையும் எளிதாக்​கி​விடு​கின்றன; மருத்​துவ​மனையில் நோயாளிகள் அனுமதிக்​கப்​படும் காலத்தைக் குறைத்து​விடு​கின்றன. பாதிப்​பிலிருந்து மீண்ட​வர்​களுக்கு ஊனமோ, உறுப்புக் குறைபாடோ, நிலையான பாதிப்போ ஏற்படு​வ​தில்லை. இவர்களின் மறுவாழ்வு எப்போதும்போல் தரமாகவும் இருக்​கிறது.

‘அணிகலன்’ தொழில்​நுட்பம்!

  • உடலில் நகைகள் அணிவதுபோல் அணியக்​கூடிய தொழில்​நுட்பக் கருவி​களின் (Wearable technology) பயன்பாடும் தற்போது அதிகரித்து​வரு​கிறது. இந்த நவீனக் கருவிகள் இதயத் துடிப்பு, ரத்தச் சர்க்கரை அளவுகள், உறக்கம் போன்ற​வற்றைக் கண்காணிக்​கின்றன. இவை சுகாதார மேலாண்​மைக்கான தரவுகளை உடனுக்​குடன் மருத்​துவர்​களுக்கு வழங்கும் சிறு ஆய்வகங்களாகச் செயல்​படு​கின்றன.
  • பயனாளிகள் மருத்​துவ​மனையில் அனுமதிக்​கப்​ப​டாமல், வெளியில் இருந்​து​கொண்டே மேற்கொள்​ளப்​படும் இந்தத் தொடர்ச்​சியான கண்காணிப்பு முறைகள், மனிதருக்கு ஏற்படும் ஆரோக்​கியப் பிரச்​சினைகளை முன்கூட்டியே கண்டறிய உதவுகின்றன; நோய்த் தடுப்பு நடைமுறை​களையும் எளிதாக்கு​கின்றன.

சவால்கள் என்னென்ன?

  • ‘நவீனத் தொழில்​நுட்​பத்தால் மருத்​துவத் துறை மேம்பட்டு​வரும் சகாப்தம் இது’ என்பதைச் சுகாதாரப் பாதுகாப்பின் அற்புதமான இந்த முன்னேற்​றங்கள் காட்டு​கின்றன. மருத்​துவத் துறை தொழில்​நுட்ப ரீதியில் வேகமாக வளர்ச்சி அடைவதால், திறமையான நிபுணர்​களுக்கான தேவையும் அதிகரிக்​கிறது.
  • இந்த நவீனக் கருவி​களின் செயல்​பாடு​களுக்குத் திறமையான மேலாண்மை மிகவும் முக்கிய​மானது. காரணம், மருத்​துவத் துறையானது மனித உயிர் தொடர்​பானது. அரசின் கொள்கை வகுப்​பாளர்கள் இதைக் கருத்​தில்​கொண்டு, இதற்கான புதிய திட்டங்களை வரையறுக்க வேண்டும்.

‘எதிர்​உயி​ரிக்கு எதிர்ப்​பாற்​றல்’!

  • உலகளவில் கோவிட் -19 பெருந்​தொற்றைக் கட்டுப்​படுத்​தி​விட்​டாலும், காசநோய், மலேரியா, டெங்கு போன்ற வழக்கமான தொற்று​நோய்​களைக் கட்டுப்​படுத்துவது பெரிய சவாலாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ‘எதிர்​உயி​ரிக்கு எதிர்ப்​பாற்றல்’ (Antimicrobial Resistance - AMR) என அறியப்​பட்​டுள்ளது.
  • உலகில் ஆண்டு​தோறும் 50 லட்சம் பேர் இதன் காரணமாகவே உயிரிழக்​கின்​றனர். இந்த இறப்பு​களில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் மட்டும் நிகழ்​கிறது. இந்தப் பிரச்​சினையைத் தீர்க்க வேண்டு​மா​னால், பயனுள்ள புதிய சிகிச்​சைகளை உருவாக்கி, மக்கள் அவற்றை எளிதில் அணுகுவதை உறுதிப்​படுத்து​வ​தாகும்.
  • மேலும், நாட்டில் எதிர்​உயிரி மருந்​துகளைப் பயன்படுத்தும் வழிகளில் குறிப்பாக, மக்கள் சுயமருத்​துவம் மேற்கொள்ளும் போக்கு​களில், புதிய சட்ட திட்டங்கள் கொண்டு​வரப்பட வேண்டும். அவற்றைப் பொதுச் சமூகமும் ஏற்றுக்​கொள்ள முன்வர வேண்டும். சமீபத்தில் கேரளம் இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்​டிருப்பதை இங்கு நினைவு​கூரலாம்.
  • மேலும், உலகளாவிய ஆன்டிப​யாடிக் ஆராய்ச்சி - மேம்பாட்டுக் கூட்டமைப்​பானது (The Global Antibiotic Research & Development Partnership - GARDP) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்திய மருந்து நிறுவனங்கள் - உற்பத்​தி​யாளர்​களுடன் கூட்டு சேர்ந்து இந்தியா​வுக்குள் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு​வரு​கிறது.

முதியோர் நலப் பாதிப்பு:

  • தற்போதுள்ள இந்திய மக்கள்​தொகையில் 8.6% பேர் முதிய​வர்கள் (சுமார் 13.5 கோடி பேர்). 2050இல் இது 40% ஆக அதிகரிக்கும் என்கிறது ஒரு தேசியப் புள்ளி​விவரம். இவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்​களின் சுமையும், சிகிச்சைச் செலவு​களும் அதிகரிக்​கின்றன. ஏறத்தாழ 75% குடும்​பங்கள் தங்கள் சொந்தப் பணத்தில்தான் சிகிச்சை எடுத்​துக்​கொள்​கின்​றனர்.
  • நிதி ஆயோக் அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கை​யின்படி, அதிகரிக்கும் சுகாதாரச் செலவினங்​களால் ஆண்டு​தோறும் 7% மக்கள் (சுமார் 10 கோடி பேர்) வறுமைக்​கோட்டுக்குக் கீழே தள்ளப்​படு​கின்​றனர். இதனால் சிகிச்சை முழுமை பெறாமல் உயிரிழப்புகள் ஏற்படு​கின்றன.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்​ட​வர்​களுக்கு ‘ஏபி பிஎம் – ஜெய்’ எனும் புதிய மருத்​துவக் காப்பீடு வழங்கு​வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இது முதியோரின் ஆரோக்​கியப் பிரச்​சினைகளை முழுவது​மாகத் தீர்க்கப் போவதில்லை என்றும் கருதப்​படு​கிறது.
  • நோய் வரவிடாமல் தடுக்கும் முயற்சி​கள்தான் அரசின் மருத்​துவச் செலவு​களைக் குறைக்​கும். ஆகவே, முதியோரிடம் காணப்​படும் நோய்கள் குறித்த விழிப்பு​ணர்வை மக்களிடம் அதிகப்​படுத்​த​வும், இவற்றை ஆரம்பநிலை​யிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்​க​வும், தடுப்​ப​தற்கான வழிகளைக் காட்ட​வும், நாட்டில் ஆரம்பச் சுகாதார நிலையங்​களின் மருத்​துவக் கட்டமைப்பு​களைச் சீர்ப்​படுத்த வேண்டியது அவசிய​மாகிறது.

பெருகி வரும் மனநலப் பாதிப்பு

  • கடந்த சில ஆண்டு​களில் மக்களின் மனநலமும் உலகளவில் கவலைக்​குரியதாக மாறியுள்ளது. கோவிட் – 19 தொற்று​நோயால் தூண்டப்பட்ட அழுத்​தங்கள், பெருகிவரும் சமூகத் தனிமை, பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை மனநலப் பிரச்​சினைகளை மக்களிடம் அதிகப்​படுத்​தி​யுள்ளன.
  • மனநலத்தின் அவசியத்தைப் பொதுவெளியில் மக்களுக்குப் புரிய​வைப்பது, பொது ஆரோக்​கி​யத்தில் மனநலம் ஏற்படுத்துகிற பாதிப்பு​களைத் தீர்ப்பது, மனநலச் சுகாதாரச் சேவைகளையும் அவற்றுடனான அணுகு​முறை​களையும் அதிகரிப்பது, மனநலத்தை முதன்மைச் சுகாதாரப் பராமரிப்பில் ஒருங்​கிணைப்பது ஆகியவை இன்றைய அவசரத் தேவைகள்.

தேவை: கூட்டு அணுகு​முறை!

  • 2025இல் உலகளாவிய சுகாதாரச் சவால்​களைச் சமாளிப்​ப​தற்கு ஒரு கூட்டு அணுகுமுறை தேவைப்​படு​கிறது. சுகாதார அமைப்புகளை வலுப்​படுத்​த​வும், சுகாதாரச் சமத்து​வத்தை மேம்படுத்​த​வும் அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்குத் தேசிய அளவில், சுகாதா​ரத்​துக்கான அரசாங்கச் செலவினம், மொத்த உள்​நாட்டு உற்​பத்​தியில் (GDP) தற்​போதுள்ள 2 சதவீதத்​திலிருந்து குறைந்​த​பட்சம்​ 5 சதவீதமாக அதிகரிக்​கப்பட வேண்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories